மேய்ப்பரின் மேய்ப்பர்
வேடிக்கைப் பேச்சுகளையே விரும்புகின்ற மக்கள் நிறைந்த நாட்டில், வாழ்க்கையைப் பாதிக்கும் அடிப்படைச் செய்திகளைப்பற்றிப் பேசக் கூடியிருக்கிறோம். இத்தகைய கூட்டங்களின் இறுதியில் நிறையக் கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். நாம் அனைவரும் இந்தக் குமுகாய அமைப்பை அடியோடு மாற்றியமைக்கவே விரும்புகிறோம். ஆனால் மணிக்கணக்கில் நாம் கூடிப் பேசிய பிறகு, நம் தோழர்களால் எழுப்பப்படும் கேள்விகளைக் கவனித்தால், குமுகாய மாற்ற முயற்சிக்கான அடிப்படை அறிவே நம் தோழர்களுக்கு நிறைவு பெறாமல் இருப்பது தெரிய வருகிறது. எனவே நான் கூற விரும்புவது இதுதான்:
இந்தக் குமுகாயம் எதன் மீது கட்டப்பட்டிருக்கிறதோ, அதைத் தகர்ப்பதற்குரிய வழிமுறையை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை!
நாம் வாழும் இந்தக் குமுகாயத்தைக் கல்வி அற்றதாக ஆக்கியிருக்கிறார்கள்! எனவே, கூடுமானவரை கல்வியைப் பெருக்கவேண்டும்! மக்களைப் பகுத்தறிவு அற்றவர்களாக ஆக்கியிருக்கிறார்கள்! எனவே கூடுமானவரை பகுத்தறிவைப் பரப்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் ஒன்று சேர இயலாதவாறு, ஜாதிகளைப் பெருக்கி ஏற்றத்தாழ்வை அமைத்துப் பூசலை வளர்த்து விட்டு உள்ளார்கள்! எனவே, ஜாதியமைப்பைத் தகர்க்க வேண்டும்! இவற்றின் தோற்றுவாயைக் கண்டறிய வேண்டும்!
இந்த ஜாதியமைப்பையும், ஏற்றத்தாழ்வையும் கட்டிக் காக்கும் அரசு, பணக்கார வகுப்பு, இவர்களின் படை பட்டாளம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வலிமை நமக்குக் கை வரவேண்டும். அப்போதுதான் ஒற்றுமைக்கு எதிரான ஆற்றல்களை நாம் வீழ்த்துவது கூடும். நம் நோக்கங்களை நிறைவேற்றப் புறப்படும் படை என்றே இங்கு வருகை தந்துள்ள தோழர்களை நான் கருதுகிறேன்!
பெருகும் தலைவர்களும் வளரும் நிலைமைகளும்
இந்த நேரத்தில் நம்மை வழி நடத்தும் தலைவர்களைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது! நம்முடைய அரசியல் தலைவர்கள், குமுகாய முன்னோடிகள், பொருளியல் தலைவர்கள், கலைவாணர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் முதலிய அனைவரும் இங்குள்ள அமைப்பைக் கட்டிக் காக்க விரும்புகிறார்களேயல்லாமல், மாற்ற முயல்பவர்களாக இல்லை என்பதை நாம் கவலையுடன் விளங்கிக் கொள்ள வேண்டும். நாட்டில் தலைவர்கள் பெருகி வருகிறார்கள்! ஆனால் அறிவு பெருகி வருவதாகத் தெரியவில்லை! இவர்கள் அனைவரும் நம்முடைய அறியாமையை, இயலாமையை, கல்லாமையை முதலீடாக்கி வளர்வதற்குத்தான் முயற்சி செய்கிறார்கள்.
தலைவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு கிடைக்கிறது! தலைவர்கள் பெருந்தலைவர்கள் ஆகிறார்கள்! உலகத் தலைவராகக்கூட ஆகிறார்கள்! இவர்கள் அனைவருமே, குமுகாயக் கேட்டுக்கு மருந்து கண்டுபிடிக்க விரும்பாமல், குமுகாயக் கேடுகளை, குமுகாய நோய்களைப் பயன்படுத்தியே முன்னேறவும் பதவி இன்பத்தில் திளைக்கவும் முயல்கிறார்கள்!
இந்த நிலையில் பெரும்பான்மை மக்களாக உள்ள சிற்றூர்ப்புற இளைஞர்கள், படிப்பாளிகள், உழைப்பாளிகள் ஆகியோருக்குக் குமுகாயச் சிந்தனைகளை ஊட்டிட வேண்டும். இது எப்படி அமைந்துள்ளது, எப்படி இயங்குகிறது, எப்படி இயக்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இதற்குரிய முயற்சி மிகச் சிறு அளவிலேயே நடந்து வருகிறது.
நம் நோக்கம்
தமிழகத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வட்டங்கள் உள்ளன. வட்டத்திற்கு ஒரு நூறு பேர்களையேனும் நாம் உருவாக்க வேண்டும். திராவிட இயக்கங்கள், பகுத்தறிவு பொதுவுடைமை இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்கள் போன்றவற்றைச் சேர்ந்த இளைஞர்களை - உழைப்பாளிகளை உருவாக்கி அவர்களுக்குக் குமுகாயச் சிந்தனைகளைக் கற்பிக்க வேண்டும்.
அப்போது, எவற்றை நாம் போற்ற வேண்டும், எவற்றை அழிக்க வேண்டும் என்னும் தெளிவை நாம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த அடிப்படையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதே நம் நோக்கமாகும்.
எது தமிழினம்?
தமிழின மன்றம் என்ற பெயரிலே ஒரு மன்றத்தை அமைத்து, அதனடிப்படையில் இக்கூட்டத்தை நீங்கள் ஏற்பாடு செய்தது மிகச் சிறப்பானது!
இப்போது தமிழினம் என்றால் எது என்று சிலருக்கு அய்யம் எழலாம். வீட்டிலே தமிழ் பேசுவோர் மட்டும்தான் தமிழினமா என்று சிலர் கேட்கலாம்.
வீட்டு மொழியை வைத்து ஓரினத்தை அடையாளப்படுத்த முடியாது! வீதி மொழியை வைத்துத்தான் அது எந்த மொழி, (தேசிய) இனம் என்பதை இன்று அடையாளப்படுத்துவது பொருந்தும். ஒரு குறிப்பிட்ட வட்டார எல்லைக்குள் உள்ள மக்கள் வீதிக்கு வந்தபின் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள எந்த மொழியைப் பயன்படுத்துகிறார்களோ, அந்த மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் இன்றைய தேசிய இனங்கள் உருவாகியுள்ளன! இந்த அடிப்படையில்தான் தமிழினத்தையும் நாம் அடையாளப்படுத்துகிறோம். எனவே, இங்கே உள்ள மக்கள் அனைவரும், வீட்டிலே அவர்கள் எந்த மொழியைப் பேசியபோதும் அவர்கள் தமிழர்கள்தாம் என்பதைச் சுட்டிக் காட்ட ஆசைப்படுகிறேன். ஆகவே, தமிழின மன்றம் என்கிற பெயர் மிகப் பொருத்தமான ஒன்றே!
