காவி படிந்த சிவப்பு


  
தோழர்களே!

பகுத்தறிவின் எல்லை பொதுவுடைமை என்ற அய்யா அவர்களின் கொள்கையை நெஞ்சிலே ஏந்தியிருக்கிற நாம், பொதுவுடைமை இயக்கத்தின் போக்குக் குறித்துக் கவனம் செலுத்தாமலும், அது தவறான பாதையில் போகும் போது கவலை கொள்ளாமலும் இருக்க முடியாது.

பொதுவுடைமை இயக்கம் இந்த நாட்டில் தோன்றி சுமார் இரண்டு தலைமுறைகள் ஆகிவிட்டிருக்கின்றன. ஏராளமான தியாகங்களும், எண்ணிறந்த தொண்டும் அவ்வியக்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன. எனினும் புரட்சி தோன்றிடவில்லை; புது வாழ்வு மலர்ந்திடவில்லை. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தைவிட மிக இளைய இயக்கங்கள் பல, பிற நாடுகளில் வெற்றி பெற்றுவிட்ட செய்தியும் நாமறிவோம்.

(திராவிடர் கழகச் சார்பில் 13.7.1980 ஆம் நாள் திருநெல்வேலியில் நடைபெற்ற பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் என்ற தலைப்பில் ஆற்றிய உரை. )

இல்லாமை, வறுமை, மிடிமை, துன்ப துயரம், அடிமை வாழ்வு ஆகிய அனைத்துக் கொடுமைகளும் அளவிலா அளவில் இருந்தும் அவை ஆண்டுதோறும் பெருகி வந்தும், புரட்சி கண்ணுக்கெட்டிய தூரம் வரைக் காணவில்லையே, ஏன்? என, சிந்திக்கத் தெரிந்தவர் உள்ளமெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

கொடிய வறுமை இருந்தும் குன்றனைய இயக்கம் இருந்தும் புதுவாழ்வுப் புரட்சி மலர் பூக்காமல் இருப்பதன் இரகசியம்தான் என்ன? இந்த நாட்டின் பொதுவுடைமை இயக்கம் இயங்கித் திசை மாறிப் போக வைத்த சக்திகள்தான் என்ன?

விழிப்பின்மையின் காரணம்

பொதுவுடைமை இயக்க வரலாறும், நம் அனுபவமும் காட்டுவதெல்லாம், கோடானுகோடி சாமான்ய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வளம்கூட்டச் செய்ய வேண்டிய இந்த இயக்கம், அவர்கள்மீது உள்ள அனைத்து ஆதிக்கங்களையும் பொடிசூரணமாக்க வேண்டிய அந்த இயக்கம், பொல்லாத பார்ப்பன ஆதிக்கக் கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டு விட்டது என்பதுதான். அந்த ஆதிக்கம் அந்த இயக்கத்துக்கு ஓர் எலும்புருக்கி நோயாய் இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தொடக்கத்தில் அது அடித்தள மக்கள் இயக்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது. அவ்வியக்கத்தின் முதல் மாநாட்டு ஊர்வலத்து முன்னே கொடிபிடித்துச் செல்ல ஒரு தாழ்த்தப்பட்ட தோழனே தகுதி உடையவன் என செங்கொடி ஏந்திச் செல்க முன்னால் எனக்கூறி அவன் பின்னே ஏனையோர் அணிவகுத்து இருந்த காட்சியை வரலாறு காட்டுகிறது. ஆனால், அது அந்தக்காலம். போகப்போகக் காலம் மாறுகிறது. வரலாறு கண்ட காலம் முழுதும் இந்த நாட்டில் பார்ப்பனக் குழு சமுதாய ஏணியில் உச்சாணியைச் சென்றடைந்தபின் இதர ஆதிக்கவாதிகளின் துணையோடு என்றைக்கும் தங்கள் நல்வாழ்வு குலையாது இருக்க எல்லா இயக்கங்களின் தலைமைகளையும் தாங்களே கைப்பற்றி வந்திருக்கிறார்கள். அவர்களை வெற்றி கொண்ட பவுத்தத்தையும், சமணத்தையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்திருக்கின்றார்கள். பவுத்த மாமன்னன் அசோகனின் வாரிசுகளின் அரண்மனையையே ஆறேழு தலைமுறைகள் பதுங்கிப் பாய்ந்து தீ வைத்து அழித்தனர்; அரசையும் கைப்பற்றினர். அதுதான் சுங்க வம்ச அடாவடி ஆட்சிப் பிடிப்பு. ஃகர்சருக்குப் பின் நாளந்தா பல்கலைக்கழகத்தையே தீயிட்டு அழித்தனர்.

