பார்ப்பனர்களைத் தோலுரிக்கிறார் விவேகானந்தர்
ஆதி சங்கரப் பார்ப்பனர் பற்றி விவேகானந்தர்!
ஆணவக்காரர்,
இதயமில்லாதவர், கொலைகாரர்
சுவா: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை.
என்றாலும்,
அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை;
அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர்.
இக் காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார்போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக்கு இடமாகின்றன.
விதுரன் பிரம்மஞானத்தை அடைந்தான்;
அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால்,
என்கின்றார்.
நல்லது;
இந் நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந்தால்,
உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற்பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவதற்கும் உரியவரென்று வேதம் கூறவில்லையா? வேதப் பிராம்மணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாத தொன்று. வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின,
அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது! ``வாதத்திலே தோல்வியுற்றோம்!
என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர். சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன? புத்த(ர்)
தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக, சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்;
`பஹுஜன ஹிதாய பஹுஜன ஸுகாய- பலருடைய இதத்திற்காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!
உண்மையே உருவெடுத்தவர் புத்தர் சிஷ்:
அய்ய, புத்த தேவர் இப்படிச் செய்ததையும் மற்றொரு வகை மூடப் பிடிவாதமென்று நாம் சொல்லுதல் கூடாதா? அவர் இழிவான ஒரு விலங்கின் பொருட்டுத் தம்முடைய சொந்த உடலைக் கொடுத்து விட நினைத்தாரே!
சுவா: ஆனால், `இந்த மூடப் பிடிவாதத்தினால் உலகுக்கு எவ்வளவு நன்மை விளைந்ததென்பதை எண்ணிப் பார்! எத்தனை மடங்கள், எத்தனை பாடசாலைகள், கலாசாலைகள், வைத்தியசாலைகள், விலங்குக்குச் சிகிச்சை புரியும் சாலைகள் ஏற்பட்டன என்பதை நினைத்துப்பார்! சிற்பம் எவ்வளவு சிறந்து விளங்கியது!
புத்த தேவருடைய வருகைக்கு முன் இந்த நாட்டில் என்ன இருந்தது? ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஒரு சிலரால் மாத்திரம் அறியப்பட்டிருந்த சமய உண்மைகள் சில இருந்தன. புத்ததேவர் அவற்றைத் தம் வாழ்க்கையில் மெய்ப்பித்து, மக்களுடைய வாழ்க்கையிலே அவற்றைப் பயன்படுத்தும் நெறிகளைக் காட்டினார்.
இங்ஙனம் நோக்கும்போது, அவர் உண்மை வேதாந்தம் உருவெடுத்தது போன்றவர் ஆவார். (சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் நூல் - பக்கம் 81-82)
`குருகுல முறை பற்றி விவேகானந்தர்
வேத சாத்திரங்களுக்கு விரோதம்
பிரம்மம் ஒரு மனிதனிடத்திலே விளக்கமுறும் ஆயின், அந்த ஒளியினாலே வழியைக் கண்டறிந்து,
ஆயிரக்கணக்கானோர் முன்னேற்றம் அடைவர். பிரம்ம ஞானம் அடைந்தவர்களே மக்களுக்கு ஞானாசிரியராகும் தகைமை வாய்ந்தவர்கள்.
மக்களுடைய அறிவும் சாத்திரங் களும் இதற்குச் சான்று பகருகின்றன.
தமது சொந்த நலத்தைக் கருதிய பிராமணர்கள் இந்த நாட்டிலே `குருகுல முறை யை ஏற்படுத்தினார்கள். இது வேதங்களுக்கும் சாத்திரங்களுக்கும் விரோதமானது.
ஆனபடியாற்றான் மனிதர் சமய சாதனை செய்தும், பிரம்மஞானத்தை அடைந்து தம்மைப் பூரணப்படுத்திக் கொள்ளுவதற்கு இயலாதவர்களாயிருக்கிறார்கள். சமயத்திலே ஏற்பட்ட இந்தக் குறைகளை நீக்கும் பொருட்டே இக்காலத்திலே,
நிலவுலகிலே ஸ்ரீ ராமகிருஷ்ண ராய்ப் பகவான் திருவவதாரம் செய்தருளினார்.