நலிந்த சிற்றூர்ப் புறமும் நாகரிக நகரங்களும்
இன்றைய நிலையில் பெருவாரியான மக்கள் - உடல் உழைப்பை நம்பிய மக்கள் சிற்றூர் புறங்களில் மட்டுமே வாழ்கிறார்கள். ஆனால், தலைவர்களும் வழிகாட்டிகளும் நகரங்களில் தான் கூடுகிறார்கள்! கூட்டம் போடுகிறார்கள்! சிற்றூர் மக்கள் இத்தேவைகளுக்கு நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.
ஆனால் 80 விழுக்காட்டு மக்கள் வாழும் சிற்றூர்ப் பகுதிகளில்தான் கல்லாமையும், அறியாமையும் பின்னடைவும் வேரூன்றி இருக்கின்றன. சிற்றூர்ப் புறங்களில் முற்போக்கு எண்ணங்களை விதைக்காமல், செயல் திட்டங்களை மேற்கொள்ளாமல் நாம் செய்யக் கூடியது ஒன்றுமில்லை! இன்றைய அமைப்புகள் நகரங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன! ஆனால் நகரம் என்பது சிற்றூர்ப் பகுதிகளை ஏய்க்கின்றவர்களும் மேய்க்கின்றவர்களும் நிறைந்த பகுதியாகும். காவலர், கந்துவட்டிக்காரர்கள், கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், வணிகர்கள் இவர்கள் அனைவரும் நகரங்களிலிருந்து கொண்டுதான் சிற்றூர்ப் புறங்களை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்! அதாவது இவர்கள் சிற்றூர்ப் பகுதிகளை மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உழவர் சங்கம் வலுவாக இருந்தபோது நான் ஒரு செய்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்துவது உண்டு.
நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அங்கிருந்து போராடுங்கள்! நீங்கள் யானை என்றால், நகரங்கள் ஆறுகள் ஆகும். அங்கே முதலைகளெல்லாம் உள்ளன! அங்கே இறங்கிவிட்டால் உங்களுக்குத் தோல்விதான்! உங்கள் இடத்திலிருந்து செயல்பட்டால்தான் வெல்வீர்கள் என்று கூறுவேன்!
ஏனெனில், ஒரு நகரத்தை விட்டால், அடுத்த நகரத்தை அடையும்வரை சாலைகள்தாம் உள்ளன! நடுப்பாதையில் இறங்கிவிட்டால், எங்கே செல்வது என்பதுகூட நகரவாசிகளுக்குப் பெரும்பாலும் தெரியாது. எனவே இடமறிந்து போராட வேண்டும் என்பதைத் தெரிவித்தேன்!
சிற்றூர்கள் வளர்ந்து நகரத்தைச் சுற்றிவளைக்க வேண்டும் என்ற பாடத்தை உழவர் இயக்கங்கள் வெற்றிகண்ட நாடுகள் கற்றுத் தருகின்றன. இன்றைக்கு அமெரிக்கா இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளையெல்லாம் கையகப்படுத்தி இந்தியாவைச் சுற்றி வளைக்க, முயல்கிறதல்லவா? டிகோகார்சியாத் தீவில் தளம் அமைத்தனர்! திருகோணமலைக்காக இலங்கைச் சிங்களவருடன் சேர்ந்து தமிழர் ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர்! இவை எதற்காக? இந்தியாவைச் சுற்றி வளைக்கத்தானே. இதைச் சிற்றூர் மக்கள் கருதிப் பார்க்க வேண்டும்.
உலகில் எல்லா அரசுகளும் தம் எதிரி நாடுகளைச் சுற்றி வளைக்க முயலும் உத்தி நாம் கவனிப்பதற்கு உரியது!
இன்று மதத் தலைவர்கள், வட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், வாங்குவோர், விற்போர், அடக்குவோர், ஆளுவோர் நடத்துவோர் எல்லோரும் நகரங்களில் இருக்கிறார்கள். பர்கர்ஸ் (க்ஷரசபயசள) என்ற சொல்லுக்கு நகரவாசி என்பது பொருள். இதிலிருந்துதான் பூர்சுவா என்ற சொல் வந்தது. அப்படிப்பட்ட நகரங்களைச்சுற்றி உள்ள மக்கள் ஒன்றுபட்டு உண்மை உணர்ந்து எப்போது விழிப்படைந்து எழுச்சியுறுகிறார்களோ அன்றுதான் குமுகாய விடுதலை மலரத் தொடங்கும் என்று நாம் கூறமுடியும்.
ஜாதியம் மாந்தநேயத்தின் எதிரி
நாம் முதலாவதாக ஜாதி அமைப்பைப்பற்றிச் சிறிது நோக்குவோம்! இது மாந்தருடைய இயல்பான உணர்வுகளுக்கும், ஒற்றுமைக்கும் வாழ்க்கை அறத்திற்கும் நேர் எதிரான ஒரு கொடிய ஏற்பாடாகும். மனிதனுக்கு ஆசை, பாசம், அன்பு எல்லாம் உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் தகர்த்து, மனிதனை மூளை கோளாறு உள்ளவனாக ஜாதி மாற்றிவிட்டது; மாற்றி வருகிறது!
இதற்கு ஓர் எளிய உண்மையைக் காட்டாகக் கூறலாம். மனிதனின் மிக நுட்பமான - மென்மையான உணர்வு காதல் உணர்வு! தான் விரும்பியவரை மணந்து கொள்ளும் உரிமை பருவமடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டும். ஆனால் இந்த உரிமை ஜாதியின் பெயரால் மறுக்கப்படுகிறது. இதனால், பித்துப்பிடித்தவர்களில், மூளைக் கோளாறு ஏற்பட்டவர்களில் பாதிப்பேர், இந்தக் காதல் கைக்கூடாமைக்கு உள்ளானவர்கள்தாம். குமுகாயத் திறமைக் குறைவை இந்த ஜாதி அமைப்பு ஏற்படுத்துகிறதா இல்லையா?
அறிவியல் முறைப்படி, ஒரு ஜாதித் திருமணம் குமுகாய வளர்ச்சிக்கே கேடானதாகும். வலுக்குறைந்த அறிவாற்றல் குறைந்த, மனவளர்ச்சி குறைந்த குழந்தைகள் பிறப்பதற்கே இந்த ஒரு ஜாதித் திருமணம் காரணமாக இருக்கிறது. எனவே ஜாதியம் குமுகாயத்தின் மாபெரும் நோயாகும்.
ஜாதிப் பெயர்களும் ஜாதி எல்லைகளும்
இன்று, கவுண்டர், செட்டியார், முதலியார் என்பன தனித்தனி ஜாதிகள் எனக் கருதுகிறோம். ஆனால், கவுண்டர்கள் அனைவரும் தமக்குள் கொள்வினை, கொடுப்புவினை செய்து கொள்வதில்லை. எல்லாச் செட்டியார்களுக்குள்ளும் திருமண உறவுகளில்லை. எனவே ஜாதியின் வட்டம் மிகச் சிறியதாக ஆகிவிடுகிறது!