பார்ப்பனிய இந்துமதக் கொள்கை கோட்பாடுகளைப் பல ஆயிரம் ஆண்டுகாலம் பாமரரின் இரத்தத்திலும் கலக்கும் வண்ணம் கலை, இலக்கிய ஆயுதங்களின் துணையோடு பரப்பிவிட்ட காரணத்தால், சகோதரத்துவம் என்ற கொடியேந்தி வந்த கிறித்துவ மதத்திலும் இந்து மத ஜாதிச் சனியன் புகுந்து கொண்டுவிட்டதைக் காண்கிறோம்.

இந்தியாவில் கிறித்து முழு வெற்றி பெற்றிருந்தால், முகமது முழு வெற்றி பெற்றிருந்தால், மார்க்சும் மண்டியிட வேண்டியிருந்திருக்காது. உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டிய மார்க்சிய இயக்கம் இந்திய மண்ணில் நுழைந்ததும் பார்ப்பனர் கைவண்ணத்தால் பார்வை இழந்து, பாதை மாறி, பரிதவித்து நிற்கின்ற காட்சியைப் பார்க்கின்றோம்.

பார்ப்பனர்களின் செயல்நுட்பம்

பார்ப்பனர் அவ்வியக்கத்தின் பாதையை மாற்றிய வரலாறு நெடிய ஒன்று. அதை அவர்கள் தீர்மானம் போட்டுச் செய்யவில்லை. ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை நிலைநிறுத்தும் முயற்சிகளை, அவ்வமைப்பால் பலனடைவோர் மிக இரகசியமாகவே மேற்கொள்ளுகிறார்கள், என ஹெரால்டு லாஸ்கி கூறுவார். இது பொருளாதார ஏற்றத்தாழ்வை மட்டும் உடைய அய்ரோப்பிய சமூகங்களை வைத்துக் கூறுவதாகும். தொட்டதில் எல்லாம் ஏற்றத்தாழ்வையும், பேதத்தையும் கற்பித்து நடைமுறைப்படுத்திவிட்ட நம் நாட்டில், இந்த அமைப்பால் சுகமடைவோர் எத்துணை இரகசிய முறைகளை சமுதாய, அரசியல், பொருளாதார, தத்துவ, இன்னபிற துறைகளில் கையாளுவார்கள் என்பதை நாம் சுலபமாகவே புரிந்து கொள்ள முடியும். எனவே சமூக அமைப்பையே தலைகீழாக மாற்றவந்த பொதுவுடைமை இயக்கத்தின் தலைமையைக் கைப்பற்றி, அதன் கொள்கைப் பார்வையைக் கோளாறாக்கி, புரட்சிப் பயணத்தையும் பொருளாதாரச் சகதியில் இறக்கி விட்டுவிட்டனர்.

அவ்வியக்கத்தின் மாபெரும் தலைவர்கள் யார்? முதலில் எம்.என்.ராய், பின்னர் எஸ்..டாங்கே. ராய் கம்யூனிச அகிலத்தில் தோழர் லெனினோடு தோளோடு தோள் நின்று பணியாற்றியவர். அமெரிக்கா கண்டம் சென்று மெக்சிகோ நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியவர். இருப்பினும் அவரால் தன் சுயஜாதிப் பெருமையை விடமுடியவில்லை. இந்த உண்மையை உயர்நீதி மன்ற நீதிபதி திரு ஜெகன் மோகன்ரெட்டி அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். எம்.என்.ராய் தன் க்ஷசயஅஉ கூசயனவைடி டிக ஐவேநடடநஉவரயட ஹசளைவடிஉசயஉல குறித்து பெருமை கொள்ளும் செய்தியையும் குறிப்பிடுகிறார்.

