ஆரியம், பார்ப்பனீயம், பிராமணியம் வேறு வேறா?


பார்ப்பனீயம் வேறு, பிராமணியம் வேறு, ஆரியம் வேறு.  இந்த வேற்றுமைகளை அறியாது, பெரியார் குழம்பிச் செயல்பட்டதாலே தமிழர்க்குப் பெரிய கேடு உண்டாயிற்று. தான் நடத்திய திராவிட அரசியலுக்கு ஆரியப் பூச்சாண்டி காட்டினார்... என்று தன் அதிமேதாவிலாசத்தைக் காட்டி, பெரியாரைக் குற்றஞ்சாட்டுகிறார் இந்த அரைவேக்காடு குணா.
முதலில் இம்மூன்றும் குறித்த குணாவின் விளக்கத்தைப் பார்ப்போம், அதன்பின் இதற்கான பதிலையும் பார்ப்போம்.
குணா கூறும் விளக்கம் :
பிராமணியம் : வள்ளுவமும் அதன் எதிர்மறையான பிராமணியமும் தெற்கில் தோன்றியவை. தெற்கில் தோன்றி வடக்கு நோக்கி பரக்க நெடுக்கப் பயணம் போன ஜாதி நெறிக் கொள்கையே பிராமணியம்.
ஆரியம் : கலப்பினக் கொள்கையாகிய ஆரியம் என்னும் நிறவெறிக் கொள்கை வடக்கில் தோன்றி தெற்கே வந்தது.
- என்று பிராமணியம், ஆரியம் ஆகிய இரண்டிற்கும் விளக்கம் கொடுத்த குணா பார்ப்பனீயத்திற்கு விளக்கம் கொடுக்கவில்லை. என்றாலும், இவருடைய வேறொரு நூலில் இதற்கான விளக்கம் அவர் கூறியுள்ளார். அதை நான் இங்கு எடுத்துக்காட்டி விளக்க விரும்புகிறேன்.
குணா எழுதிய இன்னொரு நூல் வள்ளுவப் பார்ப்பாரியம் என்பது. அந்நூலின் 91ஆம் பக்கத்தில் பார்ப்பாரியம் என்பதற்கு இவர் ஒரு விளக்கம் தருகிறார். அது எந்த வரலாற்றுச் சான்றும் இல்லாமல் இவரது கற்பனைகளையெல்லாம் கசக்கி ஒரு கருத்து கூறியுள்ளார்.
அது என்னவென்றால், வள்ளுவம் என்பதன் மறுபெயர்தான் பார்ப்பாரியம் என்கிறார். தொல்காப்பியத்திற்குப் பின் இருந்த பாப்பானுக்குப் பன்முக ஆளுமை இருந்தது. ஒரு பக்கம் கேள்வி மறைகளை யாத்தவனும் கற்றவனும் ஓதுபவனுமான மறையோன். மறுபக்கம் கணியன் (நிமித்தகன்) இன்னொரு பக்கம் பாணன், மற்றொரு பக்கம் புலவன், மற்றொரு பக்கம் அய்ம்புலன் அடக்கி இரு பிறப்பாளனான அந்தணன், இன்னொரு முகப்பான வள்ளுவன் (சாக்கியன்) என்னும் கருமத்தலைவன், மற்றொரு பக்கம் அரசகுருவான ஆசான் இன்னொரு பக்கம் பெருங்கணியன் எனப் பன்முகங்கொண்டவர் பார்ப்பனர். இந்தப் பார்ப்பனர்களின் ஒட்டுமொத்த வாழ்வு பார்ப்பனியம் என்று ஒரு விளக்கத்தை வைக்கிறார்.
ஒரு மூளைக் கோளாறு உள்ள மூடனைத் தவிர வேறு யாரும் இப்படி உளறமாட்டான். புலவன், கணியன், அந்தணன், வள்ளுவன், ஆசான், பார்ப்பன், மறையோர் என்ற மக்கட் பிரிவு அக்காலத்து இருந்தது உண்மை. ஆனால் இந்த ஆறும் பார்ப்பானைக் குறிக்கும் என்ற சான்று எங்கும் இல்லை. இது குணாவின் கற்பனை கதம்பம். ஆரியப் பார்ப்பானின் அசல் நரித்தனங்கள் எல்லாம் இவரிடம் உள்ளது.
இந்திய மண்ணில் இருந்த இறை நம்பிக்கைகளையெல்லாம், புராணக் கதைகள் மூலம் தொடர்புபடுத்தி இந்துமதம் என்ற ஒன்றை ஆரியப் பார்ப்பனர்கள் உண்டாக்கியதுபோல, பார்ப்பனீயம் என்பதை குணா புதிதாக உருவாக்கிக் காட்டுகிறார். உருவாக்கிக் காட்டுவதோடு இந்தப் பார்ப்பனீயம் பெரியாருக்குப் புரியாமல் போனதால்தான் தவறான முடிவுகளை எடுத்துத் தமிழர்கள் வீழக் காரணமானார் என்று வேறு குற்றஞ்சாட்டுகிறார்.
இந்தக் கருத்துருவாக்கம்கூட இவரது மூளையில் சுயமாய் உதித்ததல்ல. தேவநேயப் பாவாணர், ஒப்பியன் மொழி நூல் என்ற தனது நூலில் எழுப்பியுள்ள ஒரு அய்யப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதாகும். பாவாணரின் ஊகத்தை குணா உண்மை யாகக் கொள்கிறார்.