இவை பட்டப் பெயர்கள்தாம்! இவை நானூறு அல்லது அய்ந்நூறு ஆண்டுகட்குமுன் ஏற்பட்டவை. இந்தப் பட்டப் பெயர்களை அய்ந்நூறு ஆண்டுகட்கு முன் இலக்கியத்திலோ பிற ஆவணங்களிலோ பெரிதும் பார்க்க இயலாது. இந்தப் பிரிவுகளும், பிளவுகளும் புரோகிதர்களின் அறிவுரைப்படி மன்னர்களால் நிலைநாட்டப்பட்டன! மேல்கீழ் என்னும் பாகுபாடு இறுக்கமாகக் கடைப்பிடிக்கும்படி மக்கள் வற்புறுத்தப்பட்டனர்.
ஜாதி வேறுபாடுகளும் கட்டுப்பாடுகளும்
சங்க காலத்திலே தொழிற் பாகுபாடு மட்டும்தான் இருந்தது. சில குழுப் பிரிவுகளும் அப்போது இருந்தன! பவுத்த மதம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, புரோகிதக் கூட்டத்தின் அறிவுரைப்படி, பலவகைக் குழுக்களிடையே திருமண உறவுகள் தடை செய்யப்பட்டன! இப்படித்தான் உண்ண வேண்டும்; இப்படித்தான் உடுக்க வேண்டும்! இப்படித்தான் வீடுகளையும் குடியிருப்புகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என மக்கள் வற்புறுத்தப்பட்டனர்! இந்தச் சட்டங்கள் எல்லாம் பட்டயங்களிலும், கோவில் கல்வெட்டுகளிலும் ஆவணங்களிலும் உள்ளன! மீறியவர்களுக்குத் தண்டனை தப்பாது!
இவையே மனுநெறியும் வைதீகக் கட்டுப்பாடும் ஆயின! மன்னாதி மன்னர்களெல்லாம் இந்த மனு நெறியைத் திறம்படக் கடைப்பிடிப்பதில்தான் பெருமைப்பட்டுக் கொண்டனர்! எல்லா ஜாதிகளும் மற்ற ஜாதிகளுடன் ஒப்பிடும்போது மிகச் சிறுப்பான்மையாக மாறுகின்ற முறையில், மக்கள் பிளவு படுத்தப்பட்டனர்! இதுதான் பார்ப்பனிய தர்ம ஏற்பாடாகும்! இந்த ஏற்பாடு, பெரும்பாலான பார்ப்பனர், பிரபுக்கள் அல்லாத மக்கள் ஒன்று சேரக்கூடாது என்ற நோக்கத்தில் செய்யப்பட்டதாகும்.
அண்மையில், அனைத்திந்திய பிராமணர் சங்க அறிக்கை ஒன்றிலே, நாங்கள் கடந்த காலத்தில் மன்னர்களையெல்லாம் அடக்கி நெறிப்படுத்தி வந்திருக்கிறோம் என்று எழுதி உள்ளார்கள்! அப்படியானால் என்ன பொருள்? ஏற்றத் தாழ்வை - மனுநெறியை நிலைநாட்டுமாறு பற்பல சூழ்ச்சிகளால் மன்னர்களை நெருக்கியிருக்கிறார்கள் அதற்கு உடன்படாதவர்களை ஒழித்துக்கட்டியுள்ளார்கள் என்பது தானே! உண்மையில் அக்காலத்தில் மன்னர்களையே ஆண்டு வந்தவர்கள் பார்ப்பனர்கள்தான்! இன்றும் கோவிலுக்குள் யார் யார் எங்கெங்கு போகலாம் என்ற வரையறை இருந்து கொண்டுதானே இருக்கிறது! ஏன்? அரசை மீறித் தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்கும் வேலூர் கோட்டைக் கோயிலிலே கடவுள் சிலை நுழைப்பும் நடைபெறவில்லையா? சீக்கியர் பொற்கோவிலைப் படைகளைக் கொண்டு தகர்க்க அதிகாரம் படைத்த இந்திரா காந்தி, பூரி கோவிலில் நுழையப் பூசாரிப் பார்ப்பனர்களைக் கெஞ்சியும் பயனில்லையே!
எனவே, இந்த மனு தர்மத்தை நிலை நாட்டுபவரை நாம் அடையாளம் காண வேண்டியுள்ளது.
ஜாதித் தலைவர் திறமையும் மதத் தலைவர் வலிமையும்
இன்று ஜாதித் தலைவர்கள் பெருகியுள்ளார்கள். இவர்கள் மக்களின் மீது ஆட்சி செலுத்துகிறார்கள். எனவே இவர்களை மேய்ப்பர்கள் என்று குறிப்பிடுவது பொருந்தும், ஏன் இவர்களை மேய்ப்பர்கள் என்கிறோம்? சமன்மை இருந்தால் கலந்து பேசி முடிவு செய்வோம். ஏற்றத் தாழ்வு இருந்தால் மேய்ப்பவர் தானே முடிவு செய்வார்!
மேய்ப்பவர்களை மேய்ப்பவர் பீடாதிபதிகள்! மடாதிபதி வேறு; பீடாதிபதி வேறு, மடங்களுக்கெல்லாம் மடாதிபதிகள் இருப்பினும் இந்துமதத் தத்துவங்களை விளக்கிச் சொல்கின்ற உரிமை பீடாதிபதிகளுக்கே உண்டு. இவர்கள் இருவகை! ஒரு வகை வைணவத்தைச் சேர்ந்த ஜீயர்கள்! மறுவகை சைவத்தைச் சேர்ந்த காஞ்சிமடம் பெரியவாள் போன்றவர்கள். அவர்கள்தான், வடமொழியில்தான் கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டும்! என உயர்நீதிமன்றத்தில் பிரமாண வாக்கு மூலங்களைக் கொடுத்தனர். அவைதாம் ஏற்கப்பட்டன. இன்று மத வகையிலும் சமுதாய அடிப்படையிலும் சங்கராச்சாரிதான் தலைவர்! சட்டம் இதையே ஏற்றுள்ளது!
எனவே, சங்கராச்சாரியின் சொல்லைக் காப்பதற்கு இறுதியில் இந்தியப் படை இருக்கிறது. முதல்வராலும் அவருடைய சொல்லை மீற இயலாது.
அறிவை முடமாக்கும் அரும்பணிகள் இன்று பள்ளிகளிலே மதத் தொடர்பான பாடங்களே மிகுந்து, அறிவியல் மனப்பாங்கை வளர்க்கும் பாடங்கள் குறைந்துள்ளன. பாடத்திட்டத்தில் டார்வினுடைய கோட்பாட்டைக் கற்றுத் தரக்கூடாது என்ற முயற்சி கேரளத்தில் நடந்ததைப் பார்க்கிறோம்! ஓரளவு அறிவியற் கருத்துகூட நீக்கப்படுகின்றன! மாநில மய்ய அரசுகள் ஆண்டுக்கு சுமார் இரண்டாயிரம் கோடி செலவிட்டும் மாணவர்கள் மடமையைத்தான் தங்கள் மனத்திற்குள் ஏற்றிச் செல்ல வேண்டிய நிலைமை இருந்து வருகிறது.
கல்வித் துறையிலே சங்கராச்சாரிகளின் செல்வாக்கு நுழைந்து இளந்தலைமுறையின் பார்வையை குருடாக்குகிறது!