அடுத்து டாங்கே வருகிறார். நாற்பது - அய்ம்பது ஆண்டு காலமாக அந்த இயக்கத்தின் பெருந் தலைவராக இருந்து வருகிறார். அவர்களுக்கு அவர் ஒரு தத்துவதரிசி. டீசனநச டிக டுந என்று உலகப் பெரும் விருது பெற்றார். சர்வதேச தொழிற்சங்கத் தலைவர். அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் தலைவர். ஆனால் இன்று வெளிப்படையாக அவர் காட்டிக்கொள்ளும் வைதீகச் செயல்களை இடையில் மறைந்திருந்து செயல்பட்டார் என்றுதான் நாம் அவருடைய செயல்பாடுகளை வைத்து முடிவுக்கு வர முடிகிறது. அவரின் கம்யூனிச இயக்க வாழ்வின் ஆரம்பத்திலேயே தன் வாழ்வு நோக்கத்தை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். கான்பூர் சதிவழக்குக்குப் பிறகு கம்யூனிஸ்ட் என்ற முத்திரை பெற்றான பிறகு தான் சுநஎஎயட டிக ழனேர சுயளாவசய என்ற நூலை எழுதினார். இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் தாரக மந்திரத்தை அன்றே வகுத்தருளிய நவீன காகப்பட்டார் அவர். ஆம், இருபதாம் நூற்றாண்டில் சிவாஜி வழிபாட்டைப் பெரிதும் மராட்டியத்தில் நிலைநாட்டிய இருவருள் டாங்கேயும் ஒருவரே ஆவார். இன்னொருவர் திலகர். எனவேதான் சிவாஜி மகராஜ் என்று வாழ்த்திய மராட்டியர்களிடம் டாங்கே மகராஜ் என்று வாழ்த்துப்பெற முடிந்தது அவரால். சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யத்தின் யோக்கியதை அண்ணாவின் நாடகத்தால், நாவன்மையால் நாடறிந்த ஒன்றாயிற்று. இன்று மராட்டியத்தில் ஒரு பேராசிரியர் சிவாஜி, பார்ப்பன மாந்தர்க்குத் தாரை வார்ப்பதற்கென தன் குடிமக்களை எவ்வளவு வருத்தி வரிகள் வசூலித்தான் என்ற மறைக்கப்பட்ட உண்மைகளை ஆதாரங்களோடு நிலைநாட்டியமைக்காக மராட்டிய அரசு அவரைச் சிறையில் மாட்டியது. வெந்த புண்ணிலே வேல் போல அப்பேராசிரியரைக் கிடுக்கிப் பிடிபோட்டுத் தாக்கினார் - இந்தப் பொதுவுடைமைப் பிதாமகர். கட்சியின் தலைமையைக் கைப்பற்றுகிறார்; இன நன்மைக்கு ஏற்ப அவ்வியக்கத்தின் போக்குகளைத் தன்னாலான மட்டும் மாற்றுகிறார்; வயது முதிர்கிறது; தன் வேடத்தையும் கலைக்கிறார். மார்க்சின் அறிவுச்சாரமே பார்ப்பனிய வேதங்களிலிருந்து பெறப்பட்டதுதான் என்று என்றுமுள்ள ஜாதித் திமிரோடு எழுதிக் காட்டிய தன் மருமகன் பானிதேஷ் பாண்டேயின் ருஎநசளந டிக ஏநனயவோய என்ற நூலுக்கு முன்னுரை எழுதி, ஆம், அது அப்படித்தான் என்று பறைசாற்றியவர். பொதுவுடைமைக் கட்சியின் தலைமை இக்கருத்து தனக்கு உடன்பாடானதல்ல என்று மட்டும் கூறித் தன் கையாலாகாத தனத்தைக் காட்டிக் கொண்டுள்ளது.
கிறித்து மத நாடுகளில் பொதுவுடைமைக் கட்சி எதிலாவது அதன் தலைவர் மார்க்ஸ் விவிலியத்தில் இருந்துதான் விவேகமும், கொள்கை விளக்கமும் பெற்றார் என்று கூறியிருந்தால் அதன் தலைவராக அப்படி கூறியவர் ஒருநாள் நீடித்திருக்க முடியுமா? அல்லது, இசுலாம் நாடு ஒன்றில் உள்ள பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் ஒருவர் திருக்குரான் மார்க்கத்தில் இருந்துதான் மார்க்சியம் பிறந்தது எனக் கூறியிருந்தால் அக்கட்சியின் உறுப்பினர் பதவியைக் கூட அக்கணமே பறித்துக் கொண்டிருக்க மாட்டார்களா? ஆனால், அவர் (டாங்கே) அக்கட்சியின் மதிப்புமிக்க தலைவராகவே நீடித்தார். இன்னும் ஒரு அடி மேலே சென்று, “Vedenthic Origin of Marxismஎன ஒரு நூலை அவரே எழுதி, அதற்கு முன்னுரை எழுத முதுபெரும் பார்ப்பனப் படிப்பாளி டாக்டர். இராதாகிருட்டிணனிடம் கேட்டிருந்தார். (முன்னுரை எழுதும் முன்னரே அப்பெரியவர் காலமாகிவிட்டார்) அவர்களுக்குள் என்ன ஒற்றுமை பார்த்தீர்களா?
இத்தகைய ஒருவர் மீது இந்த விசயத்தில் ஒரு நடவடிக்கையும் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்க முடியாத நிலையைத்தான் அது பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஆட்பட்ட நிலைமை என்று நாம் கருதுகிறோம்.