ஆரியம், பிராமணியம், பார்ப்பனீயம் என்பன குறித்து குணா கூறுவது ஏதும் சரியும் அல்ல; உண்மையும் அல்ல.அதற்கான சான்றுகளும் இல்லை.
ஆரியர் என்பது ஓர் இனம். ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியிலிருந்து ஆடு மாடு ஓட்டிக் கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள். அவர்கள் பின்பற்றிய கொள்கைகள் ஆரியம். அவர்கள் மொழி சமஸ்கிருதம்.
திராவிடர் (தமிழர்) என்பது ஓர் இனம். இவர்கள் இந்தியா மட்டும் அல்லாது, எகிப்தில் தொடங்கி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்ற பகுதிகளையெல்லாம் உள்ளடக்கிய  நிலப்பகுதியோடு கடலில் மூழ்கிய  குமரிக் கண்டத்தையும் சேர்த்த ஒரு பெரும் நிலப்பரப்பைத்தாயகமாகக் கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கை நெறி, திராவிடம். இவர்கள் மொழி தமிழ்.
ஆரியர்கள் நுழைவதற்கு முன் தமிழர்களைத் தவிர வேறு யாரும் இந்த நிலப்பகுதியில் இல்லை. வேறு மொழியும் இந்த நிலப்பகுதியில் இல்லை. அதனால்தான் மேற்கண்ட நிலப்பகுதி முழுவதும், ஊர் என்று முடியும் பெயர்கள் பரவிக் காணப் படுகின்றன.
அஸ்ஸாமில் ராங்கியா மாவட்டத்தில் ஓர் ஊரின் பெயரே, தமிழ்ப்பூர். இப்படி பல ஊர்கள் பாகிஸ்தானிலும் உண்டு, ஆப்கானிஸ்தானிலும் உண்டு, மராட்டியத்திலும் உண்டு. மற்ற மாநிலங்களிலும் உண்டு.
எகிப்தில் உள்ள பெரமிடு என்பதே தூயத் தமிழ்ச்சொல். அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்; ஆண்டவர்கள் தமிழர்கள். தமிழ்மன்னர்களின் இடுகாடுதான் அந்தப் பெரமிடுகள். இந்நூலின் இறுதியில் தனியே இது விளக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு சூடும், சுரணையும், விழிப்பும் வரவேண்டும் என்பதற்காக.
இன்றைக்கு உத்திரபிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஒரிசா, அரியானா என்று வட மாநிலங்களுக்குச் சென்று கிராமப்புற மக்களைப் பாருங்கள். அவர்கள் பேசுவது இந்தியானாலும் அவர்களெல்லாம் சுத்த திராவிடர்கள். குறிப்பாக உத்திரபிரதேச யாதவர்கள் அனைவரும் திராவிடர்கள்!
பின் எப்படி இந்தி பேசுகின்றனர்?
இந்தி என்ற ஒரு மொழியே அக்காலத்தில் இல்லை. அது பின்னால் உருவானது. இளங்கோ அடிகள் காலத்தில் தமிழ்ப் பேசிய சேர நாட்டு மக்கள் இன்று மலையாளம் பேசும் மக்களாய் எப்படி மாறினர்.
தமிழரோடு, ஆரியர் கலந்தபோது தமிழோடு ஆரிய சமஸ்கிருதம் கலந்து மலையாளம் உருவாயிற்று. வட மாநிலங்களில் தமிழ்+சமஸ்கிருதம் + உருது + பாரசீகம் + சீனம் என்று மாநிலத்திற்கு மாநிலம் மொழிகள் கலந்து ஹிந்தி, பஞ்சாபி, வங்காளி, அஸ்ஸாமி, ஒரியா, மராட்டி, குஜராத்தி என்று பல மொழிகள் உருவாயின.
எடுத்துக்காட்டாக, ஹிந்தியில் போ என்பதற்கு செலோ என்பர். செல்லு என்ற தமிழ்ச் சொல் திரிந்தே செலோ என்ற ஹிந்தி சொல் வந்தது. இப்படித்தான் ஒவ்வொன்றும்.
எனவே, முதன்மையான இனம் தமிழர் (திராவிடர்) முதன்மையான மொழி தமிழ் என்ற நிலை பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் இருந்தது. ஆரியர், அரேபியர், மங்கோலியர்சீனர், பாரசீகர் என்று காலம் காலமாய் இனக் கலப்பும் மொழிக் கலப்பும் ஏற்பட்டே இன்றைய நிலை வந்துள்ளது. முதலில் இந்த உண்மைகளை உள்வாங்கிக் கொண்டு ஆரியர், பிராமணர், பார்ப்பனர் என்ற விளக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆரியர்: ஆரியர் என்பதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. காரணம் அது ஒரு இனத்தின் பெயர். அவர்கள் மத்திய ஆசிய பகுதியினின்று இந்தியாவிற்குள் வந்தவர்கள்.
பிராமணர்: அயல்நாட்டிலிருந்து நுழைந்த சிறு கூட்டமான ஆரியர், மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களைச் சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும் என்று எண்ணி பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு, வர்ண கோட்பாட்டை உருவாக்கினர். வர்ண கோட்பாட்டிற்குக் கடவுள்களை உருவாக்கினர். அக்கடவுள்களில் பிரம்மா என்பவர் ஒருவர். அந்தப் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் நாங்கள். அதனால்தான் ஆள் உயரமாய், சிவப்பாய் இருக்கிறோம்.
பிரம்மாவின் முகத்தில் பிறந்ததால் நாங்கள் பிராமணர்கள் என்றனர்.