அவர் போதித்த சமரசக் கொள்கைகள் உலக முற்றும் பரவுமாயின் அதனால் மக்கள் கூட்டத்தினருக்குப் பெரும்பயன் உண்டாகும். இவ்வளவு அற்புதமாகச் சமய சமரசத்தை நிலைநாட்டிய ஞானாசிரியரை இந்திய நாடு கடந்த பல நூற்றாண்டுகளுக்குத் தரவில்லை.
`இராமகிருஷ்ணர் பற்றி .
. .
சுவாமிஜியினுடைய சகோதர சந்நியாசியார் ஒருவர் அவரை நோக்கி, மேலை நாட்டிலே ஸ்ரீராமகிருஷ்ணரை அவதார புருஷரென விரிவாகப் பிரசாரஞ் செய்யாதது ஏன்? என வினவினார்.
சுவாமிஜி: அங்குள்ளவர்கள் தங்களது விஞ்ஞான சாத்திரத்தைப் பற்றியும், தத்துவ சாத்திரத்தைப்பற்றியும் பெருகக் கூறிப் பறையடிக்கிறார்கள். நியாயத்தினாலும், சாத்திரியமான தர்க்கத்தினாலும், தத்துவ ஆராய்ச்சி யினாலும், அவர்களது அறிவுப் பெருமையை முதலிலே தகர்த்து எறிந்தாலன்றி,
அங்கு ஒன்றினையும் கட்ட முடியாது. உலகியல் அறிவினைக் கொண்டு கூடியவரை ஆராய்ந்தும் தமக்கொரு நிலைக்களம் காணாதவராய் உண்மை உணர வேண்டுமென்னும் ஆவலோடு என்னிடம் தனித்து வருவோருக்கு மாத்திரம் ஸ்ரீராமகிருஷ் ணரைப்பற்றி நான் சொல்லுவேன்.
அஃதன்றி தெய்வ அவதாரங்களைப்பற்றி நான் உடனே பேசத் தொடங்கினால்,
`நீர் சொல்வதில் ஒன்றும் புதியது இல்லை; எங்களுடைய இயேசு கிறிஸ்துவும் அப்படிப்பட்டவரே என்று கூறி விடுவார்கள்.
(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்
பக்கம் -
20-21)
பசுவதையும் - இந்துமதமும் விவேகானந்தர்
ஒன்பது லட்சம் மக்கள் பட்டினி - உதவி செய்யுங்களே!
நரேந்திர பாபு போன பின்னர், பசுக்களைப் பரிபாலிக்கிற சபை ஒன்றினுக்குரிய ஊக்கமுள்ள பிரசாரகர் ஒருவர் சுவாமிஜியைக் காணும் பொருட்டு வந்தார். அவர் தம் தலையிலே காஷாயத் தலைப்பாகை அணிந்திருந்தார்; தோற்றத்தில் வடநாட்டினரைப் போலக் காணப்பட்டார்.
அவரது உடை ஏறக்குறையச் சந்நியாசிகளுடைய உடை போன்றிருந்தது. அந்தப் பசு பரிபாலன சபைப் பிரசாரகர் வந்தார் என்று கேள்விப்பட்டதும்,
சுவாமிஜி சாலை அறைக்கு வந்தார். பிரசாரகர் சுவாமிஜியை வணங்கிப் பசுத்தாயினுடைய படம் ஒன்றினைச் சுவாமிஜிக்குக் கொடுத்தார்.
சுவாமிஜி படத்தைப் பெற்று அருகில் நின்ற ஒருவர் கையில் கொடுத்த பின்னர், பின்வரும் சம்பாஷணை நிகழ்ந்தது.
சுவாமி:
உங்களுடைய சங்கத்தின் நோக்கம் என்ன?
பிரசாரகர்: நமது நாட்டிலுள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம்.
நோயுற்ற பசுக்களும் வலுவிழந்தனவும் கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப் பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்திய சாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.
சுவாமி: அது மிக நல்லது. உங்கள் வருவாய்க்கு வழி என்ன?