புரட்சிக்காரர் என்று போற்றப்படும் நம்பூதிரிபாடு, தன் இரு மகள்களுக்கும் வைதீகநெறி வழுவாமல் வதுவை (மணம்) நடத்தி வைத்த புரட்சியையும் தான் பார்க்கிறோம்!

சிவப்பு வேடம் போடும் காவிகள்!

எந்த நாட்டுப் பொதுவுடைமைக் கட்சி நூல்களைக் கண்டாலும், குறிப்பாகக் கொள்கை விளக்க நூல்களைக் கண்டாலும் நாம் ஒன்றைத் தெளிவாகக் காணலாம். அதாவது அவர்கள் நாட்டுச் சுரண்டல் தத்துவங்களை அவர்கள் இனம் கண்டுகொண்டு அதைச் சாடுகின்ற முறையிலே அந்நூல்கள் அமைந்திருக்கும். ஆனால் இந்த நாட்டில் பொதுவுடைமை நூல்களைத் தொட்டுப் பாருங்கள். மேல் - கீழ் என்ற சமூக அமைப்பை நியாயப்படுத்தும் எந்த ஒரு மேட்டுக்குடித் தத்துவங்களையும் தாக்கி எழுதப்பட்ட புத்தகத்தைக் காண்பது அரிதாக உள்ளது. ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்னும் மனுதர்ம மத்திய தத்துவத்தை வைத்து நடத்தப்படும் மடாலயங்களை, பீடாதிபதிகளை, மதவாதக் கோட்பாடுகளை, மடமைக் கொள்கைகளை, மூடமைச் சாக்காட்டை முறியடிக்க வந்த நூல்களாக அவர்களிடம் காண முடியவில்லை.

அவர்கள் நாம் மதத்தை முழுமூச்சுடனும் நாணயத்துடனும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிய லெனின் சீடர்களாக இருந்திருந்தால் அந்த மாபெரும் யுகத் தலைவன், உலகத்தில் உள்ள பொதுவுடைமையர் அனைவருக்கும் இட்ட கட்டளையின் ஒரு பகுதியையாவது நிறைவேற்றி இருப்பார்கள். என்ன அந்தக் கட்டளை? தோழர்களே, ஏங்கல்ஸ் சென்ற நூற்றாண்டிலேயே நாத்திகவாதிகளின் நூல்களையெல்லாம் அச்சிட்டு நிறைய வழங்குங்கள் எனக் கட்டளையிட்டார். இதுவரை நாம் அதைச் செய்யத் தவறியுள்ளோம், இனித் தாமதமின்றி அக்கட்டளையைக் குறைவற நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அது. ஆனால் நம்நாட்டுப் பொதுவுடைமையர் செயலோ இதற்குத் தலைகீழாக உள்ளது. அவர்களுடைய நூலகங்களை ஒருமுறைச் சென்று பாருங்கள். அவர்கள் எப்படி லெனினுக்கு விரோதமாகச் செயல்படுகின்றனர் என்பது விளங்கும். வைதீகத் தத்துவங்களை அவர்கள் சாட மறுப்பதற்கு என்ன காரணம்? வைதீக இந்து மதத்தின் பாதுகாவலர்களான பார்ப்பனர்களின் பிடி அவ்வளவு அழுத்தமாக உள்ளது என்பதைத் தவிர வேறென்ன?

இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனிய இந்து மதத்தின் மிகக் கொடிய தத்துவங்களை அவர்கள் வகுத்த விவரங்களையும் அக்கொடிய கொள்கைகளை அவர்கள் சமூகத்தின் மீது திணித்து, நிலை நிறுத்திய செய்திகளையும் எடுத்துக் கூறிய பேராசிரியர் இராகுல சாங்கிருத்தியாயனைக் கட்சியை விட்டே துரத்திவிட்ட கோரத்தையும் பார்க்கிறோம்.