ஆரியர் அல்லாத தமிழர் மற்றும் இனக் கலப்பால் உருவான மக்களை, செய்து வந்த தொழிலின் அடிப்படையில் வர்ணப் பிரிவாக்கினர்.
ஆட்சியாளர்களைப் பார்த்து, நீங்கள் பிரம்மாவின் தோளில் பிறந்தவர்கள். எனவே, நீங்கள் எங்களுக்கு அடுத்த நிலை. நீங்கள் ஷத்திரியர் என்றனர்.
வணிகத் தொழிலில் ஈடுபட்டவர்களைப் பார்த்து, நீங்கள் பிரம்மாவின் இடுப்பில் பிறந்தவர்கள். நீங்கள் அடுத்த நிலை. நீங்கள் வைசியர் என்றனர்.
அடுத்த நிலையில் உடலுழைப்பு வேலைகளைச் செய்கின்ற மக்களைப் பார்த்து நீங்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள்.
எனவே, நீங்கள் கீழ்ஜாதி. அதாவது சூத்திரர்கள் என்றனர். ஆக, ஆரியர் அல்லாத மக்களைக் கூறு போட்டு ஒற்றுமையைக் குலைத்தனர். இவற்றை நிலைநிறுத்த சாஸ்திரங்களை உருவாக்கினர்; சடங்குகளை உருவாக்கினர்.
சரி, மற்ற மூன்று பிரிவினருக்கும் தொழில் உண்டு, வேலை உண்டு, ஆரியர்களுக்கு என்ன வேலை? தாங்கள் உருவாக்கிய கடவுளையும், சாஸ்திரங்களையும் காப்பாற்றுவதும், பராமரிப்பதும், சடங்குகளை நிறைவேற்றுவதும் என்றனர்.
ஆக, பிராமணன் என்பதும் பிராமணியம் என்பதும் ஆரியர்கள் தங்கள் உயர்விற்கும், பாதுகாப்பிற்கும், பிழைப்பிற்கும் உருவாக்கிக் கொண்டவை. எனவே, ஆரியர் என்றாலும், பிராமணர் என்றாலும் ஒன்றுதான். ஆரியம் என்றாலும் பிராமணியம் என்றாலும் ஒன்றுதான்.
அடுத்துப் பார்ப்பனர் என்றால் யார்? பார்ப்பனீயம் என்றால் என்ன? நுட்பமாகப் பார்ப்போம்.
பார்ப்பு  என்ற சொல்லுக்கு இளமை என்று பொருள். இளங்குழந்தைகளை பாப்பா என்று அழைக்கிறோம். அது பார்ப்பா என்பதன் மரூ ஆகும்.
பார்ப்பு = பார்ப்பா = பாப்பா என்றானது (விளிச் சொல்லாக) கோர்ப்பு = என்பது கோப்பு என்றானதுபோல பார்ப்பா என்பது பாப்பா ஆனது.
பார்ப்புடை மந்தி மலையிறந்தோரே                                            (குறுந்  276)
தன் பார்ப்புத்தின்னும் அன்பின் முதலை      (ஐங்  41)
என்ற சங்க நூல் வரிகளும் பார்ப்பு என்பது இளமை என்பதை உறுதி செய்கின்றன.
தமிழ் மன்னர்களின் அரண்மனையிலும், பெருஞ்செல்வர்களின் வீடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு வேண்டிய உதவிகளை, தோழமையை, அறிவுரைகளைச் செய்து வந்தவர்கள் பார்ப்பனர் எனப்பட்டனர். இளையரின் தோழர் என்னும் பொருளில் பார்ப்பனர் (பாங்கர் என்று பொருள்) என்று அழைக்கப்பட்டனர்.
ஆக, உயர்குடியில் இளம் பருவத்தில் உள்ளவர்க்கு உதவியாளாய் பணி செய்த இளைஞர்க்குப் பார்ப்பனர் என்று பெயர். எனவே, பார்ப்பு என்பது ஒரு பணி. அத்தொழிலைச் செய்தவர் பார்ப்பனர் ஆயினர்.
எழுத்து வேலை செய்பவர் எழுத்தர்போல பார்ப்பு வேலை செய்தவர் பார்ப்பார் (பார்ப்பனர்) ஆயினர்.
தொடக்கக் காலத்தில் இப்பார்ப்புத் தொழிலைச் செய்தவர்கள் முழுக்க முழுக்கத் தமிழர்கள். எனவே, தொடக்கத்தில் பார்ப்பனர் என்ற சொல், பார்ப்புத் தொழில் (தோழன் தொழில்) செய்த தமிழ் இளைஞர்களைக் குறித்ததாய் இருந்தது.
ஆனால், நாளடைவில் இத்தொழிலை மெல்ல மெல்ல ஆரியர் கைப்பற்றினர்.
தொடக்கக் காலத்தில் இந்தியா முழுவதும், ஏன் நான் முன்னர் சொன்னதுபோல பல நாடுகளிலும் பரவி வாழ்ந்த தமிழர்கள் ஆரியர் உள்ளிட்ட அயலவர் நுழைய நுழைய தென்னிந்திய பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் ஆரியர்களோடு மொழியாலும் உடலாலும் கலந்தனர். எனவே, வட இந்தியப் பகுதிகளில் கிராமப்புறங்களைத் தவிர நகரப்புறங்களில் கலப்பின மக்கள் உருவாயினர். கலப்பு மொழிகளும் உருவாயின.