பிரசாரகர்: உங்களைப் போன்ற பெரிய மனிதர் அன்போடு கொடுக்கின்ற நன்கொடைகளைக் கொண்டே சபையின் வேலை நடந்து வருகின்றது.
சுவாமி: இப்பொழுது எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? பிரசாரகர்:
இந்த முயற்சிக்கு மார்வாடி வணிகர் கூட்டம் சிறந்த உதவி புரிகின்றது. இந்த நன்முயற்சிக்காக அவர்கள் பெருந்தொகை கொடுத்திருக்கின்றார்கள். சுவாமி: மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்துவிட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்று இந்திய அரசாங்கத்தார் செய்தி வெளியிட்டிருக்கின்றனர்.
இதற்கு உதவி புரிவதற்கு உங்களுடைய சபை ஏதாவது செய்திருக்கின்றதா?
மக்களுக்கு இரங்கோம்; மாடுகளுக்கே இரங்குவோம்
பிரசாரகர்: பஞ்சம் முதலிய துன்பம் வரும்பொழுது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத்தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது.
சுவாமி: உங்களுடைய சொந்தச் சகோதர சகோதரிகளாகிய லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தினால் துன்பம் அடைந்து மரணத்தின் வாயில் விழும்பொழுது அவர்களுக்கு எவ்வழியிலாவது உணவளித்துக் காப்பாற்ற வேண்டுவது உங்கள் கடமை என நீங்கள் நினைக்கவில்லையா?
பிரசாரகர்: இல்லை. இந்தப் பஞ்சம் மக்களுடைய பாவகருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே.
பிரசாரகர் இந்த வார்த்தைகளைக் கூற, இவற்றைக் கேட்டுச் சுவாமிஜியினுடைய கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறப்பது போன்றிருந்தது; முகம் சிவந்தது.
அவர் தம் சினத்தை அடக்கிக் கொண்டு, பின்வருமாறு சொல்லுவராயினார்:
தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு பிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை.
மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடைகிறதென நான் எண்ணவில்லை.
மனிதர் தம் கருமத்தினால் இறக்கின்றனரென்று நீர் வாதிப்பீராயின், இவ்வுலகத்திலே எதைக் கருதியும் முயல வேண்டுவதில்லை என்பது தீர்மானமாகின்றது. விலங்குகளைப் பரிபாலிப்பதற்காக நீர் செய்கிற வேலையும் இவ் விதிக்குப் புறம்பாகாது.
பசுத்தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்காரர்களுடைய கையிலகப்பட்டு இறக்கின்றன வென்று சொல்லிவிட்டுச் சும்மா இருக்கலாமே? பிரசாரகர் சிறிது நாணி, ஆம், நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், பசு நம் அன்னை என்று சாத்திரங்கள் சொல்லுகின்றனவே?
என்றார்.
சுவாமிஜி நகைத்துக்கொண்டே,
ஆம்,
பசு நம் அன்னை என்பதை நான் அறிந்து கொண்டேன்; இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்! என்றார்.
இவர்கள் மனிதர்களா?
வடநாட்டுப் பிரசாரகர் அந்த விஷயத்தைப் பற்றிப் பின்பு ஒன்றும் பேசவில்லை.
சுவாமிஜி கேலி பண்ணிய கருத்தை அவர் அறிந்து கொள்ள வில்லை போலும்! தமது சபைக்காக ஏதாவது உதவ வேண்டுமென்று அவர் சுவாமிஜியைக் கேட்டார். சுவாமி: நான் ஒரு சந்நியாசி; பக்கிரி; உமக்கு உதவி செய்ய எங்குப் பணம் பெறுவேன்? பணம் பெற்றாலும், முதலிலே மனிதருடைய சேவைக் காகச் செலவழிப்பேன். முதலிலே மனிதனுக்கு உணவு, கல்வி, ஆன்மிக வாழ்க்கை என்னும் இவற்றைத் தந்து காப்பாற்ற வேண்டும். அதற்குப் பின்பு ஏதாவது மிகுந்திருந்தால்,
உம்முடைய சபைக்குக் கொடுக்கலாம்.