ஒருமுறை சென்னையிலுள்ள அவர்களுடைய நூல் நிலையத்திற்கு வியட்நாம் புரட்சிகர அரசியல் பிரதிநிதிகள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் அங்கே இருந்த நூல்களை வரிசையாகப் பார்த்துக்கொண்டே வருகின்றபோது சில இடங்களில் சற்று கூர்ந்து கவனிக்கிறார்கள். அந்த இடங்களை உடனே நான் சென்று பார்த்தேன். ஓர் இடத்தில் சோதிட நூல், பிறிதோரிடத்தில் திருவான்மியூர் மான்மியம் இருந்தது; இப்படிப் பல. புரட்சியில் வெற்றிகண்ட வியட்நாம் வீரர்களுக்கு நெடுநாளாகப் புரியாத ஒன்று புரிந்திருக்கும். இந்தியத் தோழர்கள் புரட்சி செய்ய நல்ல நாள் பார்த்துக் கொண்டும், திருவான்மியூர் அப்பனின் திருவருளுக்காகக் காத்துக் கொண்டும் இருக்கிறார்கள்; நாளும் அருளும் கிடைத்தவுடன் நிச்சயம் புரட்சி செய்வார்கள் என்று புரிந்து கொண்டு போயிருப்பார்கள்.

ஊரில் உள்ள எல்லா உளுத்த நூல்களையும் வாங்கி வைக்கின்ற அவர்கள் நல்ல பகுத்தறிவு வெளியீடு ஒன்றைக் கூட வாங்கி விற்க மறுக்கிறார்கள்.

யார்மீது சீற்றம்? எதன்மீது காதல்?

பார்ப்பனிய தத்துவங்களைச் சாட மறுக்கிறார்கள். ஆனால் சுயமரியாதை இயக்கத்தை ஏசுவதில் கூசுவதில்லை. பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிர்ப்புக் காட்டுவதை வகுப்புத் துவேசம் எனக்கூறி வாய் நீளம் காட்டுகிறார்கள். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இயக்கங்களான சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், அம்பேத்கர் இயக்கம், தலித்பேந்தர் இயக்கம் போன்றவர்களைத் தாக்குவதுதான் அவர்கள் நாளும் நடத்திவரும் தத்துவப் போராட்டம். ஒரு பொதுவுடைமைத் தலைவர் தலித் பேந்தர் இயக்கத்தை ஒரு பிற்போக்குச் சக்தி என வருணிக்கிறார். இவர்களின் இந்தப் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்கு எதிர்ப்பு என்ற போக்கு அவர்களைப் பார்ப்பன முகாமில் சென்று தள்ளிவிடுகிறது. எனவே தான் இந்த நாட்டில் சமூக அமைப்பின் உச்சாணியில் உள்ள பார்ப்பனருக்கு அனுசரணையாக அவர்கள் பேசுவது, எழுதுவது, செயல்படுவதுமாக உள்ளார்கள்.

கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபடாத நேரம். இந்தியக் குடியரசுத் தலைவரிடம் ஒரு மாபெரும் கோரிக்கை சாசனம் (ழுசநயவ ஞநவவைடி) அளிக்கிறார்கள். அதில் ஒரு கோடிக்கு மேல் கையெழுத்துப் பெறுகிறார்கள். அக்கையெழுத்து இயக்கம் வெற்றி பெற அவர்கள் கைக்கொண்ட முறைதான் அவர்களின் புரட்சிகர தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதாவது முதல் பெயரை அரிஓம் என எழுதி இயக்கத்தைத் தொடங்கினார்கள். ஊர் சிரித்த நிகழ்ச்சி இது.

டாக்டர் சங்காலியா என்ற ஒரு பெரும் வரலாற்று ஆய்வாளர் இராமாயணத்தைப் பெரிதும் ஆராய்ச்சி செய்து அது ஒரு கற்பனைக் கதை என முடிவுக்கு வந்து அம்முடிவுகளைக் கொண்ட இராமயணா என்ற நூலை வெளியிட்டார். அந்த நூலுக்கு விமரிசனம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டில் வருகிறது. அந்த ஏடு இம்மாதிரி நூல்களால் நம் கலாச்சாரப் பெருமைகளைக் குறைத்துவிட முடியாது என்று அங்கலாய்க்கிறது.

ஒரு பாரிஸ்டர் ஆன பொதுவுடைமைத் தலைவர் சட்ட மன்றத்திலே ஆவணி அவிட்டத்துக்கு விடுமுறை வேண்டுமெனக் கூறினார். பார்ப்பனர்கள் தான் வழக்கமாக இந்து மதத்தின் கெட்டித் தன்மையை மறைத்து அதற்குத் தாராளத்தன்மை இருப்பதாகப் பசப்புவர். அந்த ஏமாற்று வாதத்தையே எடுத்தியம்புகிறார் இன்னும் ஒரு முதுபெரும் கம்யூனிஸ்ட். அவர் கூறுகிறார் அய்ரோப்பாவில் கிறித்துவர் கம்யூனிசத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள் இங்கு அப்படி அல்ல. இங்குதான் இராமன் படத்தை எரிக்கலாம், பிள்ளையார் சிலையை உடைக்கலாம் என்கிறார். பேசுபவர் சங்கராச்சாரியர் அல்ல; சர்வ தேசவாதி.