அயலவர் நுழைவு முழுக்க வடமேற்கு இந்தியப் பகுதியில் அதிகம் இருந்ததால், கலப்பும் அங்கே அதிகமாய் இருந்தது. தென்மேற்கு இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் தென்னிந்தியப் பகுதியை உடனே எட்ட முடியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வட இந்தியாவிலே வாழ்ந்தனர். அதனால், தென்னிந்திய பகுதியில் கலப்பில்லாத தமிழர்கள், கலப்பில்லா தமிழ்மொழி 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.
இந்நிலையில் வடபுலத்தில் வாழ்ந்த ஆரியர்களுள் சிலர் காடுகள் வழியே தமிழகப் பகுதியுள் நுழைந்தனர்.
அவ்வாறு அவர்கள் நுழையும்போது அவர்கள் சாப்பாட்டிற்குப் பிச்சைதான் எடுத்தனர். அவர்களை யார் என தமிழ் மக்கள் கேட்டபோது தங்களைப் பரதேசி என்றனர். பரதேசி என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வெளிநாட்டான் என்பது பொருள்.
ஆரியர்கள் தமிழகப் பகுதிக்குள் அதாவது கேரளா கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிக்குள் காடு வழியே தமிழகத்திற்குள் நுழைந்தபோது தமிழகத்தின் நிலையை முதலில் காண வேண்டும்.
ஆரியர்கள் ஒரே முறையில் கூட்டமாய் தமிழர் பகுதிக்குள் வரவில்லை. சிறு சிறு கூட்டமாய் கட்டங் கட்டமாய் வந்தனர். தமிழர் பகுதிக்குள் ஆரியர்கள் வந்தபோது தமிழர்கள் நான்கு தொழில் பிரிவினராய் வாழ்ந்தனர்.
1. அந்தணர், 2. அரசர், 3. வணிகர், 4. வேளாளர்.
அரசர்          :               நாட்டை ஆளும் குலத்தவர்.
வணிகர்    : தானியங்களை, விளை பொருட்களை ஓரிடத் திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு விற்று, மாற்றுப் பொருள் வாங்கி வந்து விற்றவர்கள்.
வேளாளர்               : வேளாண்மைத் தொழில் செய்தவர்கள்.
அந்தணர் :               மேற்கண்ட மூன்று தொழில் புரிந்த மக்களில் இல்வாழ்வில் எல்லாம் நுகர்ந்து முடித்தவர்களில், பொதுத் தொண்டாற்ற விரும்பி வீட்டை விட்டு வெளியில் வந்து பொது இடங்களில் தங்கி, பொதுமக்கள் கொடுப்பதை உண்டு பொதுமக்களுக்குத் தொண்டாற்றியவர்கள்.
இவர்கள் அரச குடும்பங்களில் இருந்தும் வந்தனர், வேளாளர் குடும்பங்களிலிருந்தும் வந்தனர், வணிகக் குடும்பங்களிலிருந்தும் வந்தனர்.
காமஞ்சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்க ளொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
(தொல். கற். 51)
அந்தணர்கள் ஓரிடத்தில் நிலைத்துத் தங்காது, ஊர்தோறும் சென்று மக்களுக்கு நல்ல வழிகளை எடுத்துக் கூறி வந்தனர். இவ்வாறு ஊர்தோறும் அலைந்து திரிய வேண்டி வந்ததால், வெய்யிலுக்குக் குடையும், செருப்பும், நீர் கொண்டு செல்ல செம்பும், ஊன்றுகோலும், படுத்துறங்க பாயும், நல்வழி கூறும் அறநூல்களையும் (ஓலைச்சுவடிகள்) தங்களுடைய உடைமைகளாகக் கொண்டு சென்றனர். இதைத் தொல்காப்பியம், நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய - (தொல். மரபி. 70)
அரசர் போர் செய்வதற்காக நகரைவிட்டுச் செல்லும்போது, அந்தணப் பெரியோர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றும் நடத்தினர்.
அந்த ணாளர்க் கரசுவரை வின்றே
- (தொல். மரபி. 82)
மேற்கண்ட அரசர், வணிகர், வேளாளர், அந்தணர் என்பவை ஜாதிப் பிரிவுகள் அல்ல. காரணம் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருடன் மணவுறவு வைத்திருந்தனர்.
அரசன் இருஞ்சேட் சென்னியின் மனைவி அழுந்தூர் வேளின் மகள் ஆவாள். அவனுடைய மகன் கரிகாலன் மனைவி நாங்கூர் வேளின் (வேளாளரின்) மகள் ஆவாள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்குவேள் ஒருவரின் மகள்.
ஜாதிப் பிரிவாய் இருந்தால் இது போன்ற மணவுறவுகள் வந்திருக்காது. எனவே, இவை ஜாதிப் பிரிவுகள் அல்ல, தொழில் பிரிவுகள் மட்டுமே. அக்காலத் தமிழர்களிடையே ஜாதிப் பிரிவுகள் ஏதும் இல்லை.
அதேபோல் அக்கால தமிழர்களிடம் மூடநம்பிக்கைகளோ, சடங்குகளோ, கடவுள் நம்பிக்கையோ இல்லை.
திருமணம் : மணம் நடைபெறும் இல்லத்தின் முன் தென்னங்கீற்றாலான பந்தல் போடப்படும்; மணப்பந்தலைச் சுற்றிலும் பல்வேறு வகையான மலர் மாலைகள் தொங்க விடப்படும். மணிமாலைகளும் ஆங்காங்கே தொங்க விடுவார்கள். பருப்பைச் சேர்த்துச் சமைக்கப்பட்ட பொங்கல் விருந்தினர்க்கு உணவாக வழங்கப்படும்.
