சனாதனமும் சமீபதனமும்


இன்றைய கலந்துரையாடலுக்கு நாம் எடுத்துக் கொண்டிருக்கிற தலைப்பு சனாதனமும் சமீபதனமும் என்பதாகும். இதற்கு முற்றும் பொருத்தமான தமிழ்ச் சொல்லாட்சியை இடுவது கடினமாக உள்ளது. ஏனெனில் சனாதனம் என்பதற்குப் பழைமை என்று பொருள் கொள்வது ஏற்புடையதாக இல்லை. காரணம், பழைமையிலும்  வரவேற்கத்தக்க கூறுகள் உண்டு. ஆனால், சனாதனம் என்றாலே மாறும் பண்பு அற்றது என்பதுதான் பொருள் ஆகின்றது. மாறும் பண்பு அற்ற பழைமையாகிய சனாதனம், புதிய பணக்காரர், புதிதாகச் செல்வத்தைச் சுருட்டி வைத்திருப்போர், புதிதாகப் பொருள் ஆளுமையை ஏந்தியோர் ஆகிய சமீபதனக்காரர்களால் எவ்வாறு கட்டிக்காக்கப்படுகிறது - எவ்வாறு வலிமையூட்டப்படுகிறது என்பதை நாம் கண்டாக வேண்டும். ஏனெனில் சமீபதனம் சிறப்பாக ஆட்சி புரிய வேண்டுமானால் சனாதனம் வலிவோடு திகழ வேண்டிய தேவையுள்ளது; சனாதனத்தின் வாழ்வுக்குச் சமீபதனத்தின் உதவி கட்டாயமான முறையில் வேண்டப்படுகிறது. இவை இரண்டும் குமுகாய மாறுதலுக்கு - முற்போக்குத் திசையில் மக்களினம் செல்வதற்கு எவ்வகையில் தடைகளை இடுகின்றன என்பதை நாம் கண்டாக வேண்டும். அதன்பின்பு இரண்டின்மேலும் தாக்குதலைத் தொடுக்க வேண்டும். பகுத்தறிவாளர்களின் கடமை இதுதான்.

பகுத்தறிவு இயக்கத்தின் எல்லை

புரட்சி மலர்வதற்கான சூழலை ஆக்க முனைவதும், இதற்கு எதிரானவற்றைச் சிதைத்து அழிக்க வினையாற்றுவதுமே பகுத்தறிவாளரின் கடமைகளாகும். பகுத்தறிவு இயக்கத்தின் எல்லை இதுதான். ஆனால், சில பொதுவுடைமையாளர்கள், மார்க்சியம் பயின்றவர்கள் பகுத்தறிவாளரைப் பார்த்து, நீங்கள் பொருளியல் போராட்டத்திற்கு என்ன பங்காற்றினீர்கள்? ஒட்டு மொத்தப் புரட்சிக்கு என்ன செய்துள்ளீர்கள்? என்றெல்லாம் கேள்வி போடுகிறார்கள். புரட்சியை மலரச் செய்வதற்கும் புரட்சிகரமான வாய்ப்புகளை மலரச் செய்வதற்கும் இடையிலுள்ள எல்லைக் கோட்டினை இவர்கள் காணத் தவறுகிறார்கள். பகுத்தறிவு இயக்கத்திற்கு உள்ள முற்போக்குப் பண்பை இஃது ஆற்றி வருகின்ற முற்போக்குக் கடமைகளை இவர்கள் பார்க்கத் தவறுகின்றார்கள். உறவுகளைப் பழுதறப் பாராமையால் நேரும் குறைபாடுகளே இவை எனலாம்.

சனாதனம் என்ன சொல்கிறது?