இந்தியப் பொதுவுடைமையர் பார்ப்பனரின் வாதங்களை மட்டுமல்ல அவர்களின் வழிமுறைகளையும் கையாளுகிறார்கள்.

உதாரணமாகச் சில ஆண்டுகளாக இந்தியப் பார்ப்பனத் தலைமை பல்வேறு வகைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களுக்கும் இடையே பகைமையை வளர்த்து வருகிறது. சமூகத்தை ஜாதிக் கூறுகளாக ஆக்கி நிலை நிறுத்தி வந்ததன் பலனாக தங்கள் உயர்ந்த இடத்தைப் பாதுகாத்து வந்தவர்கள் அவர்கள். இருபதாம் நூற்றாண்டிலும் அதே பிளவுகளை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு அதன்மூலம் இன்று வரை தங்கள் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள். எனவே அவர்கள் பிரச்சாரங்களிலும் செயல் திட்டங்களிலும் இந்த இருபெரும் பிரிவுகளுக்கும் இடையே விரோதத்தை வளர்க்கும் உள்நோக்கம் உள்ளது. எனவேதான் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாங்கள்தான் காப்பாற்றுவதாகக் கபட நாடகம் ஆடுகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளும் அவர்களுக்கு ஒத்தூதுகிறார்கள். அரிசனப் பாதுகாப்பு வாரம் கொண்டாடுகிறார்கள். அதாவது அவர்கள் அரிசன விடுதலைக்காக நிற்கவில்லை என்பதைக் காட்டிக் கொள்கிறார்கள்.

இந்த நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை எதிர்க்கின்ற அனைவரையும் வெள்ளையனுக்கு வால்பிடிப்பவர்கள் என வாய்மதம் சாட்டுவார்கள். அய்யாவை, அம்பேத்கரை, ஏன் ஜெகஜீவன்ராமைக் கூட அப்படி அவர்கள் கூறுவதுண்டு. அதே குற்றச்சாட்டை இந்தியப் பொதுவுடைமையரும் நம்மீது கூறுவது உண்டு. ஆனால் இந்த நாட்டுப் பார்ப்பனத் தலைமைக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக தற்காலிகமாக இவர்கள் போகும் சமயங்களில்கூட இவர்கள் மீதும் அதே சேற்றை அவர்கள் வாரி இறைக்கிறார்கள். அவர்களுடைய தேசிய கண்ணோட்டம் அப்படி. ஆனால் இந்த நாட்டில் தேசியம் என்பதன் பேரால் உள்ள அனைத்தும் பார்ப்பனிய நன்மைகளைக் காப்பதாகவே அமைந்திருக்கின்றன என்பதை எந்த ஒரு அறிவுள்ள ஜீவனும் அறிந்திருக்கும். பண்டித நேரு கூட பிராமணிய இந்துமத சாரமாகவே தேசியம் என்பது இந்தியாவில் உள்ளது என்பதைத் தனி வரலாற்றில் கூறியுள்ளார்.

நமது பரம்பரை

நம்மைப் பார்த்து ஜஸ்டிஸ் பரம்பரையினர் என்று ஏதோ தவறான பரம்பரையை நாம் சேர்ந்துள்ளது போல இவர்கள் கூறியுள்ளதை நாம் பார்க்கிறோம். முதலில் ஜஸ்டிஸ் கட்சியின் சமூக நியாயவாதங்களை இவர்கள் மறைக்கிறார்கள். அது பார்ப்பன நன்மைக்கு உகந்ததாக இருக்கிறது. உண்மையில் ஜஸ்டிஸ் கட்சியில் சமூக நியாய வாதங்கள் ஒருசில மேட்டுக் குடியினரிடம் சிக்கிச் சிதைந்து போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் சேலத்திலே 1944இல் ஜரிகைக் குல்லாக்களே வெளியேறுங்கள்! என முழக்கம் இட்டு அவ்வியக்கம் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது என்பது இப்பொதுவுடைமையர் அறியாதது அல்ல. அய்யாவும், திரு.சிங்காரவேலரும் சேர்ந்து தயாரித்த ஈரோட்டுத் திட்டம் எவ்வளவு புரட்சிகரமானது என்பதை இவர்கள் அறிவார்களா? இதில் வெள்ளையன் உட்பட அனைத்து அன்னியனும் வெளியேற வேண்டும் என்று கண்டிருப்பதை இவர்கள் மறைக்க முடியுமா?

அய்யா அவர்கள் நீதிக்கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அதை மக்கள் கொள்கைகளாக மாற்றித் தன் அமைப்பை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்ட காரணத்தினால் தான் ஜஸ்டிஸ் கட்சி செல்வாக்கிழந்து மறைந்தது என்ற உண்மையை டாக்டர் பேக்கர் என்பவர் சமீபத்தில் வெளியிட்ட ஓர் ஆராய்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார். நெடுநாளைக்கு முன்னரே அய்யா அவர்கள் காரைக்குடி நீதிக்கட்சி மாநாட்டில், தன் சமுதாயப் புரட்சிக் கருத்துக்களுக்கு நீதிக் கட்சியில் இடம் இல்லாவிட்டால் அந்தக் கட்சித் தலைமை தனக்கு வேண்டியதில்லை என்று தெளிவாகப் பேசியுள்ளார்கள். இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை. கண்டு கொண்டு அவர்கள் நம் நியாயத்தை ஒத்துக் கொண்டால் அவர்களுக்குப் பிரம்மகத்திதோசம் பிடித்துவிடும்.

புரட்சியும் பொருளியல் புரட்சியும்

சமுதாயப் புரட்சி என்ற சொற்றொடரையே அவர்கள் கையாளுவதில்லை. ஏனெனில் சமுதாயப் புரட்சியில் முதல் வீழ்ச்சி பார்ப்பனருக்கும் அவர்கள் கூட்டாளிகளான பனியாக்களுக்கும்தான். எனவே பொருளாதாரப் புரட்சி என்ற அபத்தமான சொற்றொடரையே எப்போதும் கையாண்டு வருகின்றனர். அப்படி ஒரு புரட்சியை செய்யத்தான் கம்யூனிச இயக்கம் உள்ளது என்று மார்க்சிய அகராதியில் எங்கும் கிடையாது. பொருளாதார வாதத்தை எப்போதும், மார்க்சிய ஞானபிதாக்கள் கண்டனம் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இங்கு பேசுவது, செய்வது எல்லாமே இழிந்த பொருளாதார வாதமே ஆகும். எனவேதான் அவர்கள் மார்க்சும், ஏங்கெல்சும் தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களின் அரசியல் களம் எனவும், வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக சங்கம் நடத்தப்படக்கூடாது என்றும் கூறியதைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு மாநாடு கூட்டி தொழிற்சங்கத்துக்கு அரசியல் தேவையில்லை என்று தீர்மானம் போட்டு, மார்க்சின் முதுகில் குத்தியிருக்கிறார்கள். எனவேதான் தொழிற்சங்கம் பற்றி மார்க்ஸ் ஏங்கல்ஸ் என்ற நூலை அவர்கள் வெளியிட்டுப் பரப்ப மறுக்கின்றனர். மறுத்துவிட்டு தொழிற்சங்க இயக்கத்தையே பஞ்சப்படி, போனஸ் கோரிக்கை என்ற வெறும் பொருளாதார சகதியில் இறக்கி விட்டு விட்டார்கள். இதுவும் இந்த நாட்டின் பார்ப்பன - பனியாக் கும்பலுக்கு உதவிகரமான வேலைதான்.

வடமொழி நேயமும் சனாதன வேட்கையும்

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில் பார்ப்பனிய ஆதிக்கப் போக்கின் சின்னமாக இருக்கின்ற வடமொழி ஆதரவுப் போக்கு இருப்பதை எவரும் காணலாம். அவர்கள் தங்கள் இதழ்களுக்குக்கூட சாந்தி, ஜனசக்தி என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர்களைச் சூட்டிப் பெருமைப்படுகிறார்கள். ஏன்? அவர்கள் ஆதரவில் பிராமண இளைஞர் மாநாட்டை அன்றே கூட்டினார்கள்.

இப்போது அந்த இயக்கம் இரு கூறுகளாகப் பிரிந்து உள்ளது. நாம் எடுத்துக் கொண்ட விசயத்தைப் பொறுத்தவரை இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கட்சியினர், பார்ப்பனிய நலன்களைப் பாதுகாப்பதில் எப்போதும் சல்லடம் கட்டிக் கொண்டு முன்னின்று வருகின்றனர் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். அவர்கள் கட்சியைப் பொறுத்தவரை சமூகத்தில் உள்ள சனாதன அமைப்பான பிரமிடு போன்ற மேல் கீழ் அமைப்பை அப்படியே அங்கே காணலாம். ஆணைப் பெண்ணாக வேண்டுமானாலும் மாற்றிக் காட்டலாம், அங்குள்ள அய்யர் ஆதிக்கத்தை யாராலும் மாற்ற முடியாது.