மணல் பரப்பப்பட்ட மேடையில் விளக்குகள் எரியும்; அதுவே மணமேடை.
அதிகாலையில் இல்வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிலர் ஆற்றுக்குச் சென்று, ஆற்றுநீரைக் குடங்களில் நிரப்பிக் கொண்டு வந்து மணப்பந்தலின் முன்னே வைப்பர். அக்குடத்தில் உள்ள நீரை நான்கு பெண்கள் எடுத்து மணப்பெண்ணிற்கு நீராட்டுவர்.
அவ்வாறு நீராட்டுகையில் கற்பொழுக்கத்தில் கொஞ்சமும் பிறழாமல், பேறுகள் அனைத்தும் பெற்று மகிழ்வாய் வாழ்வாயாக! என்று வாழ்த்துவர். அதன்பின் அவருக்குப் புத்தாடை அணிவித்து மணற்பரப்பில் அமர்த்துவர். பின் அனைவரும் வாழ்த்துக் கூறி மணமகனிடம் ஒப்படைப்பர்.
உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப நீரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரக் கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக் கோள் கால்நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென உச்சிக் குடத்தார் புத்தகல் மண்டையர்
பொதுச் செய்கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிடுங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணம் கழிந்த பிற்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல் (அகநானூறு மருதம் 86)
1600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நல்லாவூர் கிழாரால் பாடப்பெற்ற பாடல் இது. இன்னும் விவரம் வேண்டுவோர் கவிஞர் விற்நூற்று மூதெயினனார் எழுதிய பாடலைப் (அகநானூறு மருதம் 136) பார்க்கவும்.
மேற்கண்ட திருமண முறையை ஆராய்ந்து பார்த்தால், பண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இல்லை, தரம் கெட்ட ஆரிய மந்திரம் இல்லை, எரி வளர்த்தல் இல்லை, ஆரியப் பார்ப்பனர் இல்லை, அம்மி மிதித்தல் இல்லை, அருந்ததி பார்த்தல் இல்லை. ஊர் அறிய விருப்பமுடைய பெண் விருப்பப்பட்ட ஆணிடம் ஒப்படைக்கப்படுகிறாள். அவ்வளவே!
தமிழர் வழிபாடு தமிழர் எக்கடவுளையும் வணங்கவில்லை. நாட்டின் தலைவர், நாட்டின் பாதுகாப்புக்கு உயிர் விட்ட வீரர், பத்தினிப் பெண்டிர் இவர்களுக்கு நினைவுச் சின்னம் வைத்து வணங்கினர். தன் குடும்பத்தில் இறந்துபோன குலப் பெரியோரை இல்லுறை தெய்வமாக வணங்கினர்.
குலத்தெய்வம் என்பதுகூட அக்குலத்தில் சிறந்த வீரர் அல்லது பத்தினிப் பெண்டிரே ஆவர்.
மாயோன் மேய காடுரை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமணலுலகமும் முல்லைக் குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே!
- (தொல். பொரு. அகத்  5)
என்ற தொல்காப்பிய வரிகளைச் சிலர் காட்டி முருகன், கண்ணன், இந்திரன், வருணன் வழிபாடெல்லாம் இருந்தது என்பர். ஆனால் அது சரியன்று. இவர்கள் எல்லாம் நிலத் தலைவர்கள். கடவுளர் அல்ல.
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்
- (புற 5)
என்கிறது அதே தொல்காப்பியம்.
முல்லை நிலத்துத் தலைவன் மாயோன் அம்மக்களைக் காத்ததுபோல, ஒருவன் மக்களை மிகச் சிறப்புடன் காத்துப் பெற்ற நீங்காத புகழைக் கூறல் பூவை நிலை ஆகும் என்கிறது இவ்வரிகள்.
இதில் மாயோன் முல்லை நிலத்து மக்களைக் காத்ததுபோல என்று கூறுவதிலிருந்து இவர்கள் நிலத் தலைவர்கள் என்பது உறுதியாகிறது. கடவுள் என்றால் நிலத்துக்கு ஒரு கடவுள் என்று வராது. கடவுளாயின் அது மக்கள் பொதுவாக இருக்கும் என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
மேலும், கருப்பொருள்களில் ஒன்றான தெய்வத்தைக் கருப்பொருள் கூறுமிடத்துக் (அக 18) கூறாது, பொருளோடு கூறியிருத்தல் (அகத். 5) இவர்கள் நிலத் தலைவர்களே என்பதைத் தெளிவாக்குகிறது.
மேலும் இச்சூத்திரத்தில் உள்ள மேய என்னும் சொல் இவ்வுண்மையை நன்கு விளக்குகிறது என்று தமிழ்ச் சான்றோர் புலவர் குழந்தையவர்களும் அரிய ஆய்விற்குப்பின் உறுதி செய்கிறார்கள்.
பார்ப்பனர்கள் யார்? என்று பேச வந்து இதையெல்லாம் ஏன் சொல்லிக் கொண்டு செல்கிறேன் என்று நீங்கள் நினைக்கக் கூடும். இதில் தெளிவு இருந்தால்தான் பார்ப்பனர் யார் என்பதில் தெளிவு கிடைக்கும். எனவேதான் பார்ப்பனர் உருவான தமிழர் நிலை  சூழ்நிலை உங்களுக்கு ஆணித்தரமாக உள்ளது உள்ளபடி உணர்த்தப்பட்டது.