மீண்டும் செய்திக்கு வருவோம். முற்போக்குத் திசையில் எடுத்து வைக்கப்படுகின்ற காலை வாரி விடுவது மட்டுமல்லாமல், பிற்போக்குத் திசையில் செலுத்தும் வலிமையும் சனாதனத்திற்கு உண்டு. சனாதன தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும், உயிரூட்ட வேண்டும் என்று எல்லாச் சங்கராச்சாரிகளும், மடாதிபதிகளும் பேசத் தொடங்கியுள்ளார்கள். இதுவரையும் இப்படித்தான் பேசி வந்தார்கள். இந்தச் சனாதனம் என்பது என்ன? இந்தியாவில் நால்வருண முறை நீடிக்க வேண்டும்; அவனவன் குலத்தொழிலை அவனவனே செய்து வரவேண்டும், ஒருவன் இரந்து வாழ்வதும்கூட அவன் பெற்ற நற்பேறுதான்; முற்பிறவிகளில் ஒருவன் செய்திருக்கும் நல்வினை தீவினைகளைப் பொறுத்துத்தான் இப்பிறவியில் ஒருவனின் குலமும் தொழிலும் அமைந்துள்ளது; இனி மாற்றப்படக்கூடியது எதுவும் இல்லை என்னும் மட்டமான பிற்போக்குக் கருத்துகளைப் பச்சையாகக் கூச்சம் இல்லாமல் சொல்வது தான் சனாதனம். இதைக் காப்பாற்றியாக வேண்டும் என்று சங்கராச்சாரிகளும் இராசகோபாலாச்சாரிகளும் வெளிப்படையாக எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்.

சனாதனம் = இந்து : சனாதனமே இந்து

இப்போது, சனாதனம் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டிய இடங்களிலெல்லாம் இந்து என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்துதர்மம் என்று இவர்கள் சுட்டுவது உண்மையில் சனாதன நெறியைத்தான். ஆனால், ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். சனாதனத்தைக் காப்பதற்காகவே இவர்கள் இசுலாமியரை எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் இந்த இந்து என்னும் சொல்லே பாரசீகர் இட்ட சொல்தான். அவர்கள் இசுலாமியர் என்பது அனைவருக்கும் தெரியும். சிந்து என்னும் ஆற்றின் பெயரை அவர்கள் மொழியில் ஹிந்து எனக் குறிப்பிட்டார்கள். இந்த ஆற்றிற்கு இப்பால் இருந்த நாட்டையும், இங்கிருந்த வழிபாட்டு முறைகளையும் இச்சொல் குறிப்பிடுவதாயிற்று. இந்தப் பெயரைத்தான் இசுலாத்தை எதிர்க்கும் சனாதனிகள் சனாதன மதத்தைக் குறிக்க ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். (பேச்சுக்காக ஒன்றை எடுத்துக் காட்டலாம்; தமிழ் என்பதைத்தான் வடமொழியாளர்கள் த்ரமிள - திரவிட - திராவிட என்று குறித்தார்கள். இப்போது, வடமொழிக்கு எதிரானதான தமிழ்நெறியை நாம் திராவிடம் என்னும் சொல்லின் மூலமாகக் குறிப்பிடுகிறோம்).

சனாதனத்தின் செயலாக்கங்கள்

இந்தச் சனாதனம் என்னென்ன செய்துள்ளது? இதுதான் புத்தமதத்தை ஊடுருவி அழித்தது, புத்தரை உருச்சிதைத்துக் காட்டியது, அன்று முதல் இன்று வரை இதுதான் சட்டமாக இருந்து வருகிறது; இதுதான் நேற்றும் இன்றும் நம்மை ஆண்டு வருகிறது; இதுதான் வாழ்க்கை முறையாக உள்ளது; எவர் எவர் எந்தெந்த முறையில் உடை உடுக்க வேண்டும் என்பதை இதுதான் கட்டமைத்தது; இதனை மீறியவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை இதுதான் பெற்றுத்தந்தது; இதுதான் ஊர்களின் அமைப்பை உருச்சமைத்தது. இன்னும் சிற்றூர்களின் அமைப்பைக் கவனித்தாலே இது விளங்கும். ஊர் நடுவே கோவில் இருப்பதும், அதனால் பிழைக்கும் ஜாதிகளும், அதனைக் காக்கும் ஜாதிகளும் அடுத்தடுத்த தெருக்களில் இருப்பதும் ஒதுக்கப்பட்டவர்கள் ஊருக்குப் புறத்தே இருப்பதும் ஒடுக்கப்பட்டவர்கள் ஊரைவிட்டுத் தொலைவில் இருப்பதும் இந்தச் சனாதனத்தின் ஏற்பாட்டால் அமைந்த முறைகள்தாம்.

சனாதனம்பேணிகள்

இந்தச் சனாதனம் நிலைபேறு அடைவதற்குச் சங்கராச்சாரி அடிப்படையாக இருந்தார். எனவேதான் அவரை நடமாடும் தெய்வம் என்று குறிப்பிடுகிறார்கள்.

சனாதன நிலைபேற்றுக்கான திட்டங்கள் இவரைப் போன்றவர்களால் தீட்டப்பெறுகின்றன. ஆனால், இவை தாமே நடைமுறைப்பட்டு விடுவதில்லை. இவற்றை நடைமுறைப்படுத்த அக்காலத்தில் மன்னர்கள் இருந்தார்கள். இன்று அவர்களைவிடவும் வலிமையானவர்களாகச் சமீபதனர்கள் இருக்கிறார்கள். சொல்பவர்கள் மடாதிபதிகள் என்றால், செய்பவர்கள் இந்தச் சமீபதனர்களே! எனவே, சனாதனக் கோட்டையை மட்டும் தனியாகத் தாக்கிப் பயனில்லை; சமீபதனத்தையும் சேர்த்தே தாக்கவேண்டும்.

சனாதனம் + சமீபதனம் = ஆரியமயம்

சனாதன, சமீபதனக் கூட்டுமுயற்சியால் இன்று பற்பல வேலைகள் நடைபெறுகின்றன. இந்திய மக்கள் - எல்லாத் தேசிய இனத்தவரும், மனவகையில் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவை ஆரியமயமாக்கும் (ஹசலயணையவடி) பணி மிக விரைவாக நடைபெறுகிறது. முன்பெல்லாம் ஓரளவு குமுகாயச் சிந்தனை உள்ள குடும்பங்களில் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டும் பழக்கம் இருந்தது. படிப்பறிவில்லாக் குடும்பங்களில் ஜாதி வழக்கப்படி பழைய பெயர்கள் சூட்டப்பட்டுவந்தன. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் கவனித்தோமானால், வடமொழி மோகம் அதிகமாகியுள்ளது. குழந்தைகளுக்கு வடமொழி ஒலிச் செப்பத்துடன் பெயர் சூட்டும் வழக்கம் தமிழ்நாட்டில் பெருகியுள்ளது. படிப்பறியாக் குடும்பங்களில்கூட இதே நிலைமைதான். பெயரில் என்ன இருக்கிறது என்று எளிமையாக நினைக்க இயலாது. பெயரிடல் ஆரியமயமாவதில் ஒரு கட்டம். வாழ்க்கையில் கீழ்நிலையில் உள்ளவன்கூட, இவ்வாறு பெயரிட்டுக் கொள்வதன்மூலம் தன்னை மேல்தட்டு மாந்தனாய் ஆக்கிக் கொள்கிறான். தானும் ஓர் உயர் ஆரிய ஜாதி ஆக முயல்கிறான். வணக்கம் என்று சொல்லப்பட்டு வந்த நடைமுறையில் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது. நமஸ்காரம் என்று சொல்லும் புதிய போக்குகள் தோன்றியுள்ளன. தமிழில் பெயர்கொண்டிருந்த பல சிற்றூர்ப்புறக் கோவில்கள்கூட, இப்போது வடமொழிப் பெயர்களை ஏந்தத் தொடங்கியுள்ளன. இப்படி வடமொழிப் பெயர்களின்மேல் ஏற்பட்டுள்ள வேட்கை, வடமொழிப் பற்றாளரைக் காதலிப்பதில் போய் முடியும்; வடமொழி உறவாளரை அன்பு செலுத்துவதில் போய்முடியும்; வடமொழிக் கருத்துக்களை ஏற்பதில் போய் முடியும்; இந்தியா ஆரியமயமாவதில் போய்முடியும்.

இலக்கியத்தில் ஆரியமயம்; தேசியத்தில் ஆரியமயம்

முன்பு பாக்கள் நல்ல தமிழில் இருக்கும். புரட்சி மைக் கருத்துகளை நல்ல தமிழ் உணர்வுடன் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் வழங்கினார். அன்று ஒரு பேரெழுச்சி தோன்ற அவர்தம் பாக்கள் அடிப்படையாய் இருந்தன. ஆனால், இன்று புதிய பாக்கள் வந்துள்ளன. மிகப்பெரும் புரட்சிக் கருத்துகளை இவற்றின் மூலம் வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், இவற்றில் வடமொழிச் சொற்கள் ஏராளமாகக் கலந்துள்ளன. இது ஒரு திட்டமிட்ட முயற்சியாகும். சமற்கிருதக் கலப்பு மொழியில் இடது சார்புக் கருத்துகளை மொழிவதன்மூலம், சமற்கிருத மயத்துக்கே ஒருவகை இடது வண்ணம் பூச இவர்கள் முயல்கிறார்கள். ஒரு இடது சார்புக் கருத்துகளையும் கூட ஆரிய மயப்படுத்தும் ஒரு முயற்சியேயல்லாமல் இதை வேறு எப்படிக் கூறலாம்? இன்று ஆரிய நெறியாகிய பிராமணிய இந்து மதத்தைத்தான் தேசியம் என்று கூறுகிறார்கள். இதனையே நிலைநாட்ட முயல்கிறார்கள். ஏன் இந்த நிலை? ஆதிமுதல் அரசியற்களமும் அக்ரகாரம் தான்; இன்றைய அரசியற்களமும் அக்ரகாரம் தான். எனவே அவர்களின் அழிம்பு எண்ணங்களே அரசியற் கருத்துகளாக வடிவம் பெற்று வருகின்றன.

எது தேசியம்?

உண்மையில் தேசியம் என்பது என்னவென்று நாம் பார்ப்பது நலம். மார்க்சிய லெனினியக் கருத்தின்படி, ஸ்டாலின் அவர்களின் விளக்கத்தின்படி, இந்தியத் தேசியம் என எதுவும் இல்லை. கேரளத் தேசியம் உள்ளது; தெலுங்குத் தேசியம் உள்ளது; மராட்டியத் தேசியம் உள்ளது; வங்காளத் தேசியம் உள்ளது; தமிழ்த் தேசியம் உள்ளது; ஆனால் இந்தியத் தேசியம் என எதுவுமே இல்லை. இவர்கள் கருத்திலே சனாதன இந்து தர்மமே இந்தியாவை இணைக்கும் ஆற்றலாகவும், இந்தியத் தேசியம் என்பதாகவும் இருந்து வருகிறது. மக்கள் எவ்வளவு கொடிய முறையில் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதற்கு இஃது ஒன்றே சான்றாகும்.

புரட்சியாளரையும் வறட்சியாளராக்குவது

சனாதனத்தில் - மாறாமைப்பண்பின் - ஆட்சி எல்லைகள் விரிவாகிக் கொண்டே வருவதை நாம் கவனிக்க வேண்டும். தொழிற்கழகங்கள் தோன்றியதன் காரணமே குமுகாய மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காகத்தான். ஆனால், இன்றைய தொழிற்கழகத் தலைவர்கள் யாவரும் புதிய முதலாளிகளாக மாறிப் போயுள்ளனர் - தொழிற்சாலை முதலாளி தம்மை மதிப்புடன் நடத்தும் முறைகளைப் பெருமிதத்துடன் இவர்கள் கூறுகிறார்கள். தொழிலாளர்கள் தமக்குக் கீழ்ப்பணிந்து ஏவல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்; அதையே வெளியில் பேசுகிறார்கள். இது ஒரு புதுவகை முதலாளிய மனப்பாங்கே ஆகும். இந்த மனப்பான்மைமூலம் முதலாளிகளுக்கு இணையாக வர அவர்கள் விரும்புகிறார்கள், இது எப்படி நடந்தது? மாற்றத்தை விரும்புவோர் எப்படிப் பழைமையை நோக்கித் திரும்பினர்? இங்குதான் சனாதனம் - சமீபதனம் என்பனவற்றின் கூட்டுத்திட்டம் வெளிப்படுகிறது.