இன்று விளையாட்டுத் துறையில், பணக்காரர் விளையாட்டுகளும், பார்ப்பனர் விளையாட்டுகளும் பெருகுகின்றன! கிரிக்கெட்டுக் கிறுக்கர்களும் கைப்பந்துக் கும்பலும் பணக்காரக் கூட்டத்தால் ஊக்கப்படுத்தப்பட்டு பேசன் ஆக்கப்படுகிறது.
ஆட்சியாளரின் ஆட்சியாளர்கள்
இன்று விளையாட்டெல்லாம்கூடப் பணக்காரன் கையில்தான்! பணக்கார நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி விளையாட்டுக் குழுக்கள் வைத்துள்ளன. சாலை ஓரப் பூங்காக்களை வைப்பதற்குக் கூட முதலாளிகள் அரசால் நாடப்படுகின்றனர்! ஆட்சியாளர், பணக்காரனின் அரண்மனை வாயிலில் கைகட்டிக் காத்துக் கிடக்கிறார்கள்!
இன்று தேர்தல் நடக்கிறது! ஒப்புச் சீட்டை நாம் செலுத்துவதற்கான பணமே கூடப் பணக்காரனிடமிருந்துதான் வருகிறது.
இருவகைக் கோயில்கள் - இரண்டு தன்மைகள்
இனி, கோயில்களைப் பார்ப்போம்! கோயில்களில் இருவகை உண்டு. ஒன்று பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ள பெரிய கோயில்கள்! சிவன், திருமால் கோயில்கள் போன்றவை. இவை தாம் ஏற்றத் தாழ்வின் - மேல் கீழ் என்னும் பிளவு ஏற்பாட்டின் நிலைக்களன்! இவை மேல்தட்டு மக்களுக்கே உரியவை!
ஆனால், எளிய பொது நிலை மக்களின் குல தெய்வங்கள், சிறு தெய்வங்கள் இரண்டாவது வகை! இந்தக் கடவுள்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் தொடர்பு இல்லை! இந்தக் கோயில்களுக்கெல்லாம் அவர்கள் வரவும் மாட்டார்கள்! இங்கே சமற்கிருதம், பார்ப்பனர்கள் போன்ற நஞ்சுகள் நுழையவில்லை! நம் இனத்தவரான பண்டாரம் போன்றவர்கள் இங்கே பூசகராக இருப்பார்கள்!
முதலில் கூறிய சிவன், திருமால் பெரிய கோயில்கள் மக்களிடமிருந்து விலகி நிற்பவை! ஆனால் இந்தக் குலதெய்வங்களின் கோயில்கள் மக்கள் வாழ்வுடன் நெருக்கமானவை. இங்கே ஓரளவு சமன்மையும், மக்கள் நேயமும் இருக்கும்! ஏனெனில், இவை மக்கள் பணத்தால், மக்கள் உழைப்பால் அவர்களின் சொந்த முயற்சியால் உருவானவை ஆகும்! மக்களின் கூடுகளமாகவும், மக்கள் மன்றங்களாகவும் இவை திகழ்ந்து வருவதை நாம் காண முடியும்!
ஆனால் பழனிக்கோயில் படிக்கட்டிலே ஏறிப் பாருங்கள்! அங்கே படிக்கட்டுகள், தூண்கள், மண்டபங்கள் எல்லாம் - இது இன்னார் செய்தது; இதை இவர் செய்தருளினார்; இது இவருடைய உபயம் என எழுதப்பட்டிருக்கும். அப்படி எழுதப்பட்ட அனைவரும் பெரும் செல்வர்கள்! மக்களைக் கொள்ளையடிப்பவர்கள்! மக்கட் குமுகாயப் பகைவர்களின் பட்டியல் யாவும் அங்கே இருக்கும்! இவர்கள் ஏழைகளை அடித்துத்தின்ற மிட்டா மிராசுகள்! மக்களை வதைக்கும் முதலாளிமார்கள்!
கோயில்களுக்குக் கோபுரம் கட்டுகிறார்கள். இதில் நன்கொடைப் பட்டியலைப் பாருங்கள்! யாவரும் குமுகாயத் திருடர்கள். கள்ளச் சந்தை நடத்தி அரசையும் மக்களையும் ஏய்ப்பவர்கள்! எனவே, கோபுரம் கட்டும் சங்கராச்சாரி கும்பல்களுடன் கூடிக் குலாவுபவர்கள் இந்தப் பணக்காரர்கள் தாம் என்பதில் எந்த அய்யமும் இல்லை.
சங்கராச்சாரித் தனத்தில் தனிப்பெரும் திறமை
ஆகவே, இந்தச் சங்கராச்சாரி கூட்டம்தான் மேய்ப்பர்களின் மேய்ப்பர்கள்! அதாவது பணக்காரனையே ஆளுகின்றவர்கள்! பணக்காரனின் மூளையாக அமர்ந்திருப்பவர்கள்! குறைந்தது அவர்களின் பங்காளிகள்!
கும்பமேளா என்றொரு விழா வடநாட்டில் நடைபெறும்! 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளா அண்மையில் நடந்தது! இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பனத் தலைவர்கள் அனைவரும் அதற்கு வந்திருந்தார்கள்; கோடிப் பேருக்கு மேல் கூடிக் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். இதற்கு வேண்டிய பணம் எங்கிருந்து வந்தது? பணத் திமிங்கலங்களின் உதவியும் ஒத்துழைப்பும் தானே இவர்களை இப்படிக் கொட்டம் அடிக்கச் செய்கிறது!
இந்த விழாக்களுக்கெல்லாம் அடிப்படை எது? புராணங்கள் தாம்! இந்தப் புராணங்களை மூவாயிரம் ஆண்டுகளாக அறுபது கோடி மக்களின் உள்ளங்களிலும் விதைத்திருக்கிறார்கள்! இந்தியாவின் பண்பாட்டுச் சீர்கேடுகள் அனைத்திற்கும், இந்தியாவின் குமுகாய நோய்கள் அனைத்திற்கும் இந்தப் புராணங்களே பெரிதும் காரணமானவை! இவ்வளவு விரிவாக இப்புராணப் புளுகுகளைப் பரப்ப உண்டானச் செலவுகளை ஏற்றுக் கொண்டது யார்?
இந்தப் புராணங்கள் தாம் கோயில்களில் ஓவியங்களாக; சிற்பங்களாக, ஆடல் பாடல்களாக, வழிபாட்டுப் படிமங்களாக நிலைபெற்று உள்ளன. இந்தச் சிற்பங்கள், ஆட்டம் பாட்டம், கதை கச்சேரி, நாடகம், சுண்டல், பொங்கல் போன்ற எதுவுமே இல்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது கடவுளுக்காக மட்டுமே யாரேனும் கோவிலுக்கு வருவார்களா? எனவே இந்தப் பார்ப்பனர் கும்பலும் பணக்காரக் கும்பலும் கூடி, மக்களின் மனப்பாங்கை அறிந்து அவர்களை அடிமை கொள்ளவும், அடக்கி ஆளவும், இந்த அடங்கிச் செல்லும் அடிமை வாழ்வை அவர்களே ஏற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒன்றும் அறியாத ஒரு சிற்றூர்ப்புறப் பெண் ஒப்பாரி வைக்கும்போது கூட, நான் சீதையம்மா வாடுறனே! என்று ஒப்பாரி வைக்கிறாள்! இந்தப் புராணங்கள் எதுவரைக்கும் சென்றுள்ளன என்பதை இப்போது கவனியுங்கள்!
அய்ந்து தலைப் பாம்பென்பான் அப்பன்! ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால், நெஞ்சு பிரிந்திடுவார்! பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார் என்றார் பாரதியார்! அந்த அளவு மூடநம்பிக்கையும் அதனால் பிளவும் வேறுபாடும் வளர்ந்திருக்கின்றன!
பார்ப்பான் என்பது சிந்தனை முடமாக்க வட்டம்
எனவே, அய்யா அவர்கள், பார்ப்பான் என்று சொன்னார் என்றால் தனிப்பட்ட எவரையும் அல்ல! இந்தச் சிந்தனை முடமாக்க வட்டத்தைத்தான் அய்யா அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்! இது தவறா? இல்லை!
பார்ப்பான் என்னும் சிந்தனை முடமாக்க வட்டம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஏற்பாடுதான் இன்றும் நமக்குள் நாம் அடித்து மோதிக்கொண்டு கிடக்கக் காரணம்! விழுப்புரம் கலகம், மண்டைக்காடு கலகம் அனைத்தும் மூவாயிரம் ஆண்டுக்கால வேர் உடையவை!
இன்றும் அவர்கள் நமது கருத்தை வலுவான முறையில் பரப்புகிறார்கள்! நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம், நம் கருத்து ஒரு சில மய்யத்தில் செல்ல முடிகிறது! ஆனால் வானொலியைத் திறந்தால், தொலைக்காட்சியைப் பார்த்தால், செய்தித் தாளைப் புரட்டினால் அவர்களின் கருத்துகளே வந்து விழுகின்றன! கருத்துப் பரப்பல் கருவிகள் அனைத்தும் அவர்களின் கைகளில் இருப்பதுதான் அன்றும் இன்றும் அவர்கள் வெற்றி கொண்டதன் காரணம்!
அங்கிங்கெணாதபடி எதிரியின் சிந்தனைகள்
இன்று நாம் எதனை ஒழிக்கக் கருதுகிறோமோ, அந்த அமைப்பின் கருத்துகள், பழமொழிகள், நடை உடை செய்கைகள் தாம் நம்மை இன்றும் ஆட்கொண்டுள்ளன. இலக்கியம், வானொலி முதலியன யாவும் அவன் கருத்தை நாம் ஏற்கும்படி நமக்குத் தருகின்றன.
நம்மில் பலரும், இன்றும் சொல்கிறோம். பணக்காரராக இருந்தாலும், கோடீசுவரராக இருந்தாலும் அவருக்கும் ஆயிரம் கவலை என்று பேசுகிறோம்! இது நம் சிந்தனையில் ஏற்பட்ட முடம் அல்லவா? துன்பப்படுபவனுக்கு ஏற்படும் கவலையும், துன்பம் செய்பவனுக்கு ஏற்படும் கவலையும் ஒன்றாகுமா? ஆனால், நாமோ கவலையை மட்டுமே இருவருக்கும் பொதுவாக, பார்த்துத் தவறாகக் கலங்குகிறோம். இந்த முடமான மன நிலையை நமக்கு ஏற்படுத்தியதில்தான் அவனுடைய வெற்றி இருக்கிறது!
நம் எழுத்தாளர்கள் அனைவரும், பணக்காரனுக்கு ஏற்பட்ட நோயை, பரிவு ஏற்படும்படி கதையாக்குகிறார்கள்! கலைஞர்கள் படம் ஆக்குகிறார்கள்! இதற்குக் கூலி கொடுத்தது யார்? பணக்கார வகுப்பல்லவா!
பார்ப்பன ஆளுமையின் வலிமை
இன்று தோழர் பி.இராமமூர்த்தி அவர்கள் பார்ப்பனர்களெல்லாம், தங்கள் அக்கிரகாரங்களையே விட்டுப் போய்விட்டார்கள்; எங்கே பார்ப்பன ஆதிக்கம் இருக்கிறது என்று கேட்கிறார்! ஆனால், மிகப் பெரிய அதிகாரிகள், அமைச்சர்களையும் நெறிப்படுத்தும் அரசுச் செயலாளர்கள், பெரும் நிறுவனப் பொறுப்பாளர்கள் எல்லாம் யார்? பெரும்பாலும் அவாள்தானே!
இன்று டில்லியிலே இருந்துகொண்டு 60 கோடி மக்களையும் ஆட்டிப் படைப்பது பார்ப்பன பனியாக் கூட்டம்தானே! வெள்ளையனை மிரட்டியே அவர்கள் தங்களின் தனித் தன்மையை, தலைமையை அன்றே வலுவாக்கிக் கொண்டதால் தானே, இன்றும் ஏதும் செய்ய மாட்டாதவர்களாய் நாம் இருக்கிறோம்!
இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்றும் எதிரணியில் அவர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள்! அனைத்திந்தியக் கட்சிகள், இயக்கங்கள் அனைத்தின் தலைமையும் இன்று அவர்கள் வசம்தான்!
பார்ப்பனப் பிரிவிலே அனைத்திந்தியத் தன்மை உள்ளது! அவர்கள் அனைத்திந்திய அளவில் திருமண உறவுகள் வைத்துக் கொள்ள முடியும்! அவர்கள் குல முறை அப்படி அமைந்துள்ளது. ஆனால், நம்மவர்கள், ஒரு வட்டம், ஒன்றரை வட்டம், ஒரு மாவட்டம், அரை மாவட்டம் என்ற அளவிலான ஜாதிகளில்தான் கட்டுப்பட்டிருக்கிறோம்.
நம்மில் ஒரு ஜாதியார் ஓரிரு உரிமைகளுக்காகப் போராடினால், நம்மில் உள்ள மற்ற அனைத்து ஜாதியினரையும், உரிமை கேட்பவர்களின் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிட்டு விடுகின்றனர்! இப்படி, எல்லா மக்களையும் சிறுபான்மையினராக்கி, அவர்களின் உரிமை எண்ணங்களைத் தோற்கடிக்க அவர்களால் முடிகிறது.
கூறுபட்டோம்! கூறுகெட்டோம்!
நான் முதலிலேயே கூறினேன்; செட்டியார், முதலியார் என்பன ஜாதிகளல்ல! கொள்வினை, கொடுப்பு வினைக்கான உறவு வட்டம்தான் ஜாதி என்பது! நம்மிடையே இந்த ஜாதி வெறியை வளர்ப்பதன் மூலம் அவர்கள் தங்களின் தலைமையை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள்! ஒவ்வொரு ஜாதியும் மற்ற ஜாதிகளோடு ஒப்பிடும்போது, தனித்தனியே அவை சிறுபான்மை ஆகிவிடுவதால், பார்ப்பனர்களை யாரும் ஒன்றும் செய்ய முடிவதில்லை.
இன்று வரை, சட்டப்படி நாம் சூத்திரராகவே இருக்கிறோம்! அதற்கேற்றபடி நம் உரிமைகள் மிகக் குறைவானவை! கிறித்துவத்திற்குப் போனாலும் கூட நம் சூத்திரத் தன்மை சட்டப்படி நம்மைவிட்டு நீங்குவதில்லை! இது உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே கூறப்பட்டுள்ளது! ஒருவன் இம்மதத்தை விட்டு வெளியேறிவிட்டுத் திரும்பவும் இந்து மதத்திற்கே திரும்புவானெனில், அவன் வேற்று மதத்திலிருந்தபோது இருந்த ஒளி மறைப்பு (கிரகணம்) விடுபட்டதுபோல், அவன் பழையபடி தன் ஜாதியானாகவே ஆகிறான் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
பாராளும் வகுப்பு பணக்கார வகுப்பு
இப்படிப்பட்ட நமது நிலைக்குக் காரணம், நாம் பொருளியல் வகையிலும் அவர்களிடம் சிக்கிக் கொண்டிருப்பதுதான்.
சிறு வாணிகர்கள் எல்லாம் பெரு வாணிகர்களின் பிடியில் அகப்பட்டுள்ளார்கள்! எல்லாப் பெருவாணிகமும் இந்தியாவில் ஒரு நூறு குடும்பங்களின் கைகளில்தான் உள்ளன!
எடுத்துக்காட்டாகக் கடலை வாணிகத்தை எடுத்துக் கொள்வோம். இன்று மணிலாவின் விலையைத் தீர்மானிக்கும் நிலை பம்பாய் வாணிகருக்குத்தான் இருக்கிறது! பிவந்தியிலே கலகம் என்று எடுத்துக் கொண்டால், நம் பகுதியிலிருந்து செல்லவேண்டியிருப்பதான நூல் செல்ல இயலாமல் நாம் பாதிக்கப்படுகிறோம். முற்றுரிமை (ஏகபோகம்) ஆக்கப்பட்ட பொருளியல் அமைப்பின் காரணமாக இந்த நாட்டினுடைய பொருளியல் திறத்தன்மை நலிவுற்றுள்ளது. சுமார் 50,000 உரிமங்களை வாங்கி வைத்துக்கொண்டு வேண்டுமென்றே பேசாமல் இருக்கிறார்கள். யார் கேட்க முடியும்? பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையோரைப் பணக்காரர்கள் விலைக்கு வாங்கி விடுகிறார்கள்.
இந்த அரசு அமைப்பே பணக்காரர்களுக்குச் சார்பான அரசமைப்பாகும்! இங்கே கீழே இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லை! ஆனால் மேலே செல்லச் செல்ல அதிகாரம் திரண்டு பெருகிச் செல்கிறது! இங்கே உண்மையான ஆட்சியாளர்கள் யார் தெரியுமா? பணக்கார வகுப்பின் கையாட்களான வட்ட ஆட்சியாளர், மாவட்ட ஆட்சியாளர், காவல்துறை அதிகாரிகள் போன்றவர்களே! பணக்கார வகுப்பின் விருப்பத்திற்கு மாறாக யாரும் எதையும் இங்கே செயலாக்கிவிட முடியாது! மாறாகச் செயல்படும் அதிகாரி மரியாதையோடு வாழமுடியாது!
ஒருமுறை காமராசர் கூறினார்: நாம் பணக்காரனுக்கெல்லாம் வரிபோட்டுப் பிடுங்கி விடுகிறோமே, எப்படி ஒருவன் மேலும் பணக்காரன் ஆக முடியும்? என்று கேட்டார். ஆனால் உண்மை என்ன?
ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் டாட்டா, பிர்லா போன்றவர்களுக்கு ஆதாயம் கூடிக்கொண்டே வருகிறது. தலைவர்கள் கூறுவதுபோல் ரூபாய்க்கு பதினைந்து அணா வரிப்போட்டிருந்தால் இந்த ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டா?
எனவே, இன்றுள்ள அரசமைப்பு பணக்கார வகுப்பின் நன்மைக்கு எதிராக நடக்கும் என நாம் எதிர்பார்க்கவே முடியாது! உண்மையில் இந்த அரசை இயக்குபவர்களே அவர்கள்தாம்.
அதிகார வகுப்பும் அக்கிரகாரச் செழிப்பும்
இன்றைக்குத் தமிழ்நாட்டின் அதிகாரம் ஏறத்தாழ சில நூறு பேர்களின் கைகளில் மட்டுமே உள்ளது. இவர்களிடம் அதிகாரங்கள் மையம் கொண்டுள்ளன.
காவலர் தலைமைக் காவலருக்கு வணக்கம் போடுவது போலவும், அவர் துணை ஆய்வாளருக்கு (சப் இன்ஸ்பெக்டர்) வணக்கம் போடுவது போலவும், அவர் ஆய்வாளருக்கு வணக்கம் போடுவது போலவும் அதிகாரம் மேலே திரண்டு திரண்டு செல்கிறது. கடைசியில் பார்த்தால், ஆட்சி பெருந்தொழில் முதலாளிக்குக் கட்டுப்படும்; மற்றும் சங்கராச்சாரிக்குக் கட்டுப்படும். மற்றவர்களின் நன்மையைக் கருதிப் பார்க்கவும் முன் வராது. இவர்கள் இருவரும் மக்களின் எதிர்முகாமின் தலைவர்கள்.
நம்முடைய அமைச்சர்கள் யாவரும் ஓர் இடைக்கால ஏற்பாட்டின் கீழ் கோப்புகளில் கையெழுத்திடும் ஆட்களே! இந்த ஆட்கள் நிலை இல்லாதவர்கள்! ஆனால் நிலையான உயரதிகாரிகளும், அவர்களை நடத்தும் பண ஆளுமைக் கூட்டமும் மட்டுமே நிலையான ஆட்சியாளர்கள்! இதில் நீதித்துறையும் சேர்ந்ததுதான்!
இந்த அதிகார வகுப்பு, பணக்கார வகுப்பு இரண்டிலுமே பார்ப்பனர் நிறைந்துள்ளனர் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது! வருமான வரி அதிகாரத் துறை யார் கையில் உள்ளது? அய்யருடைய கையில் தான்!
அந்தக் காலத்திலே மதத்தைக் காட்டி மக்களை மிரட்டினான்! இன்று அதிகாரிகளைக் காட்டி மிரட்டுகிறான்! அவன், ஏன் உண்மையை மக்களிடமிருந்து மறைக்கிறான்? மண்டல் குழு அறிக்கை போன்றவை வெளிவராமல் தடுக்கப்படுவது ஏன்? ஊராட்சித் தேர்தல் முதல் பாராளுமன்றத் தேர்தல் வரை குடும்பங்களும் ஊர்களும் பிளவுபட்டுப் போராடிச் சிலரை மக்கள் பேராளர்கள் (பிரதிநிதிகள்) என்று பொய்யான பட்டஞ்சூட்டி அனுப்பி வைப்பது எதற்காக?
மக்களால் பதவிக்கு வந்து, மக்களை நினைக்காமல் கொள்ளையடித்துச் சுருட்டிச் செல்லும் இவர்கள் குறுங்கால ஆட்சியாளர்கள்! நிலையான ஆட்சியாளர்கள் அய்யர்களே! அவர்களின் பின்னால்தாம் நம்
அய்.ஏ.எஸ்.களும் அய்.பி.எஸ்.களும்!
இன்று படித்தவனும் பணக்காரனும் மக்களின் மூளையை ஆளுமை கொள்கிறார்கள்! மதவாதி நெஞ்சத்தை ஆளுமை கொள்கிறான்! வாணிகன் வயிற்றின்மீது ஆளுமை கொள்கிறான்! உடலின் மேல் அரசன் ஆளுமை செலுத்துகிறான்! இந்த நால்வகை ஆளுமையிலிருந்து ஒருவரின் உடலும் உள்ளமும் தப்ப முடியாது.
எனவே, இவர்களை நீக்க வேண்டுமானால், இந்த அமைப்பையே மாற்ற வேண்டும். இந்த அமைப்பினுள் அமைச்சரவைக்குப் போனால் அதிகாரிகளுக்கும் அய்யர் கும்பலுக்கும் உடைமையாளனுக்கும் தான் நன்மை! மக்களுக்கு இருக்க முடியாது!
ஏதும் இல்லாத மக்கள் - எல்லாம் உடைய செல்வர்
இன்று மக்களுக்கு உண்மையான எந்த அதிகாரமும் இல்லை! வாக்குச் சீட்டுப் போடுவதற்கு மட்டுமே மக்களுக்கு அதிகாரம் உள்ளது. பொருளியலை வைத்திருக்கும் பிர்லா கூட்டத்திற்கும் சனாதனம் பேசும் சங்கராச்சாரி கூட்டத்திற்குமே அதிகாரங்கள் உள்ளன! இன்றைய தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், பணக்காரனிடம் போய் தேர்தல் செலவுக்கு இரந்து நின்றாக வேண்டும்! எனவே பணக்காரனின் ஏவல்படி எல்லாம் நடந்தாக வேண்டும்! பணக்காரனிடம் இரந்து பணம் பெற்று வெற்றி பெறுபவர்கள் எப்படிப் பணக்காரனை ஒழிக்க முடியும்? இன்று தேர்தல்களில் ஓர் ஆளுக்குப் பல இலட்சம் செலவாகின்றது. இந்தத் தொகையைச் செலவு செய்து வென்று வருபவன் ஊழலை ஒழிக்க எப்படி நினைக்க முடியும்?
செழிப்பூட்டப்படும் சீர்கேடுகள்
ஊழல் என்பது மக்களுக்கு ஊட்டப்படுகிறது! பொதுத் தன்மையாக்கப்படுகிறது! கட்டை வண்டி கொண்டுவந்த வேட்பாளரைப் பார்த்து, என்னய்யா? கார் கொண்டு வரக்கூடாதா? என்று வாக்காளர் கேட்கிறார். கட்டை வண்டி அவருடைய பார்வையில் தரங்குறைந்து விடுகிறது! கார் கேட்பதன் மூலம் சீர்கேட்டை, ஊழலைத் தொடங்கி வைக்கிறார்!
நம்முடைய கல்வி நிலையங்களோ, அரசோ மக்களுக்குச் சமன்மை உணர்வை ஊட்டத் தவறுகின்றன. ஏற்றத் தாழ்வை, வறட்டுப் பெருமையை, தன்னுயர்வு மனப்பாங்கைத்தான் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்கிறார்கள்! உயர் தகுதிக் காய்ச்சல் என்பது இப்போது பெருகிவிட்டது. எம்.எல்.ஏ. பாணித் துண்டுகளுடன் இப்போது பெரிய ஆட்கள் பெருகி விட்டார்கள். வாங்க தலைவரே என்று ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வது இப்போது வழக்கமாகி விட்டது. தோழமை உணர்வுக்கு மாறாக தலைமை உணர்வு பலரிடமும் வளர்ந்து விட்டிருக்கிறது.
எனவே, ஆட்சியைப் பிடிப்பது எளிது, ஆனால் சமன்மை உணர்வை மக்களிடம் உருவாக்குவதுதான் கடினமானது. மக்களிடமே சுரண்டலை ஆதரிக்கும் மனப்பாங்கு பெரிதும் நிலைபெற்றிருப்பதுதான் இந்த மண்ணின் தனித்தன்மைகளில் ஒன்றாகும்.
நமது அமைப்பு
இன்றைய பொருளியல் அமைப்பே, பெரிய மீன் சிறிய மீனை விழுங்குகின்ற அமைப்பே ஆகும். சிறிய தொழில் முனைவோர்களெல்லாம், நசிந்து பெரு முதலாளிகட்குக் கட்டுண்டு போகும் நிலைமை உள்ளது. இத்தகு பெரிய மீன்களைத்தான் இந்த நாட்டின் சங்கராச்சாரி கும்பல் எப்போதும் சார்ந்து நின்று அறிவுரை கூறிக்கொண்டிருக்கும்.
இங்கே மாநில அரசு என்பது ஒரு நகராட்சிதான்! அரசு என்பது உண்மையில் மய்ய அரசுதான்! இன்று அதிகாரங்களெல்லாம் ஒவ்வொன்றாக மய்யத்தில் குவிந்து வருகின்றன! டில்லியில் உள்ளவர்கள்தாம் பெரிய மேய்ப்பாளர்கள், இவர்கள்தாம் அரசின் சான்றாளர் ஆவர். இவர்களையும் மேய்ப்பவர்களே மேய்ப்பரின் மேய்ப்பர்கள்!
உறவாடும் மக்கட் பகைகள் - தெளிவுபெற வேண்டிய மக்கள்
ஆர்.எஸ்.எஸ். வளர்வதற்கு என்ன காரணம்? ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் சுரண்டல் தடையின்றி நடைபெறத் துணை செய்பவை! எனவே பணக்காரர்கள் இவற்றை ஆதரிக்கிறார்கள்! எவ்வளவு முட்டாள் பணக்காரனாக இருந்தாலும் பார்ப்பானையே வேலைக்கு வைத்துக்கொள்ள விரும்புகிறான். மக்களை ஏய்ப்பதற்கும் சுரண்டுவதற்கும் பார்ப்பான்தான் மெய்யாக உதவுவான் எனப் பணக்காரர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்! ஆகையினால், எந்த முற்போக்கு இயக்கமும் பார்ப்பனரை (ஒரு வகுப்பு என்ற முறையில்) உள்ளே விடக் கூடாது.
எனவே, நாட்டுப்புற இளைஞர்கள் மக்களின் நண்பன் யார், பகைவன் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்! நகரத்தை நம்ப வாய்ப்பில்லை? நகரம் அநீதிகளின் உறைவிடம் ஆகிவிட்டது! மக்களுக்கு நீதி கிடைக்க நலிவுண்ட மக்களும் நாட்டுப்புற மக்களும் ஒன்று திரள வேண்டும்!
மக்களின் மேய்ப்பர்கள் யார்? யார்? பார்ப்பான் (புரோகிதர்), பணக்காரன் (பூர்சுவா), பதவிக்காரன் (பியூரோகிரேட்), படிப்புக்காரன் (எலைட்) ஆகியவர்களே! இதனை நாம் விளங்கிக் கொள்வது நல்லது.