இந்த வார்த்தைகளைக் கேட்டுப் பிரசாரகர் சுவாமிஜியை வணங்கி விட்டுப் போய் விட்டார். பின்பு சுவாமிஜி எங்களை நோக்கிச் சொல்லுகிறார்:
அந்த மனிதனுடைய சொற்களைப் பாருங்கள்!
மனிதர் தமது கருமத்தினால் இறக்கிறார்கள் என்று சொல்கின்றான். அவர்களுக்கு உதவுவதனால் என்ன பயன் என்கிறான். நாடு நாசமாய்ப் போய்விட்டதென்பதற்கு இது ஒரு தக்க சான்று. இந்துக்களுடைய கரும விசாரணை எவ்வளவு பழுதடைந்து விட்டதென்பதைப் பாருங் கள்! மனிதருக்கு இரங்காத இதயமுள்ளவர்கள் இவர்கள், இத்தகையோரை மனிதர் என்று எண்ணலாமா?
(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் பக்கம் 5,7)
பூணூல் அணிய சாஸ்திர ஆதாரமில்லை - விவேகானந்தர்
இன்று வங்காள சகம் 1303 ஆம் ஆண்டு வைசாக மாதம், 19ஆம் தேதி சுவாமிஜி சிஷ்யருக்கு தீட்சை செய்ய உடன்பட்டிருக்கிறார்.
ஆனபடியால்,
அவர் அதிகாலையில் ஆலம் பஜார் மடத்தை அடைந்தார். சுவாமிஜி சிஷ்யரை நோக்கிப் பரிகாசமாக,
இன்று நீ பலியாக்கப்படப் போகிறாய் அல்லவா? என்றார்.
இந்தக் குறிப்புக்குப் பின்பு சுவாமிஜி புன்னகையோடு அமெரிக்க நாட்டைக் குறித்த விஷயங்களைப்பற்றிப் பிறரோடு பேசிக் கொண்டிருந்தார்.
அந்த சம்பாஷணையிலே ஆன்மீக வாழ்க்கையை வளர்ப்பதற்கு விரும்பும் ஒருவன் பக்தியோடும், முழு மனத்தோடும் இருக்க வேண்டும் என்பதும், குரு பக்தியானது எவ்வளவு உறுதி பெற்றிருக்க வேண்டும் என்பதும், குருவினுடைய வார்த்தையிலே ஆழ்ந்த நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதும், குருவுக்காக வேண்டுமாயின் உயிரையும் தியாகஞ் செய்ய வேண்டும் என்பதும் பேசப்பட்டன.
சிஷ்யருடைய மனத்தைப் பரிசோதிக்கும் பொருட்டுச் சுவாமிஜி சில வினாக்களை வினவினார்.
என்ன நேர்ந்தாலும்,
எதுவாயிருந்தாலும்,
என்னுடைய கட்டளையை உன்னால் இயன்றவரை கைக்கொண்டு ஒழுக ஆயத்தமாயிருக்கிறாயா?
உன்னுடைய நலத்தைக் கருதி உன்னைக் கங்கையில் குதிக்கச் சொன்னாலும்,
வீட்டுக் கூரையிலிருந்து கீழே குதிக்கச் சொன்னாலும் தடையின்றி அவற்றைச் செய்வாயா? இவற்றை எல்லாம் இப்பொழுது சிந்தித்துப் பார். இந்தக் கணத்தில் உன் உள்ளத்தில் ஏற்பட்ட ஓர் எண்ணத்தினாலே என்னைக் குருவாகக் கொள்ள வேண்டும் என்று அவசரப்படாதே இந்த வினாக்களுக்கெல்லாம் சிஷ்யர் ஆம் என்று தலையசைத்தார்.
சுவாமிஜி மேலும் சொல்கிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீட்சை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான்.
முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.
இக்கால தீட்சை முறை குருடரைக் குருடர் வழி காட்டுதே
சிஷ்: அய்ய, அப்படியானால் முப்புரி நூலை அணியும் வழக்கம் வைதிக வழக்கமன்று எனச் சொல்லுவீரா? சுவா: வேதங்களிலே நூலைப்பற்றிய குறிப்பு ஓரிடத்திலும் இல்லை. இக் காலத்து ஸ்மிருதி ஆசாரியராகி ரகுநந்தன பட்டாச்சாரியாரும்,
இந்த நிலையிலே எக்ஞோப வீதத்தை (முப்புரி நூலை) அணிய வேண்டும் வ என்கிறார். கோபிலருடைய கிருஹய சூத்திரங்களிலும் உபவீதமானது நூலினாற் செய்யப்பட்டது என்னும் குறிப்புக் காணப்படவில்லை. முதல் வைதீக சமஸ்காரமாகிய இது குருவின் முன்னிலையிலே செய்யப்படும் உபநயனம் என்று சாத்திரங்களில் சொல்லப்படுகிறது. நமது நாடு இப்பொழுது அடைந்திருக்கின்ற பரிதாப நிலையைப் பார். சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற உண்மை நெறி அகன்று போய்விடவே,
தேசாசாரங்களும் பொது மக்களின் வழக்கங்களும், பெண்களுக்கு நியமித்த கொள்கைகளும் நாட்டில் நிறைந்திருக்கின்றன. ஆனபடியினாலேதான் பழைய காலங்களிற்போல
`சாத்திரங்கள் விதிக்கின்ற நெறியிலே நிற்பாயாக! என்று நான் உனக்குச் சொல்லுகிறேன்.
தன்னம்பிக்கையோடு அவற்றை மீண்டும் இந்த நாட்டிலே வழங்கச் செய். நசிகேதனைப் போன்ற சிரத்தை உன் உள்ளத்திலே இருப்பதாக வேண்டுமானால்,
அவனைப் போல எமலோகத்துக்கும் போ, ஆன்மாவினுடைய இரகசியங்களை அறிந்து விடுதலை பெற்று, பிறப்பின் மருமத்தை அறிய வேண்டுமானால்,
அச்சமற்ற சிந்தையோடு மரணத்தின் வாயிலிலும் புக வேண்டும். அச்சமே மரணம். நீ அச்சத்திற் கப்பால் போக வேண்டும். இன்று முதல் அச்ச மற்றிரு. நீ வீடு பெறும் பொருட்டும்,
பிறருடைய நலத்துக்காகவும் உயிரைக் கொடுக்கச் சித்தமாயிரு.
எலும்பும் இறைச்சியும் பொருந்திய இந்தச் சுமையைத் தூக்கிக் கொண்டு திரிவதனால் என்ன பயன்? ஆண்டவனுக்காக அனைத் தினையும் தியாகஞ் செய்கின்ற மந்திரத்தைப் பெற்று, ததீசி முனியைப் போலப் பிறர் பொருட்டு எலும்பு இறைச்சியினாலாகிய இந்த உடலைக் கொடுத்துவிடு.
வேத வேதாந்தங்களை அறிந்தவர்களாய், பிரம்ம ஞானத்தை உடையவர்களாய், அச்சமின்மைக்கு அப்பால் மற்றவர்களை வழி நடத்தக் கூடியவர்களே
`குரு எனப்படுவார்கள், என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அத்தகையோர் அண்மையில் இருக்கும் பொழுது யோசனையை ஒழித்துவிட்டுத் தீட்சை பெற்றுக் கொள். இக்காலத்தில் இக் கொள்கையானது சிலரிடத்து,
`குருடரைக் குருடர் வழி நடத்துவது ஆகிவிட்டது என நீ அறிவாய். (சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் நூல் பக்கம் 26-28) வருணம், பெண்ணடிமை,
ஏழைகள்பற்றி விவேகானந்தர்
வருணப் பிரிவு இருக்கலாமா?
நான் ஆரியன், மற்றையோர் மிலேச்சர் என்று எண்ணுகிற எண்ணம் அறியாமையிலிருந்து பிறந்தது.
அறிவு விளக்கத்தின் வடிவமாய் வேதத்துக்கு பாஷ்யகாரராய் விளங்குகின்றவரிடத்து வர்ணா சிரமப் பிரிவுகள் இருத்தல் தகுமா?
வேதங்களுக்குப் பின்பே வருணப் பிரிவு
வேதங்களில்
`ரிஷி என்பதற்கு `மந்த்ர திரஷ்டா எனப் பொருள் காணப்பட்டது. அம் மொழி கழுத்திலே பூணூலைத் தாங்கிய அனைவரையும் குறிப்பதில்லை. வருணப்பிரிவு பின்பு ஏற்பட்டது. வேதம் சத்தத்தின் இயற்கையை உடையது.
புத்தரின் கொள்கையைக் களவாடியது இந்துமதம்
புத்தருடைய துறவுக் கொள்கையை இந்து சமயம் கவர்ந்துகொண்டது;
புத்தரைப் போன்ற துறவு வாழ்க்கையுடைய வேறு ஒரு மனிதன் இவ்வுலகத்தில் பிறக்கவில்லை
புராணங்களில் பலவும், மனுதர்மம் போன்றனவும் மகாபாரதத்தில் பெரும் பகுதியையும் பிற்காலத்திலெழுந்தன. பகவான் புத்தர் அவற்றுக்கு முற்பட்டவர்.
எளியோரை அடக்க இனி இயலாது
இந் நாள்களில் தாழ்ந்த வகுப்பார் வேலைநிறுத்தம் செய்யும் இயக்கம் எவ்விடத்திலும் பரவிவருவது இதற்கு ஒரு சான்றாகும்.
உயர்ந்த வகுப்பார் எவ்வளவு முயன்று பார்ப்பினும்,
தாழ்ந்த வகுப்பாரை இனி அடக்கி வைக்கமுடியாது.
தாழ்ந்த வகுப்பாருக்கு உரிமையாகிய நலன்களை அவர்கள் அடையச் செய்வதே உயர்ந்த வகுப்பார் தாமும் நன்மையடைவதற்குத் தகுந்த நெறி யாகும்.
மூளைச் சலவை இனி முடியாது –
விஞ்ஞான வீச்சால் மடமைகள் அழிந்தொழியும்
புரோகிதராகிய நீங்கள் வேத வேதாந்தங் களையும் அத்தகைய உயர்வுடைய சாத்திரங் களையும் பிராமணரல்லாதார் படித்தல் கூடாது என்றும் தொடுதலுங்கூடாதென்றும் கட்டளையிட்டு விட்டீர்கள்;
நீங்கள் அவர்களை எப்போதும் தாழ்த்தினீர்கள்; சுயநலத்தைக் கருதி இவ்வண்ணம் செய்தீர்கள்.
சமய சாத்திரங்களை உங்களுக்கே உரியவை என்றீர்கள்.
விதிவிலக்கு உங்கள் கையில் உள்ளவை எனச் சொல்லி விட்டீர்கள்.
இந்தியாவில் உள்ள ஏனைய சாதியார்களைக் கீழானவர்கள் என்றும், தீயவர்கள் என்றும் பலமுறை சொல்லி, அவர்கள் தங்களை உண்மையில் அத்தகையவர்களே என்று நம்பும் படிச் செய்துவிட்டீர்கள்.
ஒரு மனிதனைப் பார்த்து, நீ தாழ்ந்தவன்; இழிவுடையவன் எனக் காணும் போதெல்லாம் சொல்லி வருவானாயின் நாளடைவில் அவன் அதை விரும்பி உண்மையிலேயே தான் தாழ்ந்தவன் என்று நினைப்பது இயல்பு. இதனை மனோவசியம் என்பர். பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகின்றார்கள். பிராமணர்களுடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்கட்குள்ள நம்பிக்கைகள் நீங்குகின்றன.
மேலை நாட்டுக் கல்வி பரவியதால், பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்தில் பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன.
பெண்ணடிமை - இழிஜாதி என்பன வேத விரோதம்
பெண்கள் ஞானத்தையும் பக்தியையும் அடைவதற்குத் தகுதியற்றவர்கள் என்று எந்த சாத்திரத்திலே கண்டாய்? புரோகிதர்கள் வேதங் களை அத்தியாயனம் பண்ணுவதற்கு ஏனைய ஜாதி மக்கள் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கித் தள்ளிய இந்த இழிவான காலத்தில், பெண்களுடைய உரிமைகளையும் நீக்கிவிட்டார்கள்.
ஏழைகள் தொண்டிலே என் வாழ்நாள் கழியும்
நமது நாட்டு ஏழை மக்கள் உணவின்றிப் பட்டினியாயிருப்பதைக் காணும்பொழுது பூஜை முதலிய கிரியைகளையும்,
கல்வியையும் எடுத்தெறிந்துவிட்டு, ஊர் ஊராகச் சென்று சாதனையினாலும், அய்ம்புலன் அடக்கத்தினால் வந்த ஆற்றலினாலும் பணக்காரருடைய மனத்தைத் திருப்பி பணம் திரட்டி ஏழைகளுக்குத் தொண்டு புரிவதில் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டுமென்னும் எண்ணம் எனக்கு உண்டாகிறது.
(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்
என்ற நூலிலிருந்து)
அய்யரின் திரிபுவாதங்களுக்குச் சாவுமணி
மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார்.
அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.
பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார்.
சுந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.
சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர்; வைதீக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்; எதையும்
`பிராமண இயல்போடு நோக்குபவர்;
`பிராமணர் அல்லாதவர்களை, சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது.
பிராமண குலம் இந்தியாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது; இப்பொழுது மகத்தான காரியங்களைச் செய்து வருகிறது; இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார்; `பிராமணர் களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.
வேதங்களை இயற்றியவர்கள் பார்ப்பனரா?
வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்;
வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப்பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது `பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்குச் செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.
வேதவியாசர்,
வசிஷ்டர்,
நாரதர் போன்றவர்கள் `பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். `பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார்.
அந்தக் கருத்துக்களைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.
உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை.
(3.280) முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர்; வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்;
நாரதர் பணிப் பெண்ணுக்குப் பிள்ளையாகப் பிறந்தவர்.
இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள். (6.433)
முகம்மதியர் நுழைவுக்குப் பார்ப்பனர் காரணம்
நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் `பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும்; இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தால்தான் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)
குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், `பிராமணர் சக்தியை மீண்டும் நிலை நாட்ட முயன்றனர்.
சிறிது காலம் அச் சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண பவுத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப் பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின்கீழ் என்றைக்கும் உறங்கும்படிச் செய்யப் பட்டது. (1.172)
நானூறு தலைமுறையாக வேதத்தைத் தொடாத பார்ப்பனர்கள்
இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை. கலியுகத்துக்குப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சஸர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக
(9.126)
சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் என்ற நூல் (சுவாமி விபுலானந்தர் மொழி பெயர்ப்பு)
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,
மயிலாப்பூர்,
சென்னை-4
(1965) வெளியீடு.
விவேகானந்தர் விஜயம்-
சர்மா எழுதுகிறார்
பார்ப்பானுக்கு பரம்பரைத் தகுதியா?
கல்வியறிவு பரம்பரையாய் வர வேண்டும் என்றும், திடீரென்று ஒருவனுக்கு அதைப் புகட்டினால் அவன் விர்த்தியடையான் என்றும் அவர்கள் (பார்ப்பனர்கள்)
வாதம் செய்கிறார்கள். இஃது உண்மையல்ல என்பதற்கு என் கண்ணில் கண்ட நிதர்சனம் கூறுகிறேன்.
கேளுங்கள்!
அமெரிக்காவில் நடந்த சர்வ மத சபைக்கு வந்திருந்த பலருள் ஒரு நீக்ரோ ஜாதி இளைஞனும் வந்திருந்தான். அவன் நாகரிகமற்ற ஆப்ரிக்கா கண்டத்திற் பிறந்த நீக்ரோவாவான்.
அவன் அந்தச் சபையில் அழகிய பிரசங்கமொன்று செய்தான். அது முதல் அவனிடத்தில் நான் குதூகலம் கொண்டு அடிக்கடி அவனிடம் பேசினேன். நீங்கள் சொல்லும் பரம்பரை வாசனை வாதத்தைப் பற்றி நான் என்ன நினைப்பது? ஓ, பிராமணர்களே பிராமணர்களுக்குப் பரம்பரை வாசனையின் காரணமாகப் படிப்பில் பறையனுக்கிருப்பதைவிட அதிக ஊற்றம் இருக்குமாயின்,
பிராமணன் படிப்புக்காகக் கொஞ்சங்கூடப் பணம் செலவிட வேண்டாம். அதையெல்லாம் பறையனுக்கே செலவிடுங்கள்!