ஆக, ஆரியர்கள் தென்னிந்தியப் பகுதிக்குள் (தமிழகத்திற்குள்) மெல்ல மெல்ல ஊடுருவியபோது, தமிழர்களிடம் 1. ஜாதி இல்லை, 2. கடவுள் இல்லை, 3. சடங்கு இல்லை, 4. மந்திரம் இல்லை.
தமிழர்களுடைய அரச குடும்பத்தில் உள்ள இளைஞர்களாக இருப்பவர்களுக்குத் தோழனாக இருக்கும் வேலையைச் செய்த இளைஞர்களுக்குப் பார்ப்பனர் என்று பெயர் என்பது வரை தெளிவாகக் கண்டோம்.
இப்பார்ப்புத் தொழிலின் பணிகள் என்ன?
காமநிலை யுரைத்தலும், தேர்தல்நிலை யுரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் தொழிலும்,
ஆவொடு பட்டநிமித்தங் கூறலும்,
செலவுறு கிளவியும், செலவழுங்கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்புக் குரிய
- (தொல். கற். 36)
1.      காமநிலை யுரைத்தல் : செல்வக் குடும்ப இளைஞர்களின் காதல் விவகாரங்களில் ஆலோசனை வழங்குதல்.
2.      தேர்தல் நிலையுறுத்தல் : காதலால் ஏங்கும் அவ்விளைஞர்களுக்கு அவர்கள் ஆறுதல் அடையும்படி பலவற்றை எடுத்துக் கூறி அவர்களைத் தேற்றுதல்.
3.      கிழவோன் குறிப்பினைக் கூறல் : காதலன் அவளை நினைத்து ஏங்கும் நிலையைக் காதலிக்கு எடுத்துக் கூறல்.
4.      ஆவொடுபட்ட நிமித்தங் கூறல் : பல்வேறு நிமித்தங்கள் ஆராய்ந்து அதன் பலனைக் கூறல்.
5.      செலவுறு கிளவி : இளைஞர் (காதலன்) தன் காதலியைச் சந்திக்கச் செல்ல வேண்டிய சரியான காலத்தை ஆராய்ந்து கூறல். காதலியின் சூழ்நிலையை அறிந்து எப்போது அவளைச் சந்தித்தல் உகந்ததோ அப்போது அனுப்பி வைத்தல்.
6.      செலவு அழுங்கிளவி : செல்லக்கூடாத நேரத்தில் காதலியைச் சந்திக்கப் புறப்பட்டால், இப்போது செல்லக்கூடாது, சரியான சூழல் இல்லை என்று கூறி தடுத்தல்.
இந்த ஆறு வேலைகளையும் செய்வதே பார்ப்பு வேலையின் (பார்ப்பனரின் பணி). இந்தப் பார்ப்பு வேலையைத் தமிழர்களே முழுக்க முழுக்கச் செய்தனர்.
இச்சூழலில்தான் தமிழகத்திற்குள் ஆரியர்கள் நுழைந்தனர். நுழைந்தவர்கள் பிச்சையெடுத்துக் காலந் தள்ளிக் கொண்டு, பொதுத் தொண்டு செய்யும் அந்தணத் தமிழர்களுடன் மெல்லத் தொடர்பு கொண்டனர். அதன்வழி அரச குடும்பங்களுடனும், செல்வந்த குடும்பங்களுடனும் தொடர்பு கொண்டனர். ஆரியர்களுள் முதியவர்கள் அந்தணத் தமிழர்களுடனும், இளைஞர்கள் அரச குடும்பத்து இளைஞர்களுடனும் செல்வ குடும்பத்து இளைஞர்களுடன் நெருங்கிப் பழகினர். ஆரிய இளைஞர்கள் செந்நிறமாகவும், உயரமாகவும், பார்க்கக் கவர்ச்சியாகவும் இருந்ததால், செல்வ குடும்பத்து இளைஞர்கள் அவர்களுடன் அதிகம் நெருங்கி விரும்பிப் பழகினர். இதனால் ஏற்கெனவே  பார்ப்புத் தொழில் பார்த்த (தோழனாய் இருந்த) தமிழர் இளைஞர்கள் ஒதுக்கப்பட்டனர். மெல்ல மெல்ல பார்ப்புத் தொழிலுக்கு ஆரிய இளைஞர்களையே செல்வ குடும்பத்து இளைஞர்கள் தேர்வு செய்தனர். இதன்வழி தமிழர் பார்த்த பார்ப்புத் தொழில் முழுக்க ஆரியர்களுக்கு மாறியது.
அதனால் பார்ப்பு வேலை பார்த்த ஆரியர்களுக்குப் பார்ப்பனர் என்ற பெயர் வந்தது. அதாவது அவர்களின் இனப் பெயர் மறைய (ஆரியர் என்பது நீங்க) தொழிற் பெயரால் பார்ப்பனர் என்று அழைக்கப்பட்டனர். தற்காலத்தில் வாயில் காக்கும் வேலை வடநாட்டு கூர்க்கர்களுக்கு உரிமையானதுபோல, நடிகைகள் தேர்வு தமிழ்த் திரைத்துறையில் வடநாட்டுப் பெண்களுக்கு உரிமையானதுபோல, பார்ப்புத் தொழில் ஆரியர்களுக்கு உரிமையானது.
வாயில் காக்கும் வேலை கூர்க்கர்களுக்கு உரிமையானதால், வாயில் காக்கும் வேலையைத் தற்போது யார் செய்தாலும் அவர்களை கூர்க்கா என்று அழைக்கிறார்கள். இங்கு ஓர் இனத்தின் பெயர் தொழிலுக்கு ஆகி வந்தது. பார்ப்புப் பணியில் தொழிலின் பெயர் இனத்துக்கு ஆகி பார்ப்பனர் ஆயினர்.