நமது மண்ணும் நம் வழிகாட்டிகளும்
அய்ரோப்பிய நாடுகளிலெல்லாம் மேல், கீழ் என்னும் இரண்டே தன்மைகள் பொருளியல் அடிப்படையில் உள்ளன! ஆனால் இங்கோ, அவை படிக்கட்டு முறையில் அமைந்துள்ளன. தன்னைவிடச் செல்வத்தில் சற்று உயர்ந்தவனை, தாழ்ந்தவன் மிக உயர்வாகக் கருதுகிறான். இந்த மனநிலைதான் இங்கே அடிமைத்தனத்தை ஆழமாக நிலை நிறுத்துகிறது. இந்தப் படிக்கட்டு முறை அடிமைத் தனத்தின் தன்மையைக் கண்டறிந்தவர்கள் தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் ஆவர்.
அம்பேத்கர் மாபெரும் குமுகாய அறிவியல் மேதை! நேரு முதலானவர்கள் அறிவு நிலையில் அவரை அணுகக்கூட இயலாது. தாழ்த்தப்பட்ட மக்கள் நிலையிலிருந்து குமுகாய விடுதலை பற்றிச் சிந்தித்தவர் அவர்தாம். எனவே அவருடைய நோக்கில்தான் மக்கள் விடுதலைப் போராளிகள் சிந்திக்க வேண்டும்.
ஏற்றத்தாழ்வின் தோற்றம்
ஏற்றத் தாழ்வு நிலையைப் பெயரிலேயே பார்க்கலாம் குப்புசுவாமி (முரயீயீரஉயஅல) வருகிறார் என்றால், வருபவர் மேல் தட்டுக்காரர்; அல்லது அய்யர் என்பது பொருள்! குப்புச்சாமி வருகிறான் என்றால் நடுத்தர வகுப்பின் உழைப்பாளி என்பது பொருள்! குப்பன் வருகிறான் என்றால் வருபவன் நலிந்தவன், தாழ்த்தப்பட்டவன் என்பது பொருள்!
பொதுவாக வாக்காளர் பெயர் பட்டியலில், பெயர்களைப் பார்த்தாலே, இவர்கள் என்ன ஜாதியார், என்ன வாழ்க்கை நிலையினர் என்பதைக் கூறிவிடலாமே! இது நாமாக ஏற்படுத்திக் கொண்டதா? இல்லை! உதைத்து வதைத்து ஏற்படுத்தப்பட்ட ஒரு குமுகாயக் கட்டுமானம் இது!
நலிவுற்ற நிலை - நலம் பெற வழி
இன்று வரலாறே மக்கள் குமுகாய வரலாறாக இல்லை! அரசர்களின் வரலாறாகவே இருக்கிறது! நம்முடைய சிந்தனை முறையே புற அடையாளங்களைப் பார்த்து ஏமாறுவதாக இருக்கிறது! எந்த ஒன்றின் உள்நோக்கத்தையும் அறிய மாட்டாதவர்களாக நாம் இருந்து வருகிறோம்! எனவேதான் நாம் வேடங்களையும் முழக்கங்களையும் பார்த்தே ஏமாந்து வீழ்ச்சி அடைகிறோம்!
ஒவ்வொருவரும் மற்றவருடைய மனித உரிமைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களாலும் நமது மனித உரிமைக்கு ஒப்புதல் கிடைக்கும்.
ஜாதி, மத வேறுபாடுகள் நீங்குவதற்குக் கலப்புத் திருமணம் போன்றவற்றை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்! மதம் போன்றவை வீட்டினுள் அடங்கிக் கொள்ள வேண்டும்! குடியுரிமை அனைவருக்கும் பொதுவாக வேண்டும்! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருப்பது பொருளியல் சிக்கல் மட்டும் அன்று. மனிதர் நாம் என்னும் உணர்வே அவர்களுக்கு ஊட்டப்பட வேண்டி உள்ளது. பெருவாரியான மக்களை வலுவற்றவர்களாக, மனத்தாலும் உடலாலும் வைத்திருக்கத்தான் காந்தி மகிமை, நேரு மகிமை, கள்ளுக் கடை, சாராயக் கடை திறப்பு, மதக்கலவரம், பரிசுச் சீட்டு முதலிய அனைத்தும் உயிர் ஊட்டப்பட்டு உலவ விடப்படுகின்றன! மக்களுக்கு நம்பிக்கை தோன்றாமல் சிதைவதற்குத்தான் ஜோதிடர், மதத் தலைவர்கள் பெருகுகின்றனர்!
அறிவை அடிப்படையாகக் கொண்ட பகுத்தறிவுச் சிந்தனை முறை தோன்றினால் இவை அழியும் இந்த அழிவால் பொதுவுடைமை என்னும் சமுதாயம் மலரத் தொடங்கும்!
இந்தியாவைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களும், மலைவாழ் மக்களும் பிற்படுத்தப்பட்டோரில் ஏழை மக்களும் ஒன்று சேர்ந்தாக வேண்டும். கல்வி முதலான சலுகைகள் வழங்கப்படுவதன் மூலம், இவர்களுக்கு விடிவு பற்றிய ஒரு நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும்! எல்லோருக்கும் இத்தகு சலுகையால் நன்மை ஏற்படும் வாய்ப்பு இல்லையென்றாலும், தன்னம்பிக்கை தோன்றும் வாய்ப்பை இவை உருவாக்குகின்றன!
மேய்ப்பர்களின் வேடங்களைத்தான் என்னென்பது?
சான்றியம் கூறுபவர்களை வழக்கு மன்றத்திற்கு அழைத்து வந்தால், பெட்டி ஏறியதும் அவருக்கு எல்லாம் மறந்துவிடுகிறது! ஏன்? அங்குள்ளவர்களின் உடையும் தோற்றமும், மேல் கீழான இருக்கைகளும், மொழியும் அச்சமூட்டுகின்றன. எனவே சொல்ல வந்ததை மறந்து விடுகிறார்! அரசு அலுவலகங்கள் மக்களை அச்சுறுத்தும்படி இருக்க வேண்டும் என்று அரசே கருதித்தான் அதற்குத் தக்கவாறு அரசு கட்டடங்களைக் கட்டியுள்ளது!
இவை எல்லாம் மேய்ப்பவரின் ஏற்பாடுகள்! இவர்களின் ஏற்பாடுகள் சிதைய வேண்டும்! யாவும் மக்களுக்கு உரிமை உடையவை என ஆக வேண்டும்! மேய்ப்பவர்களும் மேய்க்கப்படுபவர்களும் இல்லாத வாழ்க்கை நெறி உருவாக வேண்டும்! இதைத் தடுக்கும் புரோகித, பணக்காரக் கும்பலின் கூட்டுச் சதி உடைத்து நொறுக்கப்பட வேண்டும்!
நூல் - மன்னர்களும் மனு தருமமும்
ஆசிரியர் - கரூர் பி.ஆர்.குப்புசாமி பி,ஏ.பி.எல்.
பி.ஜி.டிப்.ஆந்த்ரோ
Comments
Post a Comment