அங்கே சிவப்புப் பாதை; இங்கே காவிப் பாதை

இறுதியாகப் பொதுமைக் கொள்கையின் பூபாள ராகமெனத் திகழ்ந்த பெருங்கவிஞன் மாயாகாவஸ்கியின் லெனின் மாகாவியத்திலிருந்து ஒரு காட்சியை நினைவுபடுத்துவதன் மூலம் இந்தியப் பொதுவுடைமையரின் பார்ப்பனிய ஆதரவுப் போக்கைச் சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன், அக்கவிதை வரிகளின் பொருள் இதுதான்: மாபெரும் தோழர் லெனின் கட்டளை இட்டுவிட்டார்! கோடிக்கால் பூதமெனத் தொழிலாளி கொதித்தெழுந்துவிட்டான்; அவன் கைகளில் உள்ள துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் துரிதமாகப் பாய்ந்து சென்று அவனுடைய எதிரிகளைத் துவம்சம் ஆக்குகின்றன; முதலாம் எதிரி ஜார் மன்னன்; இரண்டாம் எதிரி மாதாக்கோவில்; மூன்றாம் எதிரி அரசின் சிறைச்சாலையும், தூக்கு மேடையும்.

இக்கவிதை வரிகளுக்கு உருக்கொடுத்து ஓவியமாக ஒரு சோவியத் ஓவியன் தீட்டியுள்ளான். லெனின் கட்டளை இடுவது போலவும், செங்கொடி தாங்கிய சிங்கங்கள் என நிற்கும் தொழிலாளர்களுடைய துப்பாக்கிகளின் தாக்குதல்களுக்கு மன்னனின் மணிமுடியும், அவனின் சிறைச்சாலையும் தூக்கு மேடையும் மட்டுமல்ல பலி ஆவது, மாதாக் கோவிலையும் மறக்காமல் தாக்குகிறார்கள். இந்தக் காட்சி பொதுவுடைமைத் தத்துவத்தின் உயிரோட்டத்தைக் காட்டுவதாக உள்ளது.

ஆனால் இங்கு நாம் காணும் காட்சி என்ன? கோயில் பெருச்சாளிகளாம் குல்லூகப்பட்டர் கூட்டத்தார் எவரும் இவர்களைக்கண்டு குலைநடுங்குவதில்லை. மாறாக அவர்களின் உற்ற நண்பனாக இவர்களைக் கருதும் காட்சியைக் காண்கிறோம். கோவிலையும், கோவிலை அடிப்படையாகக் கொண்ட குலத்துக்கு ஒரு நீதியையும் சாடிச் சமர் செய்யும் நம்மை அவர்கள் வகுப்புவாதிகள் எனக் கூறுவதன் மூலம் தங்கள் பார்ப்பனிய அடிவருடித் தன்மையைப் பார் எங்கிலும் பறைசாற்றிக் கொள்கின்றனர்.

எனவே தோழர்களே, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின்மீது பார்ப்பனிய ஆதிக்கத்தின் தன்மை இத்தகையதே!

புரட்சி பூக்காத இரகசியம் .... விடுதலை (சென்னை) 26-31 சூலை 1980    

பெரியாரைக் குறை கூறும் பார்ப்பனப் பொதுவுடைமையரைக் கண்டுகொள்க... ஊரும் உலகும் (கோவை) அக். 1984.      
       
தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கோலோச்சியது மனு தருமம்தான்! இந்த நாட்டை இன்னும் ஆண்டுகொண்டிருப்பதும் மனுதருமம் தான்!
வரலாற்றுப் பின்னணியோடு விளக்கிடும் அரிய கட்டுரை!      
   
போர்க் களத்தில் நிற்கும் கழக மறவர்களுக்குப் பயன்படத்தக்க அறிவு விருந்து.      - விடுதலை, 25.4.1981


 நூல் - மன்னர்களும் மனு தருமமும்

ஆசிரியர் கரூர் பி.ஆர்.குப்புசாமி பி,ஏ.பி.எல்.
                                               பி.ஜி.டிப்.ஆந்த்ரோ











Comments

Popular posts from this blog

பார்ப்பனர்களைத் தோலுரிக்கிறார் விவேகானந்தர்

மன்னர்களும் மனுதருமமும்

சனாதனமும் சமீபதனமும்