அமைச்சராதல்
அரச குடும்பத்து இளைஞர்களுடன் நெருங்கி, காதல் உள்ளிட்ட உள்ளார்ந்த (அந்தரங்க) செயல்களிலும் கலந்து பேசி உறவாடும் வாய்ப்பு ஆரிய இளைஞர்களுக்குக் கிடைத்தால், அந்த இளைஞர்கள் அரசராகப் பொறுப்பேற்கும்போது, அவர்களுடன் பழகிய ஆலோசகராய், தோழராய் இருந்த ஆரிய இளைஞர்களையே அமைச்சராக்கிக் கொண்டனர். இதனால் அமைச்சர் பதவி இயல்பாய் ஆரியர்களுக்குக் கிட்டியது.
தமிழகத்துள் வந்து தமிழ் அந்தணப் பெரியோருடன் தொடர்புகொண்டு, பார்ப்புத் தொழிலைப் பறித்து அமைச்சராகவும் ஆனதால், அதிகாரம் அவர்கள் (ஆரியர்) கைக்கு வந்தது.
அரசர்களின் மூளையைச் சலவை செய்து அவர்கள் போரில் வெல்ல வேள்வி செய்யத் தூண்டினர். வீரத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த தமிழ் அரசர்கள் வெற்றிக்காக வேள்வி செய்தனர்.
வேள்வி செய்ய வடஇந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ஆரியர்களை, அரசர்கள் மூலம் கொண்டு வரச் செய்தனர். எடுத்துக்காட்டாக, 1700 ஆண்டுகளுக்குமுன் தொண்டை மண்டலத்தை ஆண்ட பம்ப மகாராசன் வடநாட்டிலிருந்து ஆத்திரேய ஹாரித பரத்துவாஜ, கௌசிக, காசிப, வத்ஸ கோத்திரங்களைச் சேர்ந்த பல ஆரியக் குடும்பங்களைத் தொண்டை நாட்டிற்குக் கொண்டு வந்தான். அப்படி வந்த ஆரியக் குடும்பங்களுக்கு நிலங்களைத் தானமாக அளித்தான்.
சுந்தரபாண்டியன் என்னும் அரசர் பல வடஇந்திய ஊர்களிலிருந்து நூற்றியெட்டு தலவகார சாம வேதிகளான ஆரியர்களைத் தென்திருப்பேரைக்குக் கொண்டு வந்து அவர்களுக்கு வீடுகளும், நிலங்களும் வழங்கினான்.      (ஆதாரம்  ஒப்பியன் மொழி நூல்)
பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியும், பல்யானைச் செல்குழு குட்டுவனும் பல வேள்விகளை ஆரியர்களை வைத்து நடத்தியுள்ளான்.
இவ்வாறு மூடநம்பிக்கையில்லாத தமிழர் வாழ்வில் மூடச் சடங்குகளை வெற்றியைக் கொடுக்கும் என்று ஆசை காட்டி நுழைத்தனர் ஆரியர்கள்.
இதன் விளைவாய் மன்னர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டு வேள்விகள் நடத்த ஆரியர்களை வடநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கில் அழைத்து வந்தனர். கொண்டு வந்தனர். சதுர்வேதிமங்கலம் போன்ற பகுதிகள் இப்படி ஆரியர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டவையே!
வெற்றிக்கான வேள்வி செய்பவர்கள் என்ற எண்ணத்தில் அரசர்கள் ஆரியர்களுக்கு உயர் மரியாதை தந்து நடத்தவே, மக்களும் பயத்துடன் ஆரியர்களை மதித்தனர்.
வடநாட்டிலிருந்து வந்ததால் எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர்கள், தமிழர்களைப் பிரித்து ஒற்றுமையைக் குலைத்தால்தான் தாங்கள் பாதுகாப்பாக வாழமுடியும் என்று எண்ணினர்.
எனவே, தமிழர்களைப் பிரிக்கவும், தமிழர்களை மூடநம்பிக்கையில் வீழ்த்தவும் முடிவு செய்து அதற்கேற்ப சில தந்திரங்களைச் செய்தனர்.
தமிழர்களிடையே நிலவிய நன்றியின், நன்மதிப்பின்பாற்பட்ட வீரர் வணக்கம், பத்தினிப் பெண்டிர் வழிபாடு, குலப்பெரியோர் வழிபாடுகளைக் கடவுள் வழிபாடாக்கினர். தமிழர்களிடம் நிலவிய உறுப்பு வழிபாட்டை சிவலிங்க வழிபாடாக்கி, தங்களிடமிருந்த திருமால் வழிபாட்டையும் இணைத்தனர். சிவனும், திருமாலும் மாமன் மைத்தனர் என்றனர். நிலத்தலைவர் களை முருகன், வருணன், கண்ணன், இந்திரன் வழிபாட்டையும் கடவுள் வழிபாடாக்கி, சிவனோடு உறவுபடுத்தினர். பத்தினிப் பெண்டிர் வழிபாடெல்லாம் அம்மன் வழிபாடாயிற்று.
அறிவுக்குகந்த நன்றி வழிபாட்டை மூடவழிபாடாகக் கடவுள் முலாம் பூசி சடங்குகளைச் செய்ய முறைகளை உருவாக்கினர். அச்சடங்குகளைச் செய்யும் தகுதி தமக்கே உண்டு என்றனர்.
பொதுத் தொண்டாற்றிய அந்தணர் பணியைக் கடவுள் பணியாக்கி, இனி அந்தணன் என்போர் தாங்கள்தான் என்று உரிமை பெற்றனர். பார்ப்புப் பணியைப் பறித்ததுபோல, அந்தணர் என்பதையும் தங்களுடையதாக்கினர்.
அதேபோல், தமிழர்களிடையே இருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற தொழிற் பிரிவுகளை ஜாதிப் பிரிவுகள் ஆக்கினர்.
அதற்கு ஸ்மிருதிகளை எழுதி பிரம்மாவின் உடலிலே இவர்கள் பிறந்ததாக ஜாதியைக் கடவுளோடு இணைத்து மக்களை ஏற்கச் செய்தனர்.
அந்தணர் என்பதைப் பிராமணன் என்றாக்கி, அது தாங்கள்மட்டுமே என்று முத்திரை குத்திக் கொண்டனர்நாங்கள் பிரம்மா வின் முகத்தில் பிறந்தவர்கள் என்றனர்.
ஆட்சியாளரை க்ஷத்தியர் என்றாக்கி பிரம்மாவின் தோளில் பிறந்ததாகக் கூறினர்.
வணிகர்களை வைசியர் என்றாக்கி அவர்கள் பிரம்மாவின் இடுப்பில் பிறந்ததாகக் கூறினர்.
வேளாளர்களை சூத்திரர்கள் என்று அழைத்து, பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் என்று கூறினர்.
ஆக, தமிழரிடையே இருந்த நன்றி வழிபாடுகளைக் கடவுள் வழிபாடாக்கினர். தமிழரிடையே இருந்த தொழிற் பிரிவுகளைக் கடவுள் கருத்துரு ஏற்றி வர்ணப் பிரிவுகளாக (ஜாதி பிரிவுகளாக) ஆக்கினர்.
இதன் மூலம் தமிழர்களை மடமையில் வீழ்த்தியதோடு, தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்துத் தங்களுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொண்டதோடு, இரண்டு வகையிலும் தங்களுக்கு உயர்நிலையை உறுதி செய்துகொண்டனர். அப்போது வீழ்ந்த தமிழனைப் பெரியார்தான் எழுப்பினார். பெரியாரால் தமிழன் வீழவில்லை என்பதை குணாக்களுக்குக் கூறவே இவ்வளவும் விளக்க நேர்ந்தது!
ஆக, ஆரியர் என்றாலும், பிராணமர் என்றாலும், ஆரியப் பார்ப்பனர் என்றாலும் எல்லாம் ஆரியர்கள்தான். பார்ப்பனர்கள் என்ற சொல் தமிழகத்திற்கு மட்டும் உரியது. காரணம் முதலில் அது தமிழர்க்குரியதாய் இருந்து பின்னர் ஆரியரால் பறிக்கப் பட்டது. எனவே, பார்ப்பனர் என்ற வழக்கு தமிழகத்தைத் தவிர வேறு இடங்களில் இருக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
ஆரியர் என்பது இனப்பெயர். பிராமணன் என்பது அவர்கள் வர்ணம் பிரிக்கும்போது தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்டது. பார்ப்பனர் என்பது பார்ப்புத் தொழில் பார்த்தமையால் தமிழகத்தில் மட்டும் அவர்களைக் குறித்த சொல்; அவ்வளவே. அந்தணர் என்ற சொல் என்றைக்கும் தமிழ்ச் சான்றோர்க்கு உரியது. அந்த உயர்வைத் தங்களுடையதாக்கிக்கொள்ளவே, ஆரியர்களைக் குறிக்க அந்தணர் என்ற சொல்லைக் களவாடி பயன்படுத்துகின்றனர்.
அந்தணர் என்றால் ஆரியப் பார்ப்பனர் என்று வழக்கத் திலும் புகுத்த முயன்றனர். ஆரியப் பார்ப்பனர்களை அந்தணர் என்று யார் அழைத்தாலும் அது அறியாமை; தவறு.
தமிழர்கள் ஆதியில் இந்தியா முழுக்க ஒரே இயல்பான வாழ்வையே மேற்கொண்டனர். ஆனால், காலம் செல்லச் செல்ல வடஇந்தியப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் இனத்தாலும், மொழியாலும் கலந்துவிட்டனர். காரணம் அந்நியர்களின் நுழைவும், கலப்பும் வடஇந்தியாவில் அதிகம் நிகழ்ந்தது. அதனால்தான் திராவிடர்கள் என்றால் தென்னிந்தியர் என்று கருதப்பட்டது.உண்மையில் திராவிடர்கள் இந்தியா முழுக்க இன்றும் உள்ளனர்.

இவற்றை நன்கு உணர்ந்ததாலே பெரியார் ஆரியர் திராவிடர் என்ற இரு அணிகளமைத்துப் போராடினார். அவர் போராட்டம் இந்தியா முழுமைக்கும் இன்றும் பொருந்துவது அவரின் அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி. மாறாக, குணா கூறுவதுபோல, ஆரியர், பிராமணர், பார்ப்பனர் என்ற வேறுபாடு தெரியாது போராடியதால் தான் தமிழர்கள் வீழ்ந்தனர் என்பது தவறு. குணா கூறுவது மாந்தவியலுக்கும், வரலாற்றுக்கும், உண்மைக்கும் புறம்பானது. தமிழர் வெறுப்பிலிருந்து ஆரியப் பார்ப்பனர்களைக் காக்க குணா முயற்சிக்கும் சூழ்ச்சியே அவரது மேற்கண்ட குற்றச்சாட்டு. எனவே, தமிழர்கள் விழிப்போடிருக்க வேண்டும்!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments