சட்டமும் சமூகமும்



சட்டம் என்பது அரசின் மொழியாகும்! அரசின் அதிகாரம் சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு நிலைநாட்டப்படுகிறது! அது அரசின் ஆணையாக இருந்து மக்களை ஒழுங்குபடுத்துகிறது! மீறுவோரைத் தண்டிக்கிறது! காவல்துறை, வழக்குமன்றம், சிறை ஆகியவற்றின்மூலம் இது நிறைவேற்றப்படுகிறது.

சட்டமும், மக்களும், ஆட்சியாளரும்

நம் சட்டங்களின் அடிப்படை எது? குமுகாயத்தில் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதும் அரசுக்கு வருவாயுமேயாகும்.

ஏற்றத்தாழ்வு மண்டிக்கிடக்கும் ஒரு குமுகாயத்தில், சட்டம் - ஒழுங்கு என்பவை,ஏழை எளிய மக்கள் எப்போதும் அவல நிலையிலேயே பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காகவே இருக்கும்!

அவர்கள் தங்கள் படுமோசமான குமுகாயப் பொருளியல் நிலைகளை மாற்ற எந்த உருப்படியான நடவடிக்கை மேற்கொண்டாலும், அது சட்டம் ஒழுங்கை ஊறுபடுத்துவதாகவே ஆட்சியாளரால் கருதப்படும்!

இந்தியாவில் ஏழை எளியவர் என்பவர், பொதுவாக, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரே ஆவர்!

அவர்களுக்கு எதிரணி என்று சொல்லத்தக்கவர்கள், குமுகாயத்தின் மேல்தட்டு மக்கள் எனப்படுவோர்! இவர்கள் ஒரு வகுப்பார் என்ற அடிப்படையில் பார்ப்பனர்களும் அவர்களைப் போன்றவர்களும், செல்வவான்களும், அதிகார வகுப்பினரும், அறிவு வாழ்வினரும், ஆவார்கள்!

தந்தை பெரியார் இவர்களை முறையே பார்ப்பான், பணக்காரன், பதவிக்காரன், படிப்புக்காரன் என வகைப்படுத்திக் கூறியுள்ளார்.

இந்தியாவும் இந்துச் சட்டமும்

இந்தியாவில் இந்துக்களுக்கென்றும் முசுலீம்களுக்கென்றும் தனித்தனிச் சட்டங்கள் இருக்கின்றன!

நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 85 விழுக்காட்டினர் இந்துக்களானதால் இந்துச் சட்ட நிலை குறித்து முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது!

இந்துக்களில் மிகப் பெரும்பான்மையினர் சூத்திரர்களாகவே சட்டப்படி இருந்து வருகிறார்கள்! இந்தப் பழைமையான பாகுபாடு பார்ப்பனர்களுக்கு அரசியலிலும், அரசு அதிகாரத்திலும், குமுகாயத் துறையிலும், பண்பாட்டு நடவடிக்கைகளிலும், பொருளியல் நல்வாழ்விலும் மற்ற மக்களைக் காட்டிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது! இந்த நிலை பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது!

சட்டமும் பார்ப்பனச் சனாதனமும்

தங்களின் ஏற்றத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பார்ப்பனர்கள், இந்திய அரசியல் சட்டச் சரத்துகள் 25 மற்றும் 372 முதலியன அமையும்படி பார்த்துக் கொண்டார்கள்! அவர்களுடைய இந்த நோக்கம், கடந்த ஒரு தலைமுறையாக அவர்கள் இந்துச் சட்டத்தைத் திருத்துவதற்குத் தொடர்ச்சியாகக் காட்டிவரும் எதிர்ப்பின் மூலம் தெளிவாகத் தெரிகிறது! எனவேதான், அவர்கள், தாய்மொழியில் கடவுள் வழிபாடு என்ற ஆணையைக் கூட எதிர்த்து வழக்கு மன்றம் சென்றார்கள்! அதே போல, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாகலாம் என்ற சட்டத்தையும் எதிர்த்து அவர்கள் வழக்கிட்டார்கள்!

இந்துச் சட்ட இயலானது சட்டம் செய்யும் உரிமையை மன்னர்களுக்கு அளித்ததில்லை! மன்னர்கள் தரும சாத்திரங்களையும் அதன்படியுள்ள குமுகாய அமைப்பையும் பாதுகாக்கவே கடமைப்பட்டவர்கள்! மன்னருக்குச் சட்டம் செய்யும் உரிமை இல்லை என்று ஸ்மிருதிகள் வெளிப்படையாகத் தடை விதிக்கின்றன! சிப்பாய் கலகம் என்று சொல்லப்படுவதையொட்டி, விக்டோரியா பேரரசியிடமிருந்து நான் உங்கள் மத நடவடிக்கைகளில் தலையிட மாட்டேன் என்று உறுதிமொழி பெறப்பட்டது இதன் அடிப்படையில்தான்! இன்றுவரை இந்துச் சட்டத்தைச் செப்பப்படுத்தும் முயற்சிகளுக்குத் தோன்றும் எதிர்ப்புகளின் அடிப்படை இதுவே!

உண்மையில், நேரு அவர்களால் நிறைவேற்றப்பட்ட இந்துப் பிறங்கடை (வாரிசு) உரிமைச் சட்டம் போன்ற சிறு சட்டங்களுக்கே இந்து மதத் தலைமைப் பீடங்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டின!

அவர்கள் எதை வேண்டுமானாலும் சட்டமாக்கட்டும்! நம்மைப் பொறுத்தவரை நாம் வழக்கு மன்றத்திற்குச் செல்வதைத் தவிப்போம்! இந்துச் சட்டத் தொகுப்பு என்று சொல்லி அவர்கள் (பாராளுமன்றம்) விருப்பப்படி செய்யட்டும்! ஆனால் அவர்களுக்குக் கொஞ்சமாவது கண்ணியம் இருக்குமானால், அவர்கள் அதை இந்துச் சட்டம் என்று அழைக்க வேண்டாம்! ஏனெனில் அது இந்துச் சட்டம் அல்ல...

என்று சர்க்கார் என்பவர், இந்துச் சட்ட வரலாற்றின் காலக்கிரமங்கள் என்னும் நூலில் கூறுகின்றார்.

குமுகாய அமைப்பின் அவலநிலை

மாந்தர் அனைவரும் சரிநிகர்; சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர் என்னும் உயர்ந்த கொள்கைகளுக்குச் சட்ட இசைவுபெற இந்தியக் குமுகாயம் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறது!

சமன்மை  உடன்பிறப்பு  என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள சொற்கள் நடைமுறையில் பொருளற்றவையாகவே இருந்து வருகின்றன!
இந்தியக் குமுகாயமோ, பெரும்பாலும் படிக்காத, உலகம் புரியாத, பேதைமையான மக்களைக் கொண்டது!

அவர்களை ஆளுகின்ற அதிகாரிகளோ, பெரும்பாலும் மேட்டுக்குடியினர்! எனவே குமுகாய அடிப்படுத்தல்களும், பொருளியல் சுரண்டலும் தங்குதடையின்றி நடந்தேறி வருகின்றன! ஆதலால்தான், பழமையாளர்களுக்குப் பாதுகாப்பும் குமுகாய அமைப்பால் நலிவடைந்தோருக்குப் பாடுபவர்களுக்கு பாதுகாப்பு இன்மையும் இருந்து வருகின்றன!

சட்டங்களின் வலுவின்மை
ஒரு, குமுகாயச் சீர்திருத்தக்காரரை
1. சண்டாளன் என்றும்
2. தீண்டத்தகாதவர்களைத் தீண்டுகிறான் என்றும்
3. தூய்மையைப் பற்றி அறிவில்லாதவன்

என்றும் பழைமையாளன் ஒருவன் திட்டுகிறான். ஆனால் வழக்கு மன்றமோ அவனது திட்டலை ஒரு வெறும் கண்டிப்புதான் ஆகமே தவிர, அவமானப்படுத்துவது ஆகாது என்று தீர்ப்புக் கூறி அவனை விடுதலை செய்கிறது!

சட்டங்களும் வழக்குமன்றத் தீர்ப்புகளும் சாதிக் கொடுமையைக் குறைக்க வழிசெய்ய முயன்றாலும் கூட, சாதி அமைப்புகளின் தன்னாட்சி காரணமாக அவை பயனற்றுப் போகின்றன!

ஜாதி அமைப்புகள் மீதும், அவற்றின் உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரமோ, இவற்றில் குறுக்கிடும் உரிமையோ வழக்கு மன்றங்களுக்குப் போதுமான அளவில் இல்லை!

தீண்டாமை ஒழிப்புச் சட்டம், அக்கொடுமையின் ஒரு பகுதியைக் கூடத் தொட முடியவில்லை என்பதை அனைவரும் அறிவோம்!

மக்களின் பண்பாட்டுத் தரம், நம்பிக்கைகள், தேவைகள் காரணமாகப் பல குமுகாயச் சட்டங்கள் பயனற்றுப் போகின்றன! இருமனையாள் மணத்தடைச் சட்டம், மாப்பிள்ளைச் சீர்வரிசை (வரதட்சணை) ஒழிப்புச் சட்டம், பரத்தமை (விபச்சாரம்) ஒழிப்புச் சட்டம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்கும் சட்டம், குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் போன்றவை அச்சிக்கல்களின் கங்குகரையைக் கூடத் தொடவில்லை.
சட்டங்களை மக்கள் எதிர்க்க நேர்வது ஏன்?

சட்டம் செய்பவர்களுக்கே பெரும்பாலும் குமுகாய நோக்கம் இருப்பதில்லை! பெரும்பாலும், குமுகாய, பொருளியல் அமைப்பின் உச்சாணியைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருப்பதே அதற்குக் காரணம் ஆகும்!

எனவே, குடிமக்களின் நேர்மையான உரிமைகளை வேண்டி நிற்போர் பலமுறை சட்டத்தோடும், சட்டத்தை நிறைவேற்றும் அமைப்புகளோடும் மோத வேண்டி வந்துவிடுகிறது!

தந்தை பெரியார் கூறுகிறார்:

சட்ட மறுப்பு என்பது மனிதனுடைய இயற்கைக் குணங்களில் ஒன்றாகும்! மனிதன் ஒவ்வொருவனும் வாழ்க்கையில் எத்தனையோ சட்டங்களை மீற வேண்டியவனாக இருக்கிறான்! பொதுவாக, ஒருவனை ஒருவன் அடித்தால், வைதால், திருப்பி அடிப்பதும், வைவதும் பெரும்பான்மையான மனித இயல்பாய் இருப்பதை நாம் காண்கிறோம்.

அய்யா அவர்கள் கூறுவது ஏழை எளிய மக்களைப் பொறுத்ததாகும்.

அதேசமயம், மேட்டுக்குடி மக்கள் தங்கள் நன்மையைக் காத்துக் கொள்ளச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அதைக் காலித்தனம் என்று கடுமையாகக் கண்டிக்கிறார்!

மானத்தைக் காப்பாற்றச் சட்டத்திற்கு அச்சப்படாதீர்கள் என்று அய்யா கூறுகிறார்!

அந்த நன்னாள்

குமுகாயம் தந்தை பெரியார் அவர்களின் இத்தகு அறிவுரைகளை என்றைக்கு ஏற்றுக் கொள்கிறதோ, அதன்படி நடக்கிறதோ அன்றைக்குத்தான், நேர்மையானதும் நல்வழியில் செல்லக்கூடியதுமான ஒரு குமுகாய அமைப்பு இங்கே ஏற்பட வழிபிறக்கும்!

பின்பக்க அட்டைக்கு...

சமுதாய மலர்ச்சியில் பொதுமை மணம் கமழ வேண்டுமென்றும், தமிழின் வளர்ச்சியில் அறிவியல் ஓங்க வேண்டுமென்றும் வேட்கை கொண்டவர் கரூர் வழக்கறிஞர் பி.ஆர். குப்புசாமி

ஆக்கப்பூர்வமான ஆய்வுகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும் பகுத்தறிவுச் சிந்தனையில் தம் அறிவினைப் படரச் செய்தவரும், தமிழின் காப்புக்குத் தம் வாழ்நாட்களை வழங்கியவருமாகிய பி.ஆர்.குப்புசாமி - கரூரின் தனிப்பெருஞ் சொத்தாகக் கருதப் பெறுகிறார்.

- அமுதசுரபி, பிப். 1984


நூல் - மன்னர்களும் மனு தருமமும்

ஆசிரியர் கரூர் பி.ஆர்.குப்புசாமி பி,ஏ.பி.எல்.
                                               பி.ஜி.டிப்.ஆந்த்ரோ


Comments

Popular posts from this blog

பார்ப்பனர்களைத் தோலுரிக்கிறார் விவேகானந்தர்

மன்னர்களும் மனுதருமமும்

சனாதனமும் சமீபதனமும்