இக்கூட்டு முயற்சியானது, மாற்றம் விரும்புவோரை உடைத்துக் கூறுபடுத்துகிறது. ஒரு சார்பினரைத் தன் பக்கம் இழுத்து பெருமைப்படுத்தி, அவர்களின் உள்ளத்தில் முதலாளிய மனப்பாங்கை ஊட்டுகிறது. பாட்டாளியரை வெறுக்கும்படியான மனப்பாங்கை மறைமுகமாக ஊட்டுகிறது. இப்படித்தான் தொழிற் கழகத் தலைவர்கள் முதலாளிய மனப்பான்மையைப் பெறுகிறார்கள். காலச் செலவில் புரட்சி என்ற சொல்லையே வெறுப்பவர்களாக மாறிப் போகிறார்கள்.
சனாதனம் - சமீபதனம்

உறுதுணையின் உண்மை என்ன?

குமுகாய மாற்றம், மக்கள் எழுச்சி, புரட்சி எண்ணம் ஆகியவை தடுக்கப்பட வேண்டுமானால், சனாதனம் நிலை பெற்றிருக்கவேண்டும். எனவே, சமீபதனம் இதன் பொருட்டு ஏராளமான பணத்தை அள்ளி வீசுகிறது. இப்படி வீசப்படும் பணத்தால் இப்போது, பெரும் பெரும் கோவில்கள் கட்டப்படுகின்றன. குடமுழுக்கு போன்ற நிகழ்ச்சிகளில் பணம் தண்ணீராய்ச் செலவாகிறது. இது முற்றும் மக்களிடம் கொள்ளையிடப்பட்ட பணம். சமீபதனர்களால் மட்டுமே நயம்பட்ட நாகரீக முறையில் மக்களிடம் கொள்ளையடிக்க முடியும்; மக்களின் சிந்தனைக் கண்களையே குருடாக்க முடியும். முற்காலத்தில், மன்னர்களும், ஜமீந்தார் போன்ற செல்வர்களும் சனாதன வளர்ச்சிக்கு உதவியதைவிட ஒருபடி அதிகமாகவே சமீபதனர்கள் இப்போது உதவி வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

கொள்ளையரோடு உறவாடும் கொள்ளையர்கள்

சனாதனத்தை நிலை நாட்டவும், குமுகாய மாற்றத்தைத் தடுக்கவும் முனையும் சமீபதனர்கள், அரசியலில் அப்பட்டமான கொள்ளையர்களுடனேயே கூட்டு வைத்திருக்கிறார்கள். வடநாட்டில், சம்பல் கொள்ளையர் போன்ற பெரும் கொள்ளைக்காரர்களிடம் தேர்தல் பணம் பெறாத அரசியற்காரர்கள் இல்லையென்றே கூறலாம். இக்கொள்ளைக் கூட்டங்களிலிருந்து, பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களாகக் கூடச் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.

இப்படி நேராகவும், மறைவாகவும் கொள்ளையிடப்பட்ட பணம் புரோகிதருடன் கூட்டுச் சேர்கிறது. இந்தக் கூட்டே பார்ப்பன பனியாக்கூட்டாக இருந்து இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது. எனவேதான் நம் தாக்குதலே இருமுனைத் தாக்குதலாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறோம்.

கூறுபடுத்துவதே கொள்கை

இப்போது இந்தக் கூட்டுச் செய்துவரும் ஒரு பணி கவனித்திற்குரியது. மக்களிடையே விழிப்பு உணர்ச்சி தோன்றி, புரட்சிக்கான சூழல் உருவாவதற்கான அடிப்படை மக்களிடையே ஒற்றுமையுணர்ச்சி தோன்றுவதேயாகும். ஆனால், இந்தப் புதிய பணமும் புரோகிதமும் ஒற்றுமையுணர்ச்சியே தோன்றவிடாமல் மக்களைச் சிதற அடித்து வருகிறது. எனவே, திட்டமிட்டே, முன்னேற்பாடு செய்தே மக்களிடம் உள்ள எளிய வேறுபாடுகளையெல்லாம் வலிமையாக்கி, இவ்வேறுபாடு களையே பகைமையாக மாற்றி மோதலை உருவாக்கி வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மற்ற பிரிவு மக்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலாயினும், கிறித்துவர், இசுலாமியர் போன்ற மதங்களுக்கு எதிரான மோதலாயினும், அனைத்தும் தெளிவாகத் திட்டமிடப்பட்டவையாகும். ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி ஆகியவற்றின் பேச்சுகளைக் கவனித்தாலே இது விளங்கும்.

மத மாற்றத்தையா எதிர்க்கிறார்கள்?

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகள் மதமாற்றத்தை எதிர்ப்பதாகக் கூறுகின்றன. மதமாற்றத்தை மேற்கொண்ட மக்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களே என்பதை நாம் அறிவோம். மதமாற்றத்தின் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஒரு மேம்பாடு தோன்றியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மக்களின் மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள், உண்மையில் மதமாற்றத்தை எதிர்க்கவில்லை என்பது உள்ளீடான உண்மை. அவர்கள் எதிர்ப்பதெல்லாம் மதமாற்றத்தின் மூலம், இந்த மக்கள் அடைந்துள்ள வாழ்நிலை மேம்பாட்டையே ஆகும். எனவே அந்த மேம்பாட்டை இந்தத் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய இசுலாத்தை அல்லது கிறித்துவத்தை எதிர்க்கிறார்கள். இவர்களின் எண்ணமெல்லாம் இந்த மக்கள் அறிவிலோ வாழ்நிலையிலோ மேன்மையுறாமல் இப்படியே இருந்து வர வேண்டும் என்பதுதான். இவ்விடத்தில் நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். மதமாற்றத்தை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ நம் பணிகள் இல்லை. ஆனால், மதம் மாறியுள்ள மக்களின் வாழ்நிலைத் தரம் இப்போது எப்படியுள்ளது? மதம் மாறுவதற்கு முன் எப்படி இருந்தது? மதம் மாறாமல் இருந்திருந்தால் இன்றும் எந்த நிலையில் இருந்து வருவார்கள்? என்னும் வினாக்களுக்கு விடை காண வேண்டும். மதம் மாறியதால் அவர்களுக்குக் கிடைத்துள்ள வாழ்க்கை மாறுபாடும் எண்ண மாறுபாடும் தான் இந்தச் சனாதனக் கும்பலுக்கு எதிராக இருக்கிறது. சனாதனத்தின் கீழ் அடிமைப்பட்டிருந்த அடிமைகள் விலகிப்போகிறார்களே; கருத்து வகையில் விடுதலை பெறுகிறார்களே; இஃது எதில் முடியும் என்று கவலைப்படுகிறார்கள். எனவேதான் இந்த மக்கள் நாடிச் சென்ற மதங்களையும் எதிர்க்கிறார்கள்.

இந்தியாவில் குமுகாயம் (சமுதாயம்) இல்லாமை

மக்களிடத்தில், மாறுதலை விரும்பும் எண்ணம், புரட்சியை நாடும் மனநிலை தோன்றாமைக்கான ஒரு பெரிய காரணம் இந்தியாவில் எந்தப் பகுதியிலும் குமுகாயம் என்பது உண்மையில் இல்லாமல் இருப்பதுதான். இங்கே இருப்பவையெல்லாம் ஜாதிகள், குலங்கள், குக்குலங்கள் மட்டுமே. இந்த அமைப்புகள் குமுகாயச் சிந்தனை முளைக்க விடாமல் செய்து விடுகின்றன. குமுகாயச் சிந்தனை உருவானால்தான் குமுகாய விடுதலைபற்றிய எண்ணம் தோன்றும்; மொழிவழித் தேசிய உணர்வும் ஒற்றுமை எண்ணமும் மலர்ச்சி பெறும்.

கூறுபோடுவதில் கொண்டாட்டம்

இங்கே இருக்கும் சனாதன-சமீபதனக் கூட்டு இந்த நிலைமையைத் தனக்கேற்ற நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறது. மொழிவழித் தேசிய உணர்வும், குமுகாய விடுதலைச் சிந்தனையும் தோன்றுவது தனக்கு ஏதும் விளைவிப்பதாக முடியும் என இக்கூட்டு அஞ்சுகிறது. எனவே இவ்வுணர்வுகள் தோன்றாமல் இருப்பதற்கு வேண்டிய ஜாதி உணர்வையும், குல உணர்வையும் இது தூண்டி வளர்க்கிறது.
மேலும், எந்த எந்த வழியிலெல்லாம் மக்களைப் பிளவு படுத்தலாம் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறது. சட்டத்தின் மூலமும், அதிகாரத்தின் மூலமும் இந்த பிளவாக்கம் வேலையைத் திறம்படச் செய்கிறது.

கிறுக்கரைப் பெருக்கும் கிரிக்கெட்

மனவகையில் மக்களை முடமாக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலவாகும். அவற்றில் ஒன்று கிரிக்கெட் மோகம். கிரிக்கெட்டைப்பற்றித் தெரிந்தவனும் தெரியாதவனும் பொது இடத்தில் நாலு பேர் காதுகளில் கேட்குமாறு அதுபற்றிப் பேச விரும்புகிறான். சில முட்டாள்கள் ஆடுவதைக் காண்பதற்குப் பல ஆயிரம் முட்டாள்கள் காசு கொடுத்துச் சீட்டு வாங்கிச் சென்று நேரத்தை வீணாக்குகிறார்கள். இதில் ஒன்றுமில்லை என்பது தெரிந்தாலும், இதைப் பெரிய புலனமாக (விஷயமாக)ப் பேச வேண்டும் என நினைக்கிறார்கள். இது எதனால் நேர்ந்தது? எளிய பிரிவு மக்களின் மேல், மேல்தட்டுப் பண்புக் கூறுகள் திணிக்கப்படுவதன் விளைவு தானே?

வழி மறிக்கும் பரிசுச் சீட்டுகள்

அடுத்ததாகப் பரிசுச் சீட்டுகளை சொல்லலாம். பரிசுச் சீட்டுக்காகத் தரப்படும் விளம்பரங்களும், அதற்குக் கிடைத்திருக்கும் விற்பனை வாய்ப்பும் பலரையும் வாங்கத் தூண்டுகிறது. உடனே, பரிசு விழும் பணம் பற்றிய கற்பனை வாழ்வைச் சில நாட்களுக்கு இது வழங்குகிறது. வாங்கியவன் மீண்டும் மீண்டும் வாங்குகிறான். பரிசுச் சீட்டு நேயர்கள் அனைவரும் எளிய - நடுத்தர வகுப்பு மக்களும் ஏதுமற்ற ஏழைகளுமேயாவர். இவர்கள் கற்பனையில் எதிர்காலச் செல்வர்களாக வாழ்வதால், செல்வ வாழ்வை நேசிப்பவர்களாக மாறுகிறார்கள். எனவே, பரிசுச் சீட்டு ஏற்பாட்டின் மூலம், உடைமை வகுப்பை எதிர்த்துப் போர் தொடுக்க வேண்டிய ஏழை மக்கள் செல்வ வாழ்வையும் செல்வர்களையும் நேசிப்பவர்களாக மாறிப் போகிறார்கள். அத்துடன் பரிசு விழ வேண்டும் எனக் கடவுளையும் வேண்டிக் கொள்கிறார்கள். எனவே, சனாதன நோக்கமும் சமீபதன நோக்கமும் இதன்மூலம் ஒருங்கே நிறைவேறுகிறது.

ஒழுங்கும் செப்பமும் உருக்குலைதல்

மக்களிடையே குமுகாயச் சிந்தனை வளர்வதற்கு, அவர்களிடத்தில் ஒழுங்குணர்வும் பொறுப்புணர்ச்சியும் வளர வேண்டும். ஆனால், இயல்பாகவே இங்கு துப்புரவின்மை (அசுத்தம்) எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கப்படுகிறது. பொது இடங்களை எப்படியும் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் வளர்க்கப்படுகிறது. தாறுமாறான, நெறிகெட்ட வாழ்க்கையில் மக்கள் செலுத்தப்படுகின்றனர். தெருக்களும், பொது இடங்களும், பிறவும் நாற்றமெடுத்த அருவருப்புக் களங்களாகி விட்டன. இந்தப் போக்கைத் தடுப்பதற்கேற்ற எதுவும் மக்களுக்கோ குழந்தைகளுக்கோ கற்றுத் தரப்படுவதில்லை. இவை கற்றுத்தரப்பட வேண்டும் என்னும் கருத்து யாராலும் கூறப்பட்டால், அக்கருத்தே எதிர்ப்புக்கு உள்ளாகிறது. ஏன்?

ஒழுங்கு, செப்பம் என்னும் பண்புகள் ஒரு துறையில் வளர்ந்தாலும், அதற்கடுத்த துறையில் ஒழுங்கு, செப்பம் தேவை எனக் கருதத் தொடங்கி விடுவர். இப்படியான எண்ணப் போக்கு, சனாதனத்தையும் சமீபதனத்தையும் ஆட்டங்காண வைத்து விடும். எனவே, ஒழுங்கின்மையையும் செப்பமின்மையையும் எல்லா நிலைகளிலும் நீடிக்க விடுகின்றனர்.

குமுகாயக் கொடுமைகளின் பெருக்கம்

குழந்தைகள் நலம் பற்றியெல்லாம் நிறையப் பேசுகிறோம். ஆனால், எத்தனை நூறாயிரக்கணக்கான சிறார் உழைப்பாளர்கள் கடுமையான வேலைகளையெல்லாம் செய்து வருகிறார்கள்!

விலை மகளிர் பெருக்கமும், பரத்தமைத் தொழிலும் (ஞசடிளவவைரவடி) இன்று எவ்வளவு அதிகமாகயிருக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று ஆளும் பிரிவு உண்மையாக என்றேனும் விரும்பியது உண்டா? இல்லை! ஏன்? இது தடுக்கப்படுவது சனாதனத்திற்கும் சமீபதனத்திற்கும் எதிரான செயலாகும் என்பதால்தான்!

பெண்கள் கடத்தப்படுவதும், குழந்தைகளைக் கடத்திச் சென்று விற்பனை செய்வதும், கொள்ளைகளும் வழிப்பறிகளும் இப்படியான பலவகைக் குமுகாயக் கொடுமைகளும் மலிந்து போய் விட்டன. சனாதன சமீபதனக் கூட்டு இவற்றை என்றும் ஒழிக்க விரும்புவதில்லை. இவை இருந்து வந்தால் தானே அச்சமும் ஒதுங்கிச் செல்லும் போக்கும் நிலவி வரும்!

சனாதனம் + சமீபதனம் நாம்

சனாதனமும் சமீபதனமும் இக்குமுகாயக் கேடுகளிலிருந்து மக்களுக்கு என்றும் விடுதலை தரப்போவதில்லை. மாறாக இக்கேடுகளைத்தான் ஊக்கப்படுத்தி வரும்.

அறக்கேடுகளைப் பரப்பவும், வலிவாக்கவுமே இவை சிந்திக்கின்றன! திட்டமிடுகின்றன! மக்களிடமிருந்து, அவர்தம் உழைப்பையும் செல்வத்தையும் கொள்ளையடிக்கின்றன! இக்கொள்ளைச் செல்வத்தை மக்கள் நலத்திற்குக் கேடு பயக்கும் வழிகளில் செலவிடுகின்றன!

எனவேதான்,
பகுத்தறிவு இயக்கம், சனாதனக் கோட்டையை மட்டுமே தனித்துத் தாக்கிப் பயனில்லை என்றும் சமீபதனக் கோட்டையையும் சேர்த்துத் தகர்க்க வேண்டும் என்றும் நாம் கூற விரும்புகிறோம்!


- தொகுப்பு: இரண்யன்

நூல் - மன்னர்களும் மனு தருமமும்

ஆசிரியர் கரூர் பி.ஆர்.குப்புசாமி பி,ஏ.பி.எல்.

                                               பி.ஜி.டிப்.ஆந்த்ரோ

Comments