- பக்கம்
292-294
நம்பூதிரிப் பார்ப்பனர்கள் வெறிபிடித்த . . .
நான் மலையாளச் சீமையிற் பார்த்ததைவிட அற்ப காரியமிருக்குமோ?
உயர்ந்த ஜாதியான் செல்லும் தெருவிற் பறையன் போதல் கூடாதாம். ஆனால் அப் பறையன் தன் பெயரை மாற்றி ஆங்கிலேய அல்லது துருக்கியப் பெயர்பூண்டு கொள்வானாகில்,
அவ் வீதியிற் போகலாமாம். இதனால் மலையாளத்தாரை வெறிபிடித்தவர் களென்று கொள்ளாமல் வேறெவ்வாறு அவர்களை மதிக்கக் கூடும்? இப்படிப்பட்ட துராசாரங்களை அநுசரிக்கும் அவர்களை மற்றைய இந்து தேசத்தில் ஞானமுள்ள வகுப்பினரெல்லாரும் இகழக்கடவர். தனக்கு உரிமையான குழந்தையாய் இருக்கும்போது அதைப் பட்டினி போடுவதும், அதுவே வேறொருவனுக்குச் சொந்தமானால் அதற்கு வெண்ணெய்யூட்டி வளர்ப்பதும் போலிருக்கிறது.
- பக்கம் 432
ஜாதிகளை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்
சங்கராச்சாரியார் முதலிய பெரியோர்கள் ஜாதிகளை ஏற்படுத்தினவர்கள். அவர்கள் செய்தனவெல்லாம் சொல்வேனாகில் நீங்கள் சிலர் என்மீது கோபம் கொள்வீர்கள்.
ஆனாலும்,
என்னுடைய யாத்திரைகளிலும், என் அனுபவத்திலும் ஏற்பட்டவரையில் அவர்கள் செய்த காரியங்களின் முடிவு வெகு விரோதமாகவே தோற்றுகின்றது.
அவர்கள் கும்பல் கும்பலாய் பலுசிஸ்தானம் தேசத்தாரைப் பிடித்து ஒரே நிமிஷத்தில் க்ஷத்திரியராக்கிவிடுவதும்,
வலையர் கூட்டத்தை ஒரே கணத்திற் பிராமணராக்கி விடுவதுமாகிய இவையெல்லாம் செய்தார்கள். - பக்கம் 434
உலகம் ஒப்பும் ஒரு தத்துவ சாத்திரமுண்டா?
உலக முழுமைக்கும் ஸமரஸமாயுள்ள ஒரே தத்துவ சாத்திரம் ஏதேனுமிருக்கின்றதா? இது காறும் இல்லை. ஒவ்வொரு மதமும் தன் கொள்கைகளையே எடுத்துக் காட்டி அவற்றையே உண்மை யென வற்புறுத்துகின்றது. அஃது இவ்வளவு வற்புறுத்துவதுடன் மாத்திரம் நில்லாது, அஃது உண்மையெனக் கூறும் உண்மைகளை நம்பாதவர்கள் பயங்கரமான ஓரிடத்திற்குப் போகவேண்டு மென்றும் பயமுறுத்துகின்றது. இஃது அவர்களது இயற்கையான துஷ்டத் தன்மையால் உண்டாவது என்று நினைக்கக்கூடாது.
மற்றென்னையெனின்,
அது மனிதர்களது மூளையைச் சம்பந்தித்த மதாவேசம் என்னும் ஒருவித வியாதி விசேஷமாம்
(ஆதாரம் : ஸ்ரீ விவேனாநந்த விஜயம் என்ற நூல் மஹேச குமார சர்மா எழுதியது; 1922-ஆம் ஆண்டில்
4ஆவது பதிப்பாக மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை அச்சிட்டது)
நூல் - பார்ப்பனர்களைத் தோலுரிக்கிறார் விவேகானந்தர்
தொகுப்பாசிரியர் - கி.வீரமணி
Comments
Post